Ad

புதன், 6 செப்டம்பர், 2023

``திமுக-வின் ஊழலை ஒழிக்கவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மோடி கொண்டு வந்தார்!” - சொல்கிறார் அண்ணாமலை

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கலந்துக்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நடைபயண நிகழ்ச்சியின்போது, ஆண்டாள் கோயில் அருகே கோகுலஷ்டமியை முன்னிட்டு உறியடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்துக்கொண்ட பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

இதையடுத்து நெசவாளர்கள் அணி சார்பில் கைநூல் நூற்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை பார்வையிட்ட அண்ணாமலை, இராட்டையில் நூல்நூற்பு செய்தார். தொடர்ந்து அவர் மக்களை சந்தித்து உரையாற்றுகையில், "மத்திய அரசு பதவியேற்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு நிறைய மாற்றம் கண்டிருக்கிறது.

நடைபயணம்

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலே 11-வது இடத்திலிருந்த நமது நாடு, பல படிகள் முன்னேறி உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருமாறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக தி.மு.க நடத்திவரும் ஆட்சியில் தினமும் செய்தித்தாள்களில் வெட்டு, கொலை, ஊரெங்கும் கஞ்சா, டாஸ்மாக் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளைத்தான் பார்த்து வருகிறோம். சரித்திரத்தில் இதுபோன்ற மோசமான ஊழல் அரசு எதுவுமில்லை.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சி, அரசு நடக்கிறது. அடிப்படை வசதிகள், சாதியில்லா சமூகம், சமூக ஏற்றத்தாழ்வுகள், டாஸ்மாக் பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டு என பல முக்கிய பிரச்னைகளை பற்றி பேச வேண்டிய நேரத்தில் இவர்கள் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள்.

சனாதன தர்மம் ஆதி, முடிவு இல்லாதது. நமது வாழ்வியல் முறையோடு சனாதன தர்மம் கலந்திருக்கிறது. இதைத்தான் அவர்கள் உடைத்தெறிய வேண்டும் என்கிறார்கள். எல்லோரும் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்றால் தி.மு.க.காரர்கள் கோயில் உண்டியலில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை பார்ப்பதற்காக கோயிலுக்கு செல்கிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. தினம், தினம் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசி வருகிறார்.

உறியடித்தல்

இந்த லட்சணத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று ஒருபக்கம் பேசிவருகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்க, டாஸ்மாக் ஊழல்களை ஒழிக்க, மதுக்கடைகளை மூட, மதுவில்லா தமிழகம் படைக்க, சாதிய கோட்பாடுகளை களைய தி.மு.க. அரசோடு கைகோர்த்து செயல்பட நாங்கள் தயார். ஆனால் சனாதன தர்மத்தை அழிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம். அந்த பாவத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாத்திகவாதி, ஆத்திகவாதி என்று இங்கு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து விடலாம். ஆனால், நாத்திக்கவாதி, ஆத்திகவாதி போல் குழப்பவாதிகளாக இருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் வாக்களிக்கக் கூடாது. மத்திய அரசு என்னத்திட்டம் கொண்டுவந்தாலும் அதில் தங்களுக்கு எவ்வளவு லாபம் வருகிறதென்றுதான் தி.மு.க.வினர் பார்க்கிறார்கள்.

நூல் நூற்புதல்

இந்த ஊழலை ஒழிப்பதற்குதான் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை பிரதமர் கொண்டுவந்தார். இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டுவந்ததே தி.மு.க.வின் ஊழலை அழிக்கத்தான். தி.மு.க. பற்றி முழுமையாக புரிந்துக்கொண்டுதான் பிரதமர் மோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடைபயணத்தில்...

தமிழகத்தில் என்ன நடக்கிறதென்றும் தெரியாமல், மத்திய அரசின் நலத்திட்ட கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமலும், பதில் எதுவும் பேசத் தெரியாத பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை கடந்த 30 மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒருபக்கம் என்றால், மாட்டிற்கு பால் காம்பில் இருந்து வருகிறதா?, கொம்பில் இருந்து வருகிறதா? என தெரியாத ராகுல்காந்தி மறுப்பக்கம். ஆகவே, மக்களை நன்கு அறிந்தவரும், ஏழைகளின் பங்காளனுமாய் இருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-annamalai-srivilliputhur-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக