Ad

சனி, 16 செப்டம்பர், 2023

வறுவல், பாஸ்தா, பெப்பர் மசாலா.... காளானில் கலக்கல் வீக் எண்ட் விருந்து!

அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள்.

காளான் வறுவல்

தேவையானவை:

காளான் - 200 கிராம்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 4

பிரியாணி இலை - ஒன்று

சோம்புத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 6 பல்

இஞ்சி - அரை அங்குலத் துண்டு

முந்திரிப்பருப்பு - 6

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு

காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காளான் வறுவல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்புத்தூள், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, நசுக்கிய இஞ்சி, பூண்டு தாளித்து வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் நீளவாக்கில் பாதியாக நறுக்கிய காளான் சேர்த்து சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

அரை கப் தண்ணீர் ஊற்றி காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். நன்றாக சுருண்டு வரும்போது மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

காளான் லசாகினியா

தேவையானவை:

காளான் - 200 கிராம் (மிகவும் சிறிதாக நறுக்கவும்)

நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்

நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்

தக்காளி - 6 (நறுக்கவும்)

மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஒரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - அரை ஸ்டீபூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

பூண்டு - 6 பல் (நறுக்கவும்)

பீட்சா சாஸ் - 8 டேபிள்ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்

மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன்

துருவிய சீஸ் - 3 கப்

உப்பு - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்

லசாகினியா ஷீட் தயாரிக்க:

மைதா - ஒன்றரை கப்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

வெஜிடபிள் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - அரை டேபிள்ஸ்பூன்

வெதுவெதுப்பான பால் - ஒரு கப்

அலங்கரிக்க:

ஒரிகானோ - சிறிதளவு

காளான் லசாகினியா | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை :

மைதா மாவை எண்ணெய், வெண்ணெய், அரை டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி பரோட்டா மாவைப் போல் நன்றாக அடித்து மாவு மென்மையாகும் அளவுக்குப் பிசையவும். மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஈரத் துணியால் மூடி வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், தக்காளி, குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து மிளகுத்தூள், ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து ரொம்பவும் வதக்காமல், கிரிஸ்பியாக இருக்கும்படியாக லேசாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

மைதா மாவை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நம்மிடம் உள்ள பேக்கிங் பான் (pan) வடிவத்துக்கு மெல்லிய ஷீட்களாக உருட்டி சற்றே காற்றில் உலர வைக்கவும்.

இப்போது பேக்கிங் பான் (baking pan) மேற்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் பரப்பவும். அதன் மேல் ஒரு பிரஷ்ஷினால் ஆலிவ் ஆயில் தடவவும். அதன் மேல் நாம் தயாரித்த மூன்று ஷீட்களில் ஒன்றைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ், 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ், ஒரு லேயர் நாம் கடாயில் தயாரித்த ஃபில்லிங், அதற்கு மேல் ஒரு கப் துருவிய சீஸ் போடவும். மீண்டும் இரண்டு ஷீட் லேயர்களையும் இதே வரிசையில் பரப்பி கடைசியில் உள்ள சீஸ் லேயர் மேல் ஒரிகானோ தூவவும். இதை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) வைக்கவும். 200 டிகிரி செல்ஷியஸில் 20-ல் இருந்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

காளான் பாஸ்தா

தேவையானவை :

காளான் - 200 கிராம்

பாஸ்தா - 100 கிராம்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்

வெதுவெதுப்பான பால் - ஒரு கப்

நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்

நறுக்கிய தக்காளி - ஒரு கப்

நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்

துருவிய சீஸ் - ஒரு கப்

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டேபிள்ஸ்பூன்

ஒரிகானோ - ஒரு டீஸ்பூன்

காளான் பாஸ்தா | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை :

பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும்வரை வேகவைக்கவும். ஒரு கடாயில்

2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், குடமிளகாய், வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து, சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ, மிளகுத்தூள், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து சற்றே கிரிஸ்பியாக இருக்கும் வரை வதக்கவும். இறக்கும்போது வெதுவெதுப்பான பால் கலந்து நாம் வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் பாஸ்தாவையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து இறக்கவும்.

பேக்கிங் பானில் (baking pan) அடிப்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் பாஸ்தா கலவையை ஊற்றவும். அதன் மேல் துருவிய சீஸைப் பரப்பவும். இதை அவனில் (oven) 20 நிமிடங்கள் 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் வைத்து எடுக்கவும்.

காளான் பெப்பர் மசாலா

தேவையானவை:

காளான் - 200 கிராம்

ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - 3 (நறுக்கவும்)

நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்

பூண்டு - 10 பல்

இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 4

பிரியாணி இலை - 2

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு

காளான் பெப்பர் மசாலா | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை, சோம்புத்தூள், நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், காளான், குடமிளகாய், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் சிறுதீயில் எண்ணெயிலேயே வறுத்து எடுக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித்தழை தூவவும்.



source https://www.vikatan.com/food/recipes/mushroom-weekend-special

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக