Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

நாமக்கல்: `ஷவர்மா, கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிக தடை!' - காரணம் இதுதான்!

நாமக்கல் ஏ.எஸ் பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கலையரசி, பூபதி ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 16-ம் தேதி இரவு சுஜாதா தன் மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ், அண்ணி கவிதா ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அந்த உணவை அனைவரும் வீட்டில் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரத்தில், கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியுடன் உணவு சாப்பிட்ட அவரின் தாய், மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அந்த ஹோட்டலுக்கு உணவு வாங்கச் சென்ற அதே நாள் இரவு அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 13 மருத்துவக் கல்லூரி மாணவிகள், கர்ப்பிணி உள்ளிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. இதையடுத்து, அந்த ஹோட்டலுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, அங்கு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உமா சோதனை

இதைத் தொடர்ந்து, ஹோட்டலிலுள்ள பொருள்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஹோட்டலிலுள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருள்கள் அழிக்கபட்டன. அந்த ஹோட்டலுக்கு இறைச்சி சப்ளை செய்த கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று உயிரிழந்த நிலையில், அந்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தெரிவித்தனர். துரித உணவு சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/health/shawarma-and-grill-chicken-sale-temporarily-banned-in-nammakkal-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக