எடப்பாடி
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க-வில் சம்பத்குமாரும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் ஏழாவது முறையாகப் போட்டியிடுவதால், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம்வருகிறார் பழனிசாமி. முதல்வர் பதவியைப் பயன்படுத்தி தொகுதியில் கொண்டுவந்திருக்கும் வளர்ச்சிப் பணிகள் பழனிசாமிக்கு ப்ளஸ். சம்பத்குமார் புதுமுக வேட்பாளர் என்பதால் தொகுதிக்குள் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை என்பது மைனஸ். தி.மு.க-வினர் கடுமையாக வேலை செய்தாலும் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கெங்கவல்லி (தனி)
அ.தி.மு.க-வில் கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லதம்பியும், தி.மு.க-வில் சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினியும் மோதுகிறார்கள். நல்லதம்பி புதுமுக வேட்பாளர் என்பதால், தொகுதிக்குள் பரிச்சயம் இல்லாதது மைனஸ். ஆனால், கட்சியினரின் ஆதரவு அவருக்கு ப்ளஸ். கடந்தமுறை சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் ரேகா தோற்றார். தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் அவருக்கு மைனஸ் என்றாலும், தொகுதியில் நன்கு அறியப்பட்ட வேட்பாளர் என்பதால் ரேகா பிரியதர்ஷினி முந்துகிறார்.
ஆத்தூர் (தனி)
அ.தி.மு.க-வில் ஜெயசங்கரன், தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை, அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க வேட்பாளர் ஜெயசங்கரன் புதுமுக வேட்பாளர் என்பதால், தொகுதிக்குள் பரிச்சயம் இல்லை. சீட் கிடைக்காததால் அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ சின்னதம்பி, பணிகளில் சுணக்கம் காட்டிவருகிறார். இவை ஜெயசங்கரனுக்கு மைனஸ். கெங்கவல்லி தொகுதியைச் சேர்ந்தவர் என்பது சின்னதுரைக்கு மைனஸ். தொகுதியில் செல்வாக்குடன் இருக்கும் மாதேஸ்வரன் கணிசமாக அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிப்பதால், சின்னதுரை முந்துகிறார்.
ஏற்காடு (தனி)
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சித்ராவும், தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்செல்வனும் மோதுகிறார்கள். தொகுதிக்குத் திட்டங்கள் எதுவும் கொண்டுவராததாலும், தொகுதி மக்களை மதிப்பதில்லை என்பதாலும் சித்ரா மீது தொகுதிவாசிகள் அதிருப்தியில் இருப்பது அவருக்கு மைனஸ். கூடுதலாக எட்டுவழிச் சாலை விவகாரமும் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதால், முந்துகிறார் தமிழ்செல்வன்.
ஓமலூர்
அ.தி.மு.க-வில் மணியும், காங்கிரஸ் கட்சியில் மோகன் குமாரமங்கலமும் களத்தில் உள்ளனர். ஓமலூர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய ஓட்டுகள் அதே சமூகத்தைச் சேர்ந்த மணிக்கே கிடைக்கும் என்பது அவருக்கு ப்ளஸ். மணியின் தனிப்பட்ட செயல்பாடுகளால் தொகுதி மக்கள் அதிருப்தியிலிருப்பது அவருக்கு மைனஸ். மோகன் குமாரமங்கலம் பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், கூட்டணி பலம் சாதகமாக இருப்பதும் அவருக்கு ப்ளஸ். அதேசமயம், வெளிமாநிலத்தில் வசிப்பவர், தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் ஆகியவை மோகன் குமாரமங்கலத்துக்கு மைனஸ். ரேஸில் முந்துகிறார் மணி.
மேட்டூர்
பா.ம.க-வில் சதாசிவமும், தி.மு.க-வில் சீனிவாச பெருமாளும் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள் அதிகம் என்பது சதாசிவத்துக்கு ப்ளஸ். என்றாலும், தொகுதியில் புதுமுக வேட்பாளர் என்பது அவருக்கு மைனஸ். சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலைக்கு சீட் கிடைக்காததால், அவரின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலை பார்ப்பதும் சதாசிவத்துக்கு மைனஸ். ஆனாலும், மொத்த வன்னியர் வாக்குகளும் கைகொடுப்பதால், ரேஸில் முந்துகிறார் சதாசிவம்.
சங்ககிரி
அ.தி.மு.க-வில் சுந்தரராஜனும், தி.மு.க-வில் ராஜேஷூம் மோதுகிறார்கள். எளிமையாகப் பழகுவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் களத்தில் இறங்கி வேலை பார்ப்பது ஆகியவை சுந்தரராஜனுக்கு ப்ளஸ். ராஜேஷூக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் இருந்தாலும், மக்களிடம் நெருங்கி வராமல் இருப்பது மைனஸ். வெங்கடேஷின் தலையீட்டால் உள்ளூர் அ.தி.மு.க-வினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிலைமை இழுபறியே!
சேலம் - மேற்கு
பா.ம.க-வில் இரா.அருளும், தி.மு.க-வில் சேலத்தாம்பட்டி ராஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள். சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் புதுமுக வேட்பாளர் என்றாலும், சுற்றிச் சுழன்று தேர்தல் வேலைகளைச் செய்கிறார். அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள், சொந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளுக்குச் சென்றுவிட்டதால், தனித்துவிடப்பட்டிருக்கிறார் அருள். இதனால், சேலத்தாம்பட்டி ராஜேந்திரனே முந்துகிறார்.
சேலம் - வடக்கு
அ.தி.மு.க-வில் சேலம் மேற்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ வெங்கடாசலமும், தி.மு.க-வில் இதே தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் மோதுகிறார்கள். இருவருமே கட்சிரீதியாக மாவட்ட அளவில் பொறுப்பிலிருக்கிறார்கள். பணபலம், அதிகார பலத்தில் சமமாக இருப்பதால், போட்டி வலுவாக இருக்கிறது. ஆனாலும், தொகுதி மாறிப் போட்டியிடுவது, பா.ஜ.க கூட்டணியால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி ஆகியவை வெங்கடாசலத்துக்கு மைனஸ். அதனால், தொகுதியைத் தக்கவைக்கிறார் ராஜேந்திரன்.
சேலம் - தெற்கு
அ.தி.மு.க-வில் பாலசுப்ரமணியன், தி.மு.க-வில் சரவணன், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்தத் தொகுதியில் செட்டியார் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. பாலசுப்ரமணியன், சரவணன் இருவருமே அதே சமூகத்தைச் சேர்ந்த புதுமுக வேட்பாளர்கள். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சக்திவேலுக்கு சீட் கிடைக்காததால் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாலும், தொகுதியில் ஓரளவுக்குச் செல்வாக்கு பெற்ற அ.ம.மு.க வேட்பாளர் வெங்கடாசலம், அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிப்பதாலும் சரவணன் முந்துகிறார்.
வீரபாண்டி
அ.தி.மு.க-வில் ராஜமுத்து, தி.மு.க-வில் டாக்டர் தருண், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கேசெல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செல்வம் அ.தி.மு.க-வின் ஓட்டுகளைக் கணிசமாகப் பிரிப்பது, ராஜமுத்துவுக்கு மைனஸ். வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் மருமகன் என்பதால், தருணுக்குக் கட்சியினரின் கரிசனம் இருக்கிறது. இது அவருக்கு ப்ளஸ். ரேஸில் தருண் முந்துகிறார்.
அரவக்குறிச்சி
தி.மு.க-வில் புதுமுக வேட்பாளர் இளங்கோவும், பா.ஜ.க-வில் மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலையும் மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது தொகுதியில் நிலவும் அதிருப்தி, இளைஞர்களின் வாக்குவங்கி அண்ணாமலைக்கு ப்ளஸ். ஆனால், தொகுதியின் வெற்றியை நிர்ணயிப்பது, பள்ளப்பட்டி, சின்ன தாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள்தான். அவற்றில், 80 சதவிகித வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்காது என்பதால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோ முந்துகிறார்.
கரூர்
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க சார்பிலும், செந்தில் பாலாஜி தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். அரசியல் வாழ்க்கையில் இவர்கள் இருவரும் பரம எதிரிகள் என்பதால், கடும் போட்டி நிலவுகிறது. கடந்தமுறை வெறும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் பார்டரில்தான் பாஸ் செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இது அவருக்கு மைனஸ். தேர்தல் வியூகம், புதுமையான வாக்குறுதிகள், அணுகுமுறை போன்றவற்றால் செந்தில் பாலாஜிதான் முந்துகிறார்.
கிருஷ்ணராயபுரம் (தனி)
அ.தி.மு.க-வில் தானேஷ் என்கிற முத்துக்குமாரும் தி.மு.க-வில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரியும் போட்டியிடுகிறார்கள். இரட்டை இலைமீது பாசம் காட்டும் வாக்காளர்கள் நிறைந்த தொகுதி என்பது முத்துக்குமாருக்கு ப்ளஸ். குளித்தலை தொகுதியைச் சேர்ந்தவர் என்பது சிவகாமசுந்தரிக்கு மைனஸ். ஆனாலும், அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ கீதா மீதுள்ள அதிருப்தி, அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சிப்பூசல் ஆகியவை சாதகமாக இருப்பதால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிவகாமசுந்தரி முந்துகிறார்.
குளித்தலை
தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கமும், அ.தி.மு.க-வில் என்.ஆர்.சந்திரசேகரும் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் அதிகம் வசிக்கும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது மாணிக்கத்துக்கு ப்ளஸ். தொகுதியில் பரவலாக இருக்கும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீனி.பிரகாஷும், அ.ம.மு.க வேட்பாளர் நிரோஷாவும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தச் சமூக ஓட்டுகள் பிரிகின்றன. மேலும், அ.தி.மு.க-வில் நிலவும் கடுமையான உட்கட்சிப்பூசல் சந்திரசேகருக்கு எதிராக இருப்பதால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் முந்துகிறார்.
source https://www.vikatan.com/news/election/salem-karur-districts-assembly-election-survey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக