Ad

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

என்ன ஆனது மலேசிய விமானம் MH370? : மர்மங்களின் கதை | பகுதி 5

- ஆர்.எஸ்.ஜெ

எல்லா நாட்களை போலவும் அந்த நாளிலும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் பரபரப்பாக இருந்தத. சீனாவின் பெய்ஜிங்குக்கு காலை 6.30 மணிக்கு சென்று சேர வேண்டிய மலேசிய விமானம், 227 பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 12.42 மணிக்கு புறப்பட்டது. விமானப்பாதையில் ஓடி MH370 என்ற அந்த விமானம் வானேறியது. பொழுது விடிந்து 6.30 மணி ஆனது. MH370 விமானம் பெய்ஜிங் சென்று சேரவேயில்லை.

பணியாளர்களும் பைலட்டுகளும் சேர்ந்து மொத்தமாக 239 பேர் விமானத்தில் இருந்தனர். எவரை பற்றியும் எந்தவித எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மார்ச் 8, 2014

ஓடுதளத்திலிருந்து வானேறியதும் வான் போக்குவரத்து மையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து லம்ப்பூர் ரேடாரின் கட்டுப்பாட்டுக்கு விமானம் சென்றது.

MH370 விமானத்தின் கடைசியான தகவல் பரிமாற்றம் 1.19 மணிக்கு நடந்திருக்கிறது. வியட்நாம் நாட்டின் வான்வெளிக்குள் விமானம் நுழைவதை லம்ப்பூர் வான் போக்குவரத்து மையம் உறுதிப்படுத்த, விமானத்தின் தலைமை பைலட் கேப்டன் சகரி அதை ஏற்றார். வியட்நாம் வான்வெளிக்குள் நுழைந்ததும் ஹோசிமின் வான் போக்குவரத்து மையத்துக்கு விமானத்திலிருந்து தகவல் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை.

MH370 விமானத்தின் ட்ராண்ஸ்பாண்டர் இயக்கம் நின்றவுடன், விமானம் வலது பக்கத்துக்கு திரும்பியதாக மிலிட்டரி ராடார் கண்டறிந்திருக்கிறது. வலதுபக்கம் திரும்பி இடது பக்கம் திரும்பியிருக்கிறது. 1.52 மணிக்கு பெனாங்க் தீவின் தெற்கே விமானம் பறந்திருக்கிறது. கடைசியாக மலேசியாவின் மிலிட்டரி ரேடாரின் தகவல்படி விமானம் பெனாங் விமான நிலையத்தின் வட மேற்கில் பறந்திருக்கிறது.

12.45 மணிக்கு வானேறிய விமானம் அரை மணி நேரம் மட்டுமே நேரடி தொடர்புக்குள் இருந்திருக்கிறது. அதற்கு பின் விமானம் கொடுத்த சமிக்ஞைகள் மட்டுமே. அவையும் அடுத்த சில மணித்துளிகளில் நின்றுவிட்டது. 239 பேரை கொண்ட விமானம் சீனாவுக்கு சென்று சேராமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி, அந்த இடத்தையும் சென்று சேராமல் தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக பயணித்திருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஊடகங்களை சந்தித்தார். விபத்துகளை துப்பறியும் பிரிவு மற்றும் செயற்கைக்கோளின் தகவல்கள்படி கடைசியாக விமானம் தென்னிந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்ததாகவும் அங்கு விமானம் இறங்கும் தளம் ஏதுமில்லை என்பதால் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அறிவித்தார்.

MH370 விமானத்தின் மர்மத்துக்கு காரணமாக மூன்று முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. 1. தொழில்நுட்ப கோளாறு 2. திட்டமிட்ட சதி 3. தீவிரவாத தாக்குதல்.

முதல் விஷயமான தொழில்நுட்ப கோளாறு இயல்பாகவே விமானங்களில் ஏற்படுவதுதான். அவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா விமான கட்டுப்பாட்டு மையங்களும் எப்போதுமே சேதிகளை அறிந்துகொள்ளவும் அனுப்பவும் தயார் நிலையிலேயே இருக்கின்றன.

எல்லா நாடுகளிலும் Air Traffic Control எனப்படும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளின் வானுக்குள் நுழையும் எந்த விமானமும் இவர்களின் அனுமதி பெற்றுத்தான் நுழைய முடியும். அனுமதி இல்லையென்றால் எச்சரிக்கை கொடுக்கப்படும். பிற நாடுகளின் வான் கட்டுப்பாட்டு மையங்கள் தொடர்பு கொண்டு விசாரிக்கப்படும். எங்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் கிடைக்கவில்லையெனில் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

விமான போக்குவரத்தைக் கண்காணிக்க பயன்படும் வழிகளில் முதன்மையானது ராடார். வான்வெளியில் கிடைக்கும் சமிக்ஞைகளை கொண்டு விமானங்கள் அடையாளம் காணப்படும். முதன்மை ராடார் அல்லாமல் secondary radar மற்றும் மிலிட்டரி ராடார் ஆகியவையும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக செயற்கைக்கோள் இருக்கிறது. விமானத்திலுள்ள transponder என்னும் கருவி, சமிக்ஞைகளை ராடாருக்கு அனுப்பி தன் இருப்பிடத்தை அறிவித்துக் கொண்டே இருக்கும். பைலட்டுகள் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும் சேதிகள் அடிப்படையான தொடர்புவகையைச் சேரும்.

இவை ஏதுமின்றி எந்த கண்காணிப்புக்கும் தட்டுப்படாமல் விமானம் பறந்து செல்லக் கூடிய வழி இல்லையா என கேட்டால், இருக்கிறது என்பதே பதில்.

நிலத்தில் இருந்து அனுப்பப்படும் ராடார் சமிக்ஞைகள் வானுக்கு சென்று பரவுவது குறிப்பிட்ட ஓர் உயரத்துக்கு மேல்தான். அந்த உயரத்தை தொடாமல், தாழ்வாக விமானம் பறந்தால் ராடாரின் வளையத்துக்குள் விமானம் சிக்காது. ஆனால் அந்த உயரத்தில் நிலப்பகுதிக்குள் பறக்கும்போது மிக எளிமையாக மக்களுக்கு புலப்பட்டு விடும். வழக்கமான உயரத்தை காட்டிலும் குறைவான உயரம் என்பதால் மிக எளிதாக மக்களுக்குள் சந்தேகம் கிளப்பிவிடும். பிறகு ராணுவ நடவடிக்கைதான்.

MH370 விமான விபத்துக்கான இரண்டாவது காரணமாக திட்டமிட்ட சதி கூறப்படுகிறது. சதி என ஆலோசிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் MH370 விமானத்தின் Transponder கருவி அணைக்கப்பட்டதே.

அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறாக இருந்திருந்தால், மொத்த விமானத்திலும் அது வெளிப்பட்டிருக்கும். வான் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். அப்படி எந்த தகவலும் வரவில்லை என்பதால், விமானத்துக்குள் இருந்தே transponder கருவி யாரோ ஒருவரால் அணைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. Transponder கருவியை பைலட் மட்டுமே இயக்க முடியும். ஆதலால் விபத்துக்கான மொத்த சந்தேகமும் விமானத்தின் முதல் கேப்டனான சகாரி அகமது ஷா மீதும் விழுந்திருக்கிறது. சந்தேகத்துக்கேற்பவே அவர் நடத்தையும் இருந்ததே இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

சகாரி அகமது ஷா 53 வயதானவர். அவரது மனைவியும் மக்களும் அவரை பிரிந்து விட்டிருந்தனர். காரணம், அவர் கொண்டிருந்த பெண்கள் தொடர்பு.

அது பிரச்னையாகி அவரது குடும்பம் பிரிந்து அவர் தனிமையில் இருந்திருக்கிறார். விமானம் ஓட்டாத காலத்தில் அவருக்கு இருந்த முக்கியமான பொழுதுபோக்குகள் இரண்டுதான் என்கிறார்கள் அவரின் நண்பர்கள். முகநூல் போன்ற சமூக ஊடகங்கள், ஒன்று. இன்னொன்று அவர் வீட்டுக்குள்ளேயே உருவாக்கி வைத்திருந்த Flight Simulator.

Flight Simulator என்பது வீடியோ கேம் போல. ஒரு விமானத்தின் பைலட் இருக்கும் அறையை போல வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். விமான ஓட்டி அமர்ந்து எதிரில் கண்ணாடி வழியே பறக்கும் வானை பார்ப்பது போல் திரையில் இயக்கத்துக்கு ஏற்ப படம் தெரியும். விமானம் ஓட்டுவதற்கான சாதனங்கள் எல்லாமும் அறைக்குள்ளே இருக்கும். அந்த சாதனங்களை இயக்குகையில், இயக்கத்துக்கு ஏற்ப திரையில் படங்கள் தோன்றும். உதாரணமாக வீட்டின் அறைக்குள் இருந்துகொண்டு, விமானத்தை எழுப்புவதற்கான சாதனங்களை பயன்படுத்தினால், திரையில் விமானம் எழும் தோற்றம் உருவாகும்.

MH370 விபத்துக்கு பிறகு, சந்தேகங்கள் அனைத்தும் சகாரியின் மீது குவிய முக்கிய காரணமாக இருந்தது Flight Simulatorதான். ஏனெனில், சகாரி வைத்திருந்த Flight Simulator-ல் இணைக்கப்பட்டிருந்தது MH370 ரக விமான மாதிரி. அதில் அவர் ஓட்டி பழகிய பாதை தென்னிந்தியக் கடல். எரிபொருள் தீரும் வரை ஒவ்வொரு முறையும் simulator-ஐ ஓட்டி பழகியிருக்கிறார்.

எல்லாம் சரி. ஆனால் சகாரிதான் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பதற்கான சாத்தியம் என்னவென்ற கேள்விக்கு வில்லியம் லேங்கெவீஷ் (WILLIAM LANGEWIESCHE) போன்ற பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து சொல்லும் பதில் இதுதான்.

தான் கொண்டிருந்த மனஅழுத்தத்தாலும் தனிமையாலும் மரணத்துக்கு சகாரி தயாராகி இருக்கலாம். தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதாக சமூகத்தின் மீது அர்த்தமற்ற கோபம் கொண்டு, விமானத்தை பயணிகளோடு கொண்டு சென்று கடலில் மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம்.

ஆனால் விமான ஓட்டியின் அறைக்குள் இரண்டு விமான ஓட்டிகள் இருப்பார்கள். அதில் ஒருவரான சகாரி விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முடிவை எடுத்திருந்தாலும் அடுத்தவர் எப்படி சம்மதித்திருப்பார்?

அதற்கு பதிலளிக்கும் வில்லியம், `சகாரியுடன் இருந்த விமான ஓட்டி குறைந்த அனுபவத்தைக்கொண்டவர். சரியாக சொல்வதெனில் சகாரிக்கு ஜூனியர். அவரை கழற்றி விடுவது ரொம்ப சுலபம். விமான ஓட்டி அறைக்கு வெளியே சென்று எதையேனும் பரிசோதிக்க சொல்லியிருக்கலாம்’ என்கிறார்.

சக விமான ஓட்டியை வெளியே அனுப்பிவிட்டு, சகாரி தன் வேலையை தொடங்கி இருக்கக்கூடும். விமானத்தை இன்னும் அதிகமாக, 40,000 அடி உயரத்துக்கு மேலேற்றி, காற்றழுத்தும் இல்லாத நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். காற்றழுத்தமும் ஆக்சிஜனும் இல்லாத நிலையில், பயணிகள் மயங்கியிருப்பார்கள். மயக்கத்திலேயே சில மணிகளில் மரணத்தை தழுவியிருப்பார்கள். பிறகு சாவகாசமாக சகாரி தன் Flight Simulator-ல் ஓட்டி பயிற்சி பெற்ற தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக விமானத்தை செலுத்தியிருக்கலாம்.

சகாரியின் சக விமான ஓட்டியான ஃபாரிக் அகமதுக்கு அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இன்னும் அந்த விமானத்தில் இருந்த பலருக்கும் பல கனவுகள் இருந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறோ திட்டமிட்ட சதியோ எதுவாகினும் அவர்களின் அத்தனை பேரின் கனவுகளும் இந்தியப் பெருங்கடலின் ஏதோவொரு ஆழத்தில் புதைந்திருக்கும்.

MH370 விமானம் கடலிலேயே விழுந்திருந்தாலும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமே என்ற கேள்விக்கு, ஒரே ஒரு பாகம் மட்டும் கிடைத்தது என்பதே பதில். அந்த பாகமும் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்பிரிக்கத் தீவின் கடலோரத்தில் கரையொதுங்கி தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. MH370 விமானத்தின் இறக்கையில் இருக்கும் ஒரு பகுதி அது.

சகாரி பற்றிய ஊகத்தை சொன்ன வில்லியம், MH370 தன் பயணத்தை முடித்திருக்கக் கூடிய விதத்தையும் கூறுகிறார்.

அந்த பெரும் உலோகப் பறவையில் அநேகமாக ஒரே ஒருவர் உயிரோடு இருந்திருக்கலாம். விமான ஓட்டியின் அறைக்குள் ஏதோவொரு நிம்மதி நெஞ்சை கவ்வ அவர் அமர்ந்திருந்திருக்கலாம். எந்த அவசரமும் இல்லாமல் இருந்திருப்பார். கதவுக்கு வெளியே 238 பேர் தங்களின் உயிர் போன கதையே தெரியாமல் விமானத்தின் போக்குக்கு உயிரற்று ஆடிக் கொண்டிருந்திருப்பார்கள். விமான ஓட்டியின் அறைக்குள்ளிருந்த எல்லா திரைகளும் காரணமின்றி பூகோளத்தை காண்பித்திருக்கும். காற்றின் பேரிரைச்சல் விமானத்துக்குள் ஊளையிட்டிருக்கும். காலை 7 மணி அளவில் கிழக்கில் சூரியன் உதித்திருப்பான். அதன் அழகை ரசித்தபடி விமான ஓட்டி விமானத்தை கடலுக்குள் செலுத்தியிருப்பார். கடலின் பரப்பை தொட்டதும் விமானம் சிதறத் தொடங்கியிருக்கும். உலோகம் நொறுங்கி உடல்களுக்குள் பாய்ந்து, அத்தனை பேரும் கடலின் அடி ஆழத்தில் இருந்த மரணத்தின் ரகசியத்தை நோக்கி சென்று கொண்டிருந்திருப்பார்கள்.

மனிதனுக்கு புரிபடாத வானமும் கடலும் ஒன்றிணைந்து ஓலம் எழுப்பியிருக்கும்!

பல்லாயிர வருடங்களின் மனிதச் சரித்திரத்தை உண்டுச் செரித்து அலையாடும் கடல் அலட்சியத்துடன் அலையடித்துக் கொண்டு இருக்கிறது.



source https://www.vikatan.com/news/controversy/what-happened-to-malaysia-flight-mh370-mystery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக