ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள அனந்தலை மேல்புதுப்பேட்டை கிராமத்தில், அருண் டிரேடர்ஸ் என்ற பெயரில் அடுப்பு கரி மண்டி செயல்பட்டுவருகிறது. இங்கு மரக்கரித் தயாரிக்கும் தொழிலில் சிலரை கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வருவதாக ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இளம்பகவத் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று மண்டி உரிமையாளர் அருண்குமார் என்கிற குட்டி (41) மற்றும் அவரின் உதவியாளர் தென்றல் (27) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஓர் ஊரிலிருந்து இருளர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் 13 பேருக்கு முன் பணக் கடன் கொடுத்து லோடு வேனில் அழைத்து வந்திருக்கிறார் மண்டி உரிமையாளர் அருண்குமார். கடனை திரும்ப செலுத்தும் வரை மரம் வெட்டி கரிமூட்டம் போட்டு மரக்கரி தயாரிக்கும் வேலையில் கொத்தடிமைகளாக அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
வேலை செய்த கூலிக் கணக்குகளை முழுமையாக காட்டாமல், வெற்று பாண்டு பேப்பரில் எழுதி வாங்கிக் கொண்டு கடுமையாக வேலை வாங்கி துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அடுப்புக்கரி மண்டி உரிமையாளர் அருண்குமாரிடமிருந்து, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முன் பண பதிவேடுகள், கூலி பதிவேடுகள், கடன் கொடுத்ததற்கான வெற்று பேப்பரில் கையெழுத்திட்டிருந்த பாண்டு பத்திரங்கள் ஆகியவற்றை சப்-கலெக்டர் இளம்பகவத் கைப்பற்றினார்.
தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1976 பிரிவு 12-ன் கீழ் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 5 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் உட்பட 13 பேரை விடுவித்து அவர்கள் பெற்றிருந்த 2,63,900 ரூபாய் கடனையும் ரத்து செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். மீட்கப்பட்டவர்கள் அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பாவித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சித்ரவதை செய்துவந்த கரி மண்டி உரிமையாளர் அருண்குமார் மற்றும் அவரின் உதவியாளர் தென்றல் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யவும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் அனந்தலை கிராம நிர்வாக அலுவலர் அதியமான் புகாரளித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/13-workers-tortured-ranipet-shocked
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக