Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

கலைஞர் 100: செப்., 20-ல் பிரமாண்ட நூல் வெளியீட்டு விழா; முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் பங்கேற்பு!

`கலைஞர் கருணாநிதி'... இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல் மையம்கொண்டிருந்தது. திரைத்துறையில் வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனவும், அரசியலில் பேச்சாளர், களச்செயற்பாட்டாளர், கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனவும்...

நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கும் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்

பத்திரிகை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் தனித்து விளங்கி வெற்றிகண்டவர் கலைஞர் கருணாநிதி. தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்விகளைக் கடந்து, தமிழ்நாட்டின் அரசியல் லகானைத் தன் கையில் வைத்திருந்து செயலாற்றியவர். அவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாகத் திகழ்ந்தவர்.

அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொகுக்கப்பட்டு `கலைஞர் 100' என்ற நூல் வெளியிடப்படுகிறது. எதிர்வரும் 20-ம் தேதி மாலை 5:30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்

இந்த விழாவில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், உலக நாயகனுமான நடிகர் கமல்ஹாசன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்த, தி இந்து குழும இயக்குநர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்க்குநருமான மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலர் வர்த்தக - தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எல்.ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள். ஆனந்த விகடனின் ஆசிரியர் தி.முருகன் நன்றியுரை வழங்கவிருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக!



source https://www.vikatan.com/literature/books/kalaingar-100-book-release-function-at-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக