Ad

சனி, 16 செப்டம்பர், 2023

``அதிமுக-போல் பல அணிகளாக இல்லாமல், `இந்தியா' கூட்டணிபோல வாழுங்கள்!" - மணமக்களை வாழ்த்திய உதயநிதி

கோவை தி.மு.க மாவட்டச் செயலாளரின் இல்லத் திருமண நிகழ்விற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அப்பொழுது பேசிய அவர், "நேற்றைய தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முக்கியமான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஆயிரம் ரூபாய், வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாயை முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். அதிலும் அத்திட்டத்தின் பெயர் கலைஞரின் பெயரில் அமைந்துள்ளது. அது உதவித்தொகை அல்ல. மகளிருக்கான உரிமைத்தொகை.

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது. நூறு வருடத்திற்கு முன்பு வரை பெண்களுக்கு எல்லாம் படிப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால், இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் அதையெல்லாம் உடைத்துள்ளது. தாய்மார்கள் நீங்கள் எல்லோரும் உணர வேண்டும். மகளிருக்காக, மகளிர் விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக இன்றும் திட்டங்களைத் தீட்டி, பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

ஆட்சியமைத்தவுடன் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டம். இதன் மூலம் ஒவ்வொரு தாய்மாரும் மாதந்தோறும் ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். இப்பொழுது மகளிர் உரிமைத்தொகை. ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மகளிருக்கு இந்தத் திட்டம் சென்றடைந்துள்ளது" என்றார்.

மேலும் பேசியவர், "அ.தி.மு‌.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் 'நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்' என்று. விரைவில் அவர்தான் அ.தி.மு.க-வைப் பிடிக்கப்போவதாக வேறு கூறியுள்ளார். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க-வில் இன்னொரு அணி உள்ளது. அது பா.ஜ.க அணி. எனவே, மணமக்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு மாமியார் அணி, நாத்தனார் அணி எனப் பிரிந்து நிற்காமல், ஒற்றுமையோடு, நம்முடைய இந்தியா கூட்டணி போல் வெற்றி அணியாக இருக்கவேண்டும்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-udhayandhi-stalin-attends-a-marriage-function-at-kovai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக