Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

`வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்' எந்த ராசிக்குத் திருமண யோகம்?

ஒருவரின் வாழ்வில் சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஜாதகருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த ஜாதகர் அற்புதமான பலன்களை அனுபவிப்பார்.

அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும் சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். காதல், திருமணம், குழந்தைப்பேறு எனப் பலவும் சுக்கிரன் பலமாக இருந்தால் தேடிவரும். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். அவரே வக்கிரகதிர்யில் சஞ்சாரம் செய்யும் போது பலன்கள் வழங்குவதிலும் மாற்றம் இருக்கும். தற்போது சுக்கிரன் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். வரும் 30 -9 - 2023 அன்று அவர் வக்கிர நிவர்த்தி அடைந்து கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் அடியெடுத்துவைக்கிறார்.

அதன்பின் நவம்பர் மாதம் 1- ம் தேதிவரை சிம்மத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த நிலையில் சுக்கிரபகவானின் நேரான சஞ்சாரம் யாருக்கெல்லாம் திருமண யோகத்தை வழங்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

சுக்கிரன்

புரட்டாசியில் திருமணம் பேசலாமா?

சுக்கிரபகவான் புரட்டாசி மாதம் 13 ம் தேதி சிம்மத்துக்குப் பெயர்ச்சி அடைகிறார். பொதுவாகப் புரட்டாசி மாதம் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதில்லை. ஆனால் திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் செய்யலாம். பெண் பார்க்கலாம். ஜாதகம் பரிமாறலாம். இப்படித் திருமணம் குறித்த பல விஷயங்களை முடிவு செய்யலாம். முகூர்த்தத்தை ஐப்பசி, கார்த்திகை, தை மாதத்தில் வைத்துக்கொள்ளலாம். எனவே சுக்கிரன் கால புருஷத்தத்துவத்தின்படி ஐந்தாம்வீடான சிம்மத்தில் சஞ்சாரம் செய்யும்போது எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதை வைத்து இந்த மாதம் திருமணம் கைகூடிவர எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வாய்ப்பு உண்டு என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.

மேஷம்

இந்த சுக்கிரப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களைத் தரும். 5ம் இடமான சிம்மத்துக்கு வரும் உங்கள் களத்திரகாரகன் சுக்கிரனை குரு பார்க்கிறார். அக்டோபர் 8 ம் தேதி கேது பெயர்ச்சி நடந்து அவரும் 6 ம் வீட்டில் அடியெடுத்துவைக்க இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட சூழல் திருமணம் கனிந்துவர ஏற்றது. ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று எடுத்துவைத்தவர்கள் அதை நிறைவேற்ற இது ஏற்ற காலம். திருமணப் பேச்சுவார்த்தைகளை தாராளமாக மேற்கொள்ளலாம் சாதகமாகும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்பட உகந்த காலம் இது. எனவே அதுதொடர்பான மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மன் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.

ரிஷபம்

ரிஷபராசிக்காரர்களுக்கு 6 ம் வீட்டுக்கு உரியவர் சுக்கிரன். அவர் 4 ம் வீட்டில் அமர்கிறார். எனவே திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டினால் மட்டுமே சுபம் கைகூடிவரும். பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்படலாம். அனைத்தையும் சாதுர்யமாக சமாளிக்க வேண்டியது அவசியம். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். காதலுக்கு எஸ் சொல்லும் போது ஏற்கெனவே இருக்கும் காதலுக்கு நோ சொல்லும்போதும் நிதானம் தேவை. உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தால் பிற்காலத்தில் அதனால் பிரச்னைகள் வரலாம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை வழிபடுவது சிறப்பு

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் நன்றாகவே இருந்தாலும் 12 ம் வீட்டுக்குரிய சுக்கிரன் 3 ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தூக்கம் குறையும். அதனால் மனதில் லேசான பதற்றம் இருக்கும். திருமணம் குறித்த முடிவுகளுக்கு சம்மதம் தெரிவிக்கவோ மறுப்பு தெரிவிக்கவோ தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். அக்டோபர் 8 க்குப் பின் கேது 4 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நண்பர்கள் திருமண - காதல் வாழ்க்கையில் சரியாகத்தான் வழிகாட்டுகிறார்களா என்ற சந்தேகம் வரும். எனவே உங்களின் நலம் விரும்பிகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரை அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபடுவதும் தாமரைப்பூ சமர்ப்பிப்பதும் சிறப்பு.

பாரதி ஶ்ரீதர்

கடகம்

கடக ராசிக்கு இந்த சுக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்கும். இதுவரை திருமண வாழ்வில் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். இரண்டாம் வீட்டில் லாபாதிபதி தனவீட்டில் சஞ்சாரம் செய்வது சிறப்பு. புதிய திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் கைகூடும். நின்றுபோன திருமணம் மீண்டும் நடைபெற சாதகமான பேச்சுவார்த்தைகள் கிடைக்க வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம் : பார்வதி தேவியை மனதில் நினைத்து வெள்ளிக்கிழமை வீட்டில் நெய்விளக்கேற்றுவது நல்லது. சிவாலயங்களில் தாரைக்குப் பணம் செலுத்தி அர்ச்சனை செய்துகொள்வதும் சுபகாரியத் தடைகளை நீக்கும் எனலாம்.

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு ராசியிலேயே சுக்கிரன் இருப்பதால் சுகபோகமான வாழ்க்கை அமையும். புதிய காதல் மலரும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் திருப்தி தரும். திருமண யோகம் தேடிவரும். சிலருக்குக் குழந்தை பாக்கியமும் ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் அன்னதானங்கள் செய்வதும் நற்பலன்களை அதிகப்படுத்தும்.

சிம்மம்

கன்னி

கன்னி ராசிக்கு 12 ம் வீட்டில் அமர்கிறார் சுக்கிரன். செலவுகள் அதிகரிக்கும். அவற்றை சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. 7 ம் வீட்டுக்கு ராகு வருவதால் காதல் வாழ்க்கையில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாத பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் இது. திருமணம் கைகூடிவரும். என்றாலும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தவறான முடிவுகளைத் தவிர்க்க பெரியவர்களின் ஆலோசனை அவசியம். ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று நிற்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை,

பரிகாரம் : புதன்கிழமைகளில் பள்ளிகொண்ட பெருமாளை வழிபடுவது நல்லது.

துலாம்

ராசி அதிபதி சுக்கிரன் லாபத்தில் சஞ்சரிக்கும் இந்தக்காலகட்டம் துலாத்துக்கு மிகவும் அதிர்ஷட வாய்ப்புகளை ஏற்படுத்தும் ராசி நாதனையும் ராசியையும் குரு பார்க்கிறார். எனவே திருமண முயற்சிகள் கைகூடிவரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நிகழும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்தபடி வாழ்க்கைத்துணை அமைவார். குழந்தை பாக்கியம் அமையும்.

பரிகாரம் : சுவாதி நட்சத்திர நாளில் அல்லது பிரதோஷ தினத்தில் லட்சுமி நரசிம்மரை பானகம் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

விருச்சிகம்

10 ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் குரு ஆறாம்வீட்டில் அமர்ந்து பலன் தருகிறார். கேது பகவான் லாப வீட்டுக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் செய்யும் தொழில் அல்லது உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். கடல் கடந்து சென்று பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். திருமணத்தைப் பொறுத்தவரை எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும். வெளிநாடுகளில் வாழும் இளவயதைக் கடந்தவர்களுக்கு இப்போது திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நடைபெற வாய்ப்புண்டு. காதல் கைகூடும்.

பரிகாரம் ; வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவது சிறப்பு.

அன்னை காமாட்சி

தனுசு

பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் வழிபடும் பெண் தெய்வங்களின் அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கவும் நல்ல வசதிகள் சேரவும் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது சிறப்பு. கன்னிப்பெண்கள் வழிபாடு வீட்டில் இருந்தால் அதை வரும் மகாளயபட்ச காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. இதைச் செய்துமுடித்தாலே திருமணம் கைகூடிவரும். இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக மாறும்.

பரிகாரம் : வெள்ளிகிழமைகளில் விநாயகரையும் நாகரையும் வழிபடுவது சிறப்பு.

மகரம்

8 ல் சுக்கிரன் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. என்றாலும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் கைகூடும். தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உகந்த காலம். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் பாக்கியஸ்தானத்தில் கேது வந்துவிடுவதால் நற்பலனகள் விரைந்துகிடைக்கும். வீட்டில் சுமங்கலிப் பெண்களை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவதும் செந்நிற மலர்கள் சமர்ப்பிப்பதும் சிறந்த பரிகாரமாகும்.

கும்பம்

7 ம் வீட்டில் சுக்கிரம் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் திருமண யோகங்கள் கைகூடிவரும். காதல் வாழ்க்கையில் புதிதாக ஈடுபட இருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். தவறான நபர்கள் வாழ்க்கைத்துணையாக அமைந்துவிட வாய்ப்பிருப்பதால் மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். எனவே ஆலோசித்து முடிவெடுங்கள். திருமண முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் நிதானம் தேவை.

பரிகாரம் : வெள்ளீஸ்வரர் - காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கும் தலங்களைத் தேடிச்சென்று வழிபட்டுவருவது நல்லது.

மீனம்

மீனம்

6 ல் சுக்கிரன் அமர்வது மீனராசிக்கு நல்ல தனலாபத்தைக் கொடுக்கும். 3-க்கும் 8 -க்கும் உடையவர் 6 ல் அமர்வதால் வண்டி வாகனங்கள் மாற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. திருமணத்தைப் பொறுத்தவரை திருமண யோகம் கைகூடிவர வாய்ப்புண்டு. பேச்சுவார்த்தைகள் சாதகமாகும் என்றாலும் திருமணத்தைக் கார்த்திகை அல்லது தை மாதங்களில் முடிப்பதுவே நல்லது.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி நாராயணப் பெருமாளை மனதில் வழிபட்டு நெய்விளக்கேற்றி வாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/astrology/which-astro-sign-will-have-marriage-fortune

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக