Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: `கடவுளைப் போலவே கருணை கொண்டவர்களையும் தொழவேண்டும்!' - அதுவே என் ஆன்மிகம்!

கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுறது, விரதம் இருப்பது மட்டும் ஆன்மிகம் இல்லை. சக மனிதரை மதிப்பது, தன் மீது கருணையும் அன்பும் கொண்டவர்களை ஆராதிப்பது, இதுதான் ஆன்மிகம்.

அதை எப்போதும் செஞ்சுக்கிட்டே இருக்கணும் என்பதுதான் என் ஆசை. நான் நல்ல பாடகன் என்பதைவிட நல்ல மனுஷன்னு பேர் வாங்கணும். அதான் முக்கியம்!' என்றார் எஸ்.பி.பி.

இவர் குரலாலோ சாதனைகளாலோ மட்டும் நினைவு கூரத்தக்க மகத்தான கலைஞன் இல்லை. தனது கருணையாலும் பொறுமையாலும் இறைநிலையை எட்டிவிட்ட மஹான் இவர் என்றே சொல்லலாம். மக்களை மகிழ்விக்கவென்றே பிறந்த மகாமனிதன் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவரது சாதனைகள் 10 புத்தகங்களில் கூட அடக்கி விட முடியாத அளவுக்கு நீண்டவை. இங்கு அவற்றைப் பார்க்கப் போவதில்லை நாம்.

அது 1998-ம் ஆண்டு, நானும் என் நண்பர்களும் இணைந்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு இசைத் தொடரை தயாரித்து இயக்கிய காலம் அது. அதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை பேட்டி காணச் சென்று இருந்தோம். அவர் மேனேஜர் திரு.விட்டலிடம் நாங்கள் வந்ததைத் தெரிவிக்க, அவரும் உள்ளே சென்று தகவல் தெரிவித்தார். அதற்குள் வரவேற்பறையில் எங்களை அமர வைத்து காபியும் தரப்பட்டது. ஒரு 15 நிமிடம் கழித்து எங்களைச் சந்தித்த எஸ்.பி.பி அவர்கள் பதட்டத்தோடு 'நேற்று நள்ளிரவு தான் நெல்லூரில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தேன். அதனால் தூங்கிவிட்டேன். மன்னிச்சுடுங்க. உங்களுக்கு காபி கொடுத்தார்களா' என்று கூறினார்.

எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி

வீடியோ எடுக்க வேண்டிய ரூமுக்குள் சென்றவர், தான் பேச வேண்டியது எது குறித்து என்று விசாரித்தார். நீங்கள் நன்றியோடு நினைவு கூற வேண்டிய நபர்களைப் பற்றி பேச வேண்டும், அதுவே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றோம். சிறிது நேரம் மௌனமானவர், கலங்கிய கண்களோடு 'நான் இந்த இடத்துக்கு வர நிறைய பேர் காரணம். ஏன் என்னோடு பேச வந்திருக்கும் நீங்கள் கூட என் வளர்ச்சிக்கு காரணமானவர் தான். ஆனாலும் முக்கியமான 3 பேர் குறித்து பேசியே ஆக வேண்டும்' என்றவர் முதலில் தன்னுடைய தந்தை சாம்பமூர்த்தி குறித்துப் பேசினார். அவருடைய தவ வாழ்க்கை, விட்டுக் கொடுக்கும் பண்பு, தியாகம், நல்லொழுக்கம் குறித்துப் பேசியவர், அவரே என்னுடைய இந்த உயர்வுக்கும் நல்ல பண்புகளுக்கும்  முதல் காரணம் என்றார்.

பிறகு தன்னுடைய திரையுலக வளர்ச்சிக்குக் காரணமான இசையமைப்பாளர் கோதண்டபாணியை பக்தியோடு நினைவு கூர்ந்தார். 'ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல என் மீது அளவற்ற அன்பைப் பொழிந்தவர் கோதண்டபாணி சார். தனக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், என் வாய்ப்புக்காக பல இசை அமைப்பாளர்களிடம் பேசியவர். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா என்ற படத்தில் முதன்முதலில் பாட எனக்கு வாய்ப்பு அளித்தார். ஒரு உறவைப் போல என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் என்னைப் பெருமையாக வார்த்தெடுத்தவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. அவரை மிகச் சிறிய வயதிலேயே நான் இழந்தது என் துரதிர்ஷ்டமே' என்றார். (கோதண்டபாணி அவர்கள் பெயரிலேயே ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தை அமைத்திருந்தார் எஸ்.பி.பி)

S.P. Balasubrahmanyam's Exclusive Interview

மூன்றாவதாக தன்னுடன் அதிகப் பாடல்களை இணைந்து பாடிய இசைக்குயில் எஸ்.ஜானகியைக் குறித்து தன் நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார். 'நான் சின்ன பையனா இருந்தபோதே இவங்களைப் பார்த்து இருக்கேன். எங்க ஊருக்கு ஒரு டீச்சர் வீட்டு கல்யாணத்துக்கு இவங்க வந்திருந்தாங்க. இவங்களைப் பார்க்க ஊரே திரண்டு இருந்தது. அப்போ நான் ஜன்னல் வழியே அவங்கள முதன்முதலாப் பார்த்தேன். பிறகு கூடூர்ல ஒரு பாட்டுப் போட்டில கலந்துக்கிட்ட போது, மூன்று ஜட்ஜ்-ல இவங்களும் ஒருத்தரா இருந்தாங்க. எல்லோரும் சேர்ந்து வேறு ஒருவரை முதல் பரிசுக்குத் தேர்ந்து எடுத்தபோது, இவங்க அதை எதிர்த்து ஒரிஜினல் வாய்ஸ்ல நான் தான் பாடினேன்னு சொன்னாங்க. 'நீ மெட்ராசுக்கு வா. ரொம்ப நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு சொல்லி என்னை ஆசிர்வதிச்சாங்க. அந்த ஆசிர்வாதமும் தூண்டுதலும்தான் என்னை ஒரு பாடகனாக்கியது. அதன்பிறகு அவங்க கூடயே ஆயிரம் ஆயிரம் பாடல்களை பாடியது எல்லாம் என் பாக்கியமே' என்று கூறி கைகூப்பி வணங்கினார்.

பிறகு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர், நாங்கள் ஷூட் செய்த கேமிராவைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து, இனிப்புகளை வழங்கி உபசரித்தார். இறுதியாக அவரிடம் நாங்கள் கேட்டோம். 'உங்களை சந்திக்க ஆவலோடு ஒருவர் கேட்டுக்கு வெளியே இருக்கிறார். நீங்கள் சந்திக்க மாட்டீர்களோ என்ற தயக்கத்தோடு வர மறுத்துவிட்டார். அவர் நாங்கள் வந்த ஆட்டோவின் டிரைவர் கருப்பசாமி. நீங்கள் பாடிய 'ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்' பாட்டைக் கேட்டதில் இருந்தே உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரை அழைத்து வரலாமா' என்றதும் பதறி விட்டார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்


'மனிதனை மனிதன் பார்க்கத் தயங்குவதா! நான்தாங்க அவரைப் போய் பார்க்கணும்' என்று அந்த ரூமை விட்டு வெளியேறி படியில் இருந்து இறங்கத் தொடங்கினார். அவருக்கு முன்பு ஓடிச் சென்று அந்த ஆட்டோக்காரரிடம் 'பாலு சார் உங்களைப் பார்க்க வெளியே வருகிறார்' என்றதும் வேகமாக எங்களோடு வந்த அவர், 'சாரைப் பார்த்ததும் என்ன செய்யணும். வணங்க வேண்டுமா, கை கொடுக்கணுமா சொல்லுங்கள்' என்றபோதே மாடிப்படியின் திருப்பத்தில் வந்த எஸ்.பி.பி. அந்த ஆட்டோ டிரைவரை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு 'என்ன கருப்பசாமி சார் என் வீட்டுக்கு வந்துட்டு உள்ளே வரமா இருக்கிறீங்க! என் மேல கோபமா!' என்றதும் நெகிழ்ந்துபோன அவர் கிட்டத்தட்ட அழுத நிலையில் 'சார் என்னை உள்ள விடமாட்டாங்கன்னு நினைச்சுதான்...' என்றதும் மீண்டும் அணைத்துக் கொண்டு 'அது இந்த பாலு இருக்கிற வீட்டுல நடக்காது சார்' என்றதும் அந்த இடமே நெகிழ்ந்து போனது.

கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுறது, விரதம் இருப்பது மட்டும் ஆன்மிகம் இல்லை. சக மனிதரை மதிப்பது, தன் மீது கருணையும் அன்பும் கொண்டவர்களை ஆராதிப்பது, இதுதான் ஆன்மிகம். அதை எப்போதும் செஞ்சுக்கிட்டே இருக்கணும் என்பதுதான் என் ஆசை. நான் நல்ல பாடகன் என்பதைவிட நல்ல மனுஷன்னு பேர் வாங்கணும். அதான் முக்கியம்!' என்றார் எஸ்.பி.பி.

அப்படித்தான் வாழ்ந்தும் மறைந்தும் போனார். எதிரியே இல்லாத ஒரே திரைக்கலைஞராக இருந்ததால்தான் அவர் இப்போதும் நம்மிடையே வாழ்கிறார்.


source https://www.vikatan.com/spiritual/religion/celebrity-and-spiritual-humanity-of-sp-balasubrahmanyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக