Ad

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பிரித்து முதலீடு செய்வதே சரியான அணுகுமுறை..!

நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது; முடிந்தவரை அதை வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பதன்மூலம் நல்ல லாபம் அடைய முடியும் என்பது பெஞ்சமின் கிரகாம், வாரன் பஃபெட் உள்ளிட்ட பல முதலீட்டு ஜாம்பவான்கள் கற்றுத் தரும் பாலபாடம். இந்தப் பாடத்தின்படி தான் நாம் நடக்கிறோமா என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

காரணம், அதிகம் வருமானம் அல்லது லாபம் எங்கு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் நம்மிடம் இருக்கும் எல்லாப் பணத்தையும் கொண்டுபோய் போட்டு விடுவது என்பதை ஒரு பழக்கமாகவே நாம் வைத்திருக்கிறோம். இதற்கு நல்லதோர் உதாரணம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் கடந்த ஓராண்டுக் காலத்தில் குவிந்திருக்கும் தொகை.

நமக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ஜனவரி வரையில் வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்துள்ள பணம் ரூ.186.2 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2022-23-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.12.2 லட்சம் கோடி வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்துள்ளது. இது ஜனவரி 13-ம் தேதி வரையிலான புள்ளிவிவரம் மட்டுமே. முழு நிதி ஆண்டுக்கும் அதாவது, மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் வங்கி டெபாசிட்டுகளில் சேர்ந்திருக்கும் மொத்தத் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் சில நாள்களில் வெளியாகும். அந்தத் தொகை நாம் ஆச்சர்யப்படும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்!

தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், அதை மேலும் மேலும் வாங்கி, தம்மிடம் இருக்கிற எல்லாப் பணத்தையும் தங்கத்திலேயே போடுகிறார்கள் பலர். வீடு, மனை போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளையும் அடுத்தடுத்து வாங்குகிறார்கள் இன்னும் சிலர். ‘பங்குச் சந்தை தவிர வேறு எதிலும் பணம் போட மாட்டேன்’ என்று சொல்லி, அதை மட்டுமே திரும்பத் திரும்ப சுற்றி வருபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

நமது இந்த அணுகுமுறையால் என்ன நடக்கிறது? விலை உயரும்போது, அபரிமிதமான லாபம் கிடைக்கிறது. ஆனால், விலை குறையும்போது, குறைந்த அளவு லாபமோ, சில சமயங்களில் நஷ்டமோகூட கிடைக்கிறது. இதற்குப் பதிலாக, நமது மொத்த முதலீட்டையும் பகுதி, பகுதியாகப் பிரித்து, பங்குச் சந்தையில் இவ்வளவு, தங்கத்தில் இவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் இவ்வளவு என ‘சொத்து ஒதுக்கீடு’ (Asset Allocation) முறையில் முதலீடு செய்தால், அபாரமான லாபம் நமக்குக் கிடைக்காவிட்டாலும், சராசரியான லாபம் நமக்கு நிச்சயம் கிடைக்கவே செய்யும். அவ்வப்போது ‘சொத்து ஒதுக்கீடு’ முறையின்படி முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டிலும் சிக்காமல், எல்லா வகையான முதலீடுகள் மூலமும் கிடைக்கும் சிறந்த லாபத்தை நம்மால் பெற முடியும்!

எளிய வழியில் சிறப்பான லாபம் சம்பாதிக்கும் இந்த வழியை முதலீட்டாளர்கள் அனைவரும் இனியாவது பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/investment-in-asset-allocation-planning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக