Ad

வியாழன், 6 ஏப்ரல், 2023

அமெரிக்க ஃபைனான்ஸ் துறையில் கலக்கும் அந்த 5 இந்திய வம்சாவளிப் பெண்கள் யார், யார்?

கடந்த சில வருடங்களாகவே, உலகின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நம்மால் காண முடிகிறது. அந்த வகையில் `பேரன்ஸ்’ (Barron’s) என்ற அமெரிக்க வார இதழில் வெளிவந்த `அமெரிக்க நிதியத்தில் செல்வாக்குமிக்க 100 பெண்கள்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பேரன்ஸின் இந்தப் பட்டியலில் நிதிச் சேவையில் பல நிறுவனங் களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிவரும் பெண்களை இடம்பெறச் செய்து வருடம்தோறும் கௌரவப்படுத்துவது வழக்கம்.

அனு ஐயங்கார்

பேரன்ஸ் (Barron’s) என்ற வார இதழ், டோன்ஸ் அண்ட் கம்பெனியால் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனு ஐயங்கார், ரூபால் ஜே. பன்சாலி, சோனல் தேசாய், மீனா ஃப்ளைன் மற்றும் சவிதா சுப்ரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனு ஐயங்கார் ஜே.பி மார்கனில் மெர்ஜர்ஸ் அன்ட் அக்கவுசிசன்ஸ்-ன் (Mergers and Acquisitions - M&A) உலகளாவிய தலைவராகப் பணியாற்றி வருகிறார். ``சந்தையின் அபாயத்தை அறிந்துகொண்டு நிதி சவால்களைக் கையாள்வதே முக்கியம்’’ என்று கூறியுள்ளார் அனு.

ஐம்பத்தைந்து வயதான ரூபால் ஜே. பன்சாலி, ஏரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், நிதித்துறையில் வேலை செய்யப் பெண்களை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளதாக ரூபால் கூறுகிறார்.

மீனா

பட்டியலில் இடம்பெற்றுள்ள சோனால் தேசாய், ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் உலகளாவிய முதலீட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமை முதலீட்டு அதிகாரியாக 2018-ல் நியமிக்கப்பட்டவர். 58 வயதான சோனால், சர்வதேச நாணய நிதியம், ட்ரெஸ்ட்னர் க்ளீன்வார்ட் வாசர்ஸ்டீன் மற்றும் தேம்ஸ் ரிவர் கேப்பிடல் ஆகிய இடங்களில் பணிபுரிந்த பிறகு 2009-ல் ஃபிராங்க்ளின் டெம்பிள்டனில் இணைந்தார்.

சோனால் தேசாய்

கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தில் உலகளாவிய தனியார் நிதி மேலாண்மையின் இணைத் தலைவராக உள்ள மீனா ஃப்ளைன் 2014-ல் ஜேபி மோர்கனில் பங்குதாரரான மீனா, “குடும்பத்தின் செல்வத்தை நிர்வகிப்பது, முடிவெடுப்பதில் ஒரு பகுதியாக இருப்பது பெண்களே” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இந்தப் பட்டியலில் அடுத்து இடம்பெற்றுள்ள ஐம்பது வயதான சவிதா சுப்ரமணியன் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் மற்றும் மூலோபாய (Strategy) தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

சவிதா சுப்ரமணியன் | Savitha Subramanian

`பேரன்ஸ்’ வெளியிட்டுள்ள செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளது, பெண்களின் நிதி ஆளுமைத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்பதில் சந்தேகமில்லை!



source https://www.vikatan.com/personal-finance/money/who-are-these-5-women-of-indian-origin-who-are-mixing-in-the-us-finance-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக