Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பர்கூர்

1996-ல் ஜெயலலிதாவே தோல்வியடைந்த பர்கூரில் அ.தி.மு.க-வில் கிருஷ்ணனும், தி.மு.க-வில் மதியழகனும் போட்டியிடுகின்றனர். தொகுதியில் கிருஷ்ணனுக்குப் பெரிதாக அறிமுகம் இல்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், காவேரிப்பட்டினம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த கிருஷ்ணனுக்கு அவரது எளிமை மட்டுமே ப்ளஸ். பந்தா காட்டுபவர், மக்கள் எளிதில் அணுக முடியாது என்பது மதியழகனுக்கு மைனஸ். ஆனாலும், அ.தி.மு.க-வுக்கு எதிரான மக்களின் மனநிலையும், பண பலமும் பர்கூரில் மதியழகனை முந்தச் செய்கின்றன.

ஊத்தங்கரை (தனி)

அ.தி.மு.க-வில் தமிழ்ச்செல்வமும் காங்கிரஸில் ஜே.எஸ்.ஆறுமுகமும் மோதுகின்றனர். கடந்த இரு முறை அ.தி.மு.க-வில் வெற்றிபெற்ற மனோரஞ்சிதம் நாகராஜுக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாததும், கடந்த இரு முறை அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பளித்த மக்களின் சலிப்பான மனநிலையும் தமிழ்ச்செல்வத்துக்கு மைனஸ். ஆறுமுகம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிதிராவிடர்களின் வாக்கு முழுமையாக அவருக்குக் கிடைக்காது என்பது மைனஸ். ஆனாலும், தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவர் என்பதால் ஊத்தங்கரையில் இம்முறை காங்கிரஸ் கை நன்றாகவே ஒங்குகிறது!

கிருஷ்ணகிரி

அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி அசோக்குமாரும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ செங்குட்டுவனும் மோதுகின்றனர். ஒரு முறை வேப்பனஹள்ளியிலும், இரு முறை கிருஷ்ணகிரியிலும் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது செங்குட்டுவனுக்கு ப்ளஸ். தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்குப் போனாலும், சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக உள்ளன. உடல்நலமின்மை, சீட் கிடைக்காதவர்களின் உள்ளடி வேலை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அசோக்குமாருக்குப் பின்னடைவை ஏற்படுத்த, ரேஸில் முந்துகிறார் செங்குட்டுவன்.

வேப்பனஹள்ளி

அ.தி.மு.க-வில் கே.பி.முனுசாமியும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ முருகனும் போட்டியிடுகின்றனர். ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்துகொண்டு எம்.எல்.ஏ தேர்தலிலும் போட்டியிடுவது மக்களிடையே முனுசாமிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் சீட் எதிர்பார்த்து தீவிரமாக வேலை செய்த சூளகிரி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஹேம்நாத், முனுசாமிக்கு வேலை செய்யவில்லை. தே.மு.தி.க-வின் முருகேசன் மற்றும் சில சுயேச்சை வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் முருகனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முந்தவைக்கின்றன.

ஓசூர்

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியும், தி.மு.க-வில் தளி சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷும் மோதுகின்றனர். கலவையான வாக்காளர்கள் இருப்பதால் ம.நீ.ம., நாம் தமிழர் கட்சி ஆகியவை கணிசமான வாக்குகளைப் பிரிக்கின்றன. ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் என்கிற அனுதாபமும், இந்தத் தேர்தலைக் குறிவைத்து கடந்த ஓராண்டாக பாலகிருஷ்ணன் செய்துவரும் பணிகளும் ஜோதிக்கு ப்ளஸ். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் தி.மு.க செல்வாக்கும் பிரகாஷுக்கு ப்ளஸ் என்றாலும் வெளியூர்க்காரர் என்ற இமேஜ் இடிக்கிறது. நிலைமை இழுபறியே!

தளி

பா.ஜ.க-வில் நாகேஷ்குமாரும் சி.பி.ஐ-யில் ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். தளியில் இருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கும் ராமச்சந்திரன் கடந்த தேர்தலில், தி.மு.க-வின் பிரகாஷிடம் தோல்வியடைந்தார். இந்த முறை தி.மு.க-வும் கூட்டணியில் இருப்பதால் ராமச்சந்திரனின் பலம் கூடியிருக்கிறது. தொகுதியில் பா.ஜ.க-வுக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரன் முந்துகிறார்.

பாலக்கோடு

ங்கு தொடர்ந்து நான்கு முறை வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாகப் போட்டியிடுகிறார் அ.தி.மு.க-வின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். 2016 தேர்தலில், சில ஆயிரம் வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தி.மு.க வேட்பாளர் பி.கே.முருகன் களம் காண்கிறார். நீர்ப்பாசன திட்டத்தைச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட இழுபறி, ஆளுங்கட்சிமீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், தனது செல்வாக்கால் அதைச் சரிக்கட்டிவருகிறார் அமைச்சர். தே.மு.தி.க போட்டியிட்டாலும்கூட சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க-வுக்கு பலம் சேர்க்கின்றன. அதையும் தாண்டி ரேஸில் முந்துகிறார் அன்பழகன்.

பென்னாகரம்

பா.ம.க-வில் இதே தொகுதியில் இருமுறை வெற்றிபெற்ற பா.ம.க தலைவர் ஜி.கே.மணியும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ இன்பசேகரனும் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் வாக்குகள் பா.ம.க-வுக்கு பலம். இன்பசேகரனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பது இவருக்கான ப்ளஸ். இவர் 2016 தேர்தலில் அன்புமணி ராமதாஸையே தோற்கடித்ததால், பதற்றத்திலிருக்கிறது பா.ம.க. இம்முறை அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணியிலிருப்பது ஜி.கே.மணிக்கு ப்ளஸ். ஆனாலும், இழுத்துப் பிடித்துக் கரைசேர்ந்துவிடுகிறார் இன்பசேகரன்!

தருமபுரி

பா.ம.க-வில் வெங்கடேஸ்வரனும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணியும் மோதுகின்றனர். தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர், சிறுபான்மையின மக்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். நகர்ப் பகுதிகளில் தி.மு.க பலத்துடன் இருக்கிறது. வெங்கடேஸ்வரனுக்குத் தொகுதியில் பெரிய அளவுக்குப் பரிச்சயம் இல்லாதது, அவருக்கு மைனஸ். தடங்கம் சுப்பிரமணி மீது பெரிய அதிருப்தி இல்லாதது, கூட்டணி பலம் ஆகியவை அவரை முந்தச் செய்கிறது.

பாப்பிரெட்டிப்பட்டி

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கோவிந்தசாமியும், தி.மு.க-வில் பிரபு ராஜசேகரும், அ.ம.மு.க-வில் பி.பழனியப்பனும் மோதுகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதியை பா.ம.க-வுக்கு ஒதுக்காததால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பழனியப்பனும் கணிசமான அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பது கோவிந்தசாமிக்கு மைனஸ். ஆனால், ஏற்கெனவே இதே தொகுதியில் தோல்வியடைந்த பிரபு ராஜசேகர், கூட்டணி பலத்தை மட்டுமே நம்பியிருக்கிறார். போட்டி கடுமையாக இருந்தாலும், ஏற்கெனவே நான்கு முறை வெற்றிபெற்றுள்ள அ.தி.மு.க-வே இந்தமுறையும் முந்துகிறது.

அரூர் (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சம்பத்குமாரும், சி.பி.எம் கட்சியில் குமாரும் போட்டியிடுகிறார்கள். கூட்டணியில் வி.சி.க இருப்பதால், பட்டியல் சமூக வாக்குகள் தனக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார் குமார். ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 இடைத்தேர்தல் இரண்டிலும் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, சம்பத்குமாருக்கு நம்பிக்கை தருகிறது. அ.ம.மு.க ஓரளவுக்கு வாக்குகளைப் பிரித்தாலும், எட்டிப்பிடித்து முந்துகிறார் சம்பத்குமார்!



source https://www.vikatan.com/government-and-politics/election/2021-tamil-nadu-assembly-election-survey-coimbatore-krishnagiri-dharmapuri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக