Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

மர்மமான முறையில் நிலத்தில் காயங்களுடன் கிடந்த விவசாயி உயிரிழப்பு; சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இரண்டு பெண் பிள்ளைகளை மட்டுமே திருமணம் செய்துகொடுத்துள்ள துரை, அந்தப் பகுதியில் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி காலை சுமார் 7 மணி அளவில், மாட்டை மேய்ச்சலுக்கு கட்டிவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு, தங்களுடைய விவசாய நிலத்தின் அருகே ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பாமல் போயுள்ளார். எனவே அவரது குடும்பத்தார் அவரை தேடிச் சென்று பார்த்தபோது, அவர்களது நிலத்தின் அருகே மாடு மட்டும் கட்டப்பட்டிருந்துள்ளது. ஆனால், துரை அங்கு இல்லையாம்.

காவல் நிலையத்தில் துரையின் உறவினர்கள்

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தார், வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போன் செய்து, "அங்கு வந்தாரா..." என்று விசாரித்ததோடு, அன்றைய தினம் முழுவதும் பல்வேறு இடங்களில் துரையை தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் துரை கிடைக்காமல் போகவே, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, மீண்டும் தேடிப்பார்க்க சென்றபோது, குடும்பத்தார் முன்பு தேடிப்பார்த்த இடத்திலேயே உயிருக்கு ஆபத்தான நிலையில் துரை கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்... துரையை உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், "தண்ணீரில் கிடந்தது போல் அவரது நுரையீரல் முழுக்க தண்ணீரில் ஊறிப் போயுள்ளது. முண்டியம்பாக்கம் அழைத்துச் செல்லுங்கள்" என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, துரையை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கடந்த ஒரு வாரமாக துரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழப்பு

துரை மர்மமான முறையில் நிலத்தில் கிடந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி, சம்பவம் நடந்த மறுதினமே ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாம். ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகியும் மர்ம நபர்களை போலீஸார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, துரையின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், ஒலக்கூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு மீண்டும் புகார் அளித்தனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு, போலீஸாரின் சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 "துரை, கூலி வேலைக்கு மட்டுமன்றி கிணறு தோண்டுவதற்கான வேலைக்கும் அடிக்கடி செல்வார். சம்பவத்தன்றும் அவரை யாராவது கிணற்று வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அப்போது அவருக்கு அங்கே ஏதேனும் நடைபெற்றிருக்கக்கூடும். அது எங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக... நாங்கள் அவரை(துரை) தேடிவிட்டுச் சென்றதும், நாங்கள் தேடிய இடத்திலேயே மர்ம நபர்கள் அவரைக் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். நாங்கள் துரையை மீட்டபோது அவரது காலிலோ, அருகிலோ செருப்பு இல்லை, மறுதினம் அங்கு செருப்பு கிடக்கிறது. அதேபோல, அவரது நுரையீரல் முழுக்க தண்ணீர் ஊறி போயிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

துரை

துரை அங்குதான் கிடந்தார் என்றால், உடலில் அந்த நிலத்தின் மண்தானே இருக்க வேண்டும். ஆனால் சிகிச்சைக்காக ஆடைகளை கழற்றியபோது உடலில் க்ரஷர் மண்போல் இருக்கிறது. இவை அனைத்தும் எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்... துரையின் இறப்பிற்கு காரணமானவர்களை போலீஸார் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/crime/relatives-besieged-the-police-station-and-complained-that-the-farmers-death-was-mysterious

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக