Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

மழைநீர் வடிகால்பணி குப்பைகளைக் கொட்டும் இடமாக மாறிய `கோபாலபுரம்' விளையாட்டு மைதானம் - காரணம் என்ன?

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப விளையாட்டு மைதானங்களை அதிகரிக்க வேண்டும், சர்வதேச தரத்தில் மேம்படுத்தவேண்டும் எனச் சொல்லி அடுத்தடுத்த புதிய அறிவிப்புகளையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதற்கு நேர்மாறாக சென்னை கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை நாசப்படுத்தும் வேலையில் அதே மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோபாலபுரம் விளையாட்டு மைதானம்

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம், கான்ரான் ஸ்மித் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த சாலையில் அமைந்திருக்கும் மூன்று பள்ளிக்கூடங்கள், அருகிலிருக்கும் கல்லூரி, சுற்றுவட்டாரப்பகுதிகள் என பல்வேறு இடங்களிலிருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் இந்த மைதானத்துக்கு விளையாட வருகின்றனர். அதேபோல இங்கிருக்கும் உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்யயும், வாக்கிங் செய்யவும் நாள்தோறும் பெரியவர்கள், பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகள் என எப்போதும் பிஸியாகவே இருக்கும் இந்த விளையாட்டு மைதானம் இப்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்படும் சாக்கடை மண், உடைந்த கான்கிரீட் இடிபாடுகளைக் கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் நடபெற்றுவரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டிருக்கிறது மாநகராட்சி. அந்த வகையில், கோபாலபும், அருகிலுள்ள அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்டப் பகுதிகளின் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் குழிகள் வெட்டப்பட்டு கால்வாய் தோண்டப்படுகின்றன. அதிலுள்ள சாக்கடை கலந்த மண், கான்கிரீட் இடிபாடுகள், சேதமடைந்த தார்சாலை, மரத்தின் அடிவேர்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என ஒட்டுமொத்த கழிவுகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு, நேராக கோபாலபுரம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டுவந்து தற்போது கொட்டப்பட்டு வருகின்றன.

கோபாலபுரம் விளையாட்டு மைதானம்

மேலும், மைதானத்தில் வைத்துதான் மழைநீர் வடிகால் பணிகளுக்கான கான்கிரீட் மூடிகள், ஸ்லாப்புகள் உருவாக்கும் பணிகளும் வடமாநிலத் தொழிலாளர்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மைதானமே குப்பைமேடாகி, இனி விளையாடவே முடியாத அளவுக்கு மோசமாக மாறியிருக்கிறது.

கோபாலபுரம் விளையாட்டு மைதானம்

இதுகுறித்து அந்த மைதானத்தில் எஞ்சியிருக்கும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடம் பேசியபோது, ``இந்த ஒரு கிரவுண்டை நம்பித்தான் நாங்கள் அனைவரும் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து என பல விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். தற்போது இதையும் கல், மண் என்று கொட்டினால் நாங்கள் எங்கு சென்று விளையாடுவது? மண்மேடாக இருந்தால்கூட பரவாயில்லை, அதையும் தாண்டி பாறைகற்களும், உடைந்த மதுபாட்டில்களும் முக்கியமாக கான்கிரீட் இடிபாடுகளிலிருந்து துருபிடித்த கம்பிகளும் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதில் விளையாடினால், தவறுதலாக கால்வைத்தால், விழுந்தால் எங்கள் நிலைமை என்னவாகும்? புதிதாக கிரவுண்டை மேம்படுத்துவார்கள் என்றுபார்த்தால், நன்றாக இருப்பதையும் நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்!" என வேதனை தெரிவித்தனர்.

இந்த புகார் குறித்து, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலனின் உதவியாளர் செந்தில் நம்மிடம் பேசியபோது, ``மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்படும் இந்த கற்கள், மண்களை அருகில் கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாததால், கோபாலபுரம் மைதானத்தில் கொண்டவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. மைதானம் முக்கியம்தான், அதற்குமுன் மழை காலம் வருவதற்குள்ளாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவேண்டியது கட்டாயம் அல்லவா? இந்த பணிகள் முடிந்தபிறகு உடனடியாக அந்த மேடுகளை அப்புறப்படுத்திவிடுவோம்.

கோபாலபுரம் விளையாட்டு மைதானம்

அதன்பிறகு, ஏரி குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி பெற்று, அதை மைதானத்தில் கொட்டி சீர்படுத்திவிடுவோம். முக்கியமாக, இந்த மைதானத்தை சர்வதேசத் தரத்தில் மாற்றுவதற்காக எங்கள் எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 77 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் திட்டம் போட்டிருக்கிறார். விரைவில் அதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு, திட்டம் தொடங்கப்படும்!" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-gcc-destroying-gopalapuram-play-ground

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக