Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

BJP - ADMK: `கூட்டணி முறிவு நிரந்தரம்தானா?' - சி.டி.ரவியின் ட்வீட் சொல்வது என்ன?!

அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணியில் இருந்தபோது, எக்கச்சக்கமான சலசலப்புகள் இருந்துகொண்டே இருந்தன. கூட்டணிக் கட்சிகள் என்கிற எல்லையைக் கடந்து, இரு கட்சி நிர்வாகிகளும் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். அதுவும் அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு சில சமயங்களில், எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பதில் விமர்சனங்கள் வைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையும் உருவானது. ஆனால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என அதிமுக அறிவித்த பின்பு, இரு கட்சிகளிடம் இருந்தும் எந்த சலனமும் இல்லாமல் மயான அமைதி நிலவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்

இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற முடிவை, கடந்த 25-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக எடுத்தது. புயலுக்கு முன் அமைதி என்பார்கள், ஆனால் இங்கோ, கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்து பெரிய பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது அதிமுக.

ஆனால் இம்முறிவை அறிவித்த கையோடு, பாஜக குறித்து யாரும் எந்த விமர்சனமும் வைக்க வேண்டாம் என்று வாய்மொழியாக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாம் அதிமுக தலைமை. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என யாரும் பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல கூட்டணி குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் தேசியத் தலைமை அறிவுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. கூட்டணி குறித்து தேசியத் தலைமை முடிவெடுக்கும் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி நிறுத்திக்கொண்டார் அண்ணாமலை. மற்ற முன்னணி நிர்வாகிகளும் கூட்டணிப் பற்றி கருத்துச் சொல்வதை தவிர்த்துவிட்டனர்.

ஆனால் அதிமுகவின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அண்ணாமலையின் மீதிருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கூட்டணி முறிவுக்காக அதிமுக கொடுத்திருந்த அறிக்கையும் அதனை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. பாஜகவின் தேசியத் தலைமையோடு தங்களுக்கு எந்த முரணும் இல்லை என்று ஏற்கெனவே அதிமுகவின் சீனியர்கள் பலர் சொல்லியிருக்கின்றனர்.

அமித்ஷா - நரேந்திர மோடி

தற்போதும் பாஜக மேலிடத்தின் மீதான மதிப்பின் காரணமாகவே, தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கருத்துச் சொல்ல வேண்டாம் என்று சீனியர்கள் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எனினும் அதிமுக-வின் முடிவு குறித்து பாஜக ஏன் பதில் சொல்ல மறுக்கிறது என்று குழப்பமும் நிலவியது. இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக-தான் அறிவித்திருக்கிறது. எங்கள் தலைமை அதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என்பதால் இந்த சலசலப்புகள் முடிந்து மீண்டும் ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் கூட்டணி குறித்து யாரும் எந்த விமர்சனங்களையும் வைக்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்கின்றனர். ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் தேசியத் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியை கடைப்பிடிக்கும் சூழலில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுகவை சீண்டும் விதமாக ட்வீட் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

“திருவள்ளுவர் மண்ணில் தாமரை மிகப்பெரிய அளவில் மலரும்” என்று அவர் மறைமுகமாக தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். “அதிமுக-வின் நிலைப்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். 25-ஆம் தேதி கே.பி.முனுசாமி பேட்டி கொடுத்தபோதே எங்களுடைய பதிலையும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் இருந்து அமைதியாக இருக்கச்சொன்ன ஒரே காரணத்திற்காக விமர்சிக்காமல் விட்டுவிட்டோம். கூட்டணி இருக்கும், உடையும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதை விட, எங்களுடைய தன்மானத்தைப் பற்றித்தான் முதலில் கவலைப்பட வேண்டும்.

எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அக்கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்கள் போல. அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. இப்போது எங்களுக்கும் கணிசமான வாக்கு வங்கி உருவாகிவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை புரிய வைப்போம். இதை உணர்த்தும் விதமாகத்தான் சி.டி.ரவியின் ட்வீட் இருக்கிறது” என்கின்றனர்.

கமலாலயம்

பாஜக சீனியர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தோம். “பாஜக தலைமையில் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும். அதிமுக தலைமையை ஏற்று கூட்டணியில் நாங்களும் ஒரு அங்கமாக இருந்தால் எப்படி தாமரை மலரும்? எனவே 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக சி.டி.ரவி பதிவிட்டிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்கின்றனர். இருப்பினும் கூட்டணி முறிவு முறிவுதான் என்பதை உணர்த்துகிறதா சி.டி.ரவியின் பதிவு என்ற குழப்பத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-the-alliance-break-permanent-what-does-ct-ravis-tweet-say

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக