Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

சென்னை: சிறைத்துறை அதிகாரி தொல்லை? ; நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி! -பிளேடு கிடைத்தது எப்படி?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன் (57). இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. திருவொற்றியூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் பாண்டியனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாண்டியன், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்னிலையில் பாண்டியன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கொலை

அப்போது சிறைத்துறை அதிகாரிகள் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக நீதிபதியிடம் கூறிய பாண்டியன், திடீரென பிளேடை எடுத்து கழுத்தை அறுத்தார். அதைப்பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாண்டியனின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக பாண்டியனிடமிருந்த பிளேடை பறித்த போலீஸார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 14 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாண்டியனின் வழக்கறிஞர் சங்கரிடம் பேசினோம். ``பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்டனை வழங்கியது. அதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த பாண்டியன், ஷூ பாலீஸ் செய்யும் பணிகளை மேற்கொண்டார். 2009-ம் ஆண்டு அவருக்கு ஊதியமாக 75,000 ரூபாய் சிறைத்துறை நிர்வாகம் கொடுத்தது. ஆனால், அந்தப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை சிறைத்துறை அதிகாரி ஒருவர் எடுத்துக் கொண்டார். அதுதொடர்பான புகாரளித்தோம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Also Read: `வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் விவரம் தேவை’ - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தற்போது அவர் மீண்டும் புழல் சிறைக்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அதனால் பாண்டியனை பழிவாங்கும் நோக்கில் அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் சிறைத்துறை அதிகாரியுடன் சேர்ந்து சிறைக்காவலர்கள் செயல்பட்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் அவரை மனநலம் குன்றியவர்களை அடைத்திருக்கும் சிறைப்பகுதிக்கு மாற்றியிருக்கின்றனர். மேலும், அவரை சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர். இதுபோன்ற மனஉளைச்சலால் பாண்டியன், சில நாள்காக சிரமப்பட்டு வந்திருக்கிறார்.

மனஉளைச்சலில் இருந்த பாண்டியன் நீதிபதி முன்னாலேயே தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அவரின் கழுத்தில் இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பாண்டியன் கொடுத்த தகவலின்படி சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி, சிறைக்காவலர்களிடம் விசாரணை நடத்த சிறைத்துறை ஏடிஜிபியிடம் புகாரளித்திருக்கிறோம்" என்றார்.

இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்கள் சோதனை செய்யப்படுவதுண்டு. அப்படியிருக்கும் போது பாண்டியனுக்கு பிளேடு கிடைத்தது எப்படி என்று விசாரித்து வருகிறோம். பாண்டியனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற பாதுகாப்பு காவலர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. அதோடு பாண்டியனுக்கு தொல்லைக் கொடுத்த சிறைத்துறை அதிகாரி, காவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்குப்பிறகுதான் என்ன நடந்தது என்பதைச் சொல்ல முடியும்'' என்றார்.

புழல் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, ``கைதி பாண்டியன் மீது சிறையிலிருக்கும் சிலர் புகாரளித்திருக்கின்றனர். சிறை விதிகளை மீறி அவர் செயல்பட்டு வந்தார். பாண்டியன் மீது சிறைத்துறை காவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் அதிகாரிகள் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். முழுமையாக சோதனை நடத்திய பிறகுதான் பாண்டியனை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அதனால் அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

நீதிபதி முன் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/attempt-suicide-by-prisoner-in-chennai-high-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக