ஆர்.கே.நகர்
அ.தி.மு.க-வில் ராஜேஷும், தி.மு.க-வில் எபிநேசரும் களம்காண்கிறார்கள்.
ஜெயலலிதா இருமுறை வெற்றிபெற்றுள்ள இந்தத் தொகுதி பொதுவாகவே அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது. மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் ராஜேஷுக்குத் தொகுதிக்குள் நல்ல பரிச்சயம் இருக்கிறது. தினகரனுக்கு எதிராக 20 ரூபாய் டோக்கனை வைத்து போராட்டம் நடத்தி, மக்களிடையே பிரபலமானார். ராஜேஷ் தாராளமாகச் செலவு செய்வது அவருக்கு ப்ளஸ். சிறுபான்மையினர் வாக்குகள் எபினேசருக்குக் கைகொடுத்தபோதும், தி.மு.க-வின் பிரசாரம் எடுபடவில்லை. உள்ளூர் செல்வாக்கால் ராஜேஷ் முந்துகிறார்.
பெரம்பூர்
அ.தி.மு.க கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகரும் போட்டியிடுகின்றனர். இங்கு தி.மு.க ஆறு முறையும், சி.பி.எம் கட்சி மூன்று முறையும் வெற்றிபெற்றுள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்பதால், இடதுசாரி வாக்குகள் சேகருக்குக் கைகொடுக்கின்றன. தொகுதியில் நாடார் சமூக மக்கள் கணிசமாக இருந்தாலும், தனபாலன் கூட்டணி மாறி மாறிப் போட்டியிடுவதால் அவர்மீது மக்களுக்குப் பெரிதாக அபிப்ராயம் இல்லை. பெரம்பூரில் சேகரின் கையே ஓங்குகிறது.
கொளத்தூர்
அ.தி.மு.க-வில் ஆதிராஜாராமும், தி.மு.க-வில் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்தே அங்கு கோலோச்சுகிறார் ஸ்டாலின். பிரசாரத்தின் தொடக்க நாள்களில் தடபுடல் காட்டிய அ.தி.மு.க-வினர் நாள்கள் செல்லச் செல்ல நம்பிக்கையிழந்து, பதுங்கிவிட்டனர். இது ஆதிராஜாராமுக்குப் பெரும் மைனஸ். ஸ்டாலினுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கே அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியைப் பறிக்கச் செய்கிறது!
வில்லிவாக்கம்
அ.தி.மு.க-வில் ஜெ.சி.டி.பிரபாகரும், தி.மு.க-வில் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகனும் மோதுகிறார்கள். தொகுதி மக்களிடம் பெரிதாக அறிமுகமில்லை என்பது வெற்றி அழகனுக்கு மைனஸ். தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவரின் ஆதரவாளர்கள் பெரிதாகத் தேர்தல் பணி செய்வதில்லை.
ஜெ.சி.டி.பிரபாகர் மக்களிடையே பரிச்சயமானவர் என்றபோதும், பன்னீரின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் லேசாகச் சுணக்கம் காட்டுகிறார்கள். தொகுதியில் கணிசமாக இருக்கும் பட்டியலின, சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க-வுக்கே செல்வதால், வெற்றி அழகன் முந்துகிறார்.
திரு.வி.க நகர் (தனி)
அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சியில் பி.எல்.கல்யாணியும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தாயகம் கவியும் போட்டியிடுகின்றனர். தொகுதி கிடைக்காத அ.தி.மு.க நிர்வாகிகள், பி.எல்.கல்யாணிக்குத் தேர்தல் பணிகளைச் செய்வதில்லை. கல்யாணிக்குத் தொகுதி மக்களிடையே அறிமுகமும் இல்லை. இவையெல்லாம் த.மா.க-வுக்கு மைனஸ். தொகுதியில் மக்கள் பணிகளை ஓரளவு செய்திருப்பதும், மக்களிடையே நல்ல பரிச்சயம் இருப்பதும், கட்சி கட்டமைப்பு வலுவாக இருப்பதும் தாயகம் கவிக்கு ப்ளஸ். மேற்கண்ட காரணங்களால், கெளவரமான வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது தி.மு.க.
எழும்பூர் (தனி)
அ.தி.மு.க கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும், தி.மு.க-வில் ஐ.பரந்தாமனும் போட்டியிடுகிறார்கள். 2001 சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன், வெறும் 86 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததால், இந்த முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறார். இவர் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தியே, ‘வெற்றிபெற்றால், ஜான் பாண்டியன் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்’ என்று பரந்தாமன் தரப்பு பிரசாரம் செய்வது மக்களிடையே எடுபடுகிறது. கள நிலவரம் தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கிறது.
ராயபுரம்
அ.தி.மு.க-வில் அமைச்சர் ஜெயக்குமாரும், தி.மு.க-வில் ‘ஐட்ரீம்ஸ்’ இரா.மூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். கடந்த நான்குமுறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற ஜெயக்குமாருக்கு தொகுதி முழுவதும் அத்துப்படி என்பது அவருக்கு ப்ளஸ். ஆனால், சீன இன்ஜின் படகு பிரச்னையால் தொகுதியில் கணிசமாக இருக்கும் மீனவர்களிடையே அதிருப்தி நிலவுவது, சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க-வுக்கு ஆதரவாக இருப்பது ஜெயக்குமாருக்கு மைனஸ். பாரம்பர்யமான தி.மு.க-காரர் என்று அறியப்பட்ட ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ஜெயக்குமாருக்குக் கடும் டஃப் கொடுக்கிறார். அவருக்குக் கட்சியின் வலுவான உள்கட்டமைப்பும் கைகொடுக்கிறது. போட்டி கடுமையாக இருந்தாலும், இழுத்துப் பிடித்து முன்னேறுகிறார் ஜெயக்குமார்.
துறைமுகம்
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் வினோஜ் பி.செல்வமும், தி.மு.க-வில் சேகர்பாபுவும் போட்டியிடுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ சேகர்பாபு தொகுதியைத் தக்கவைக்க கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக மக்கள் பணிகளைச் செய்துவருகிறார். தொகுதியில் கணிசமான இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருப்பதும், கட்சியிலிருக்கும் செல்வாக்கும் இவருக்கு ப்ளஸ். தேர்தல் வேலைகளில் வினோஜ் பெரிதாக வேகம் காட்டவில்லை என்பது அவருக்கு மைனஸ். தொகுதியிலிருக்கும் வடஇந்தியர் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ப்ளஸ். ஆனாலும், கணிசமான இஸ்லாமியர் ஓட்டுகள் கைகொடுப்பதால், கெளரவமான வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறார் சேகர்பாபு.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வில் கஸ்ஸாலியும், தி.மு.க-வில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் களம்காண்கிறார்கள். தொகுதி வாக்காளர்களில் பாதியளவுக்கு இஸ்லாமியர்கள் இருப்பது, முதன்முறையாகக் களம்காணும் உதயநிதிக்கு ப்ளஸ். கஸ்ஸாலி 2016-ல் பா.ம.க சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர் என்பது மட்டுமே தொகுதியில் அவருக்கான அறிமுகம். தவிர, அ.தி.மு.க-வினரும் இவருக்காகத் தேர்தல் வேலை பார்க்காதது கஸ்ஸாலிக்குப் பெரும் மைனஸ். இதனால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஆயிரம் விளக்கு
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வில் குஷ்புவும், தி.மு.க-வில் டாக்டர் எழிலனும் போட்டியிடுகிறார்கள். சினிமா பிரபலம் என்பது குஷ்புவுக்கு ப்ளஸ். தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் சமூக வாக்குகள் தனக்குக் கிடைக்கும் என்பது குஷ்புவின் நம்பிக்கை. ஆனால், பா.ஜ.க-வில் குஷ்பு இருப்பது, இஸ்லாமியர் ஓட்டுகளை அவர் பக்கம் திருப்பாது என்பது குஷ்புவின் மைனஸ். எழிலன், தொகுதி மக்களுக்குப் பரிச்சயமில்லாதவர் என்றாலும், தொகுதிக்குள் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, தி.மு.க நிர்வாகிகளின் தீவிரமான தேர்தல் பணிகள் தி.மு.க-வைக் கரைசேர்க்கின்றன.
அண்ணா நகர்
அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனும் போட்டியிடுகிறார்கள். தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாகப் பயன்படுத்தாதது, தொகுதிக்குள் அவ்வளவாகத் தலைகாட்டாதது ஆகிய குறைகள் இருந்தாலும், கொரோனா காலத்தில் கணிசமான நிவாரண உதவிகளைச் செய்து அதிருப்தியைச் சரிக்கட்டியிருக்கிறார் மோகன். படித்தவர்கள், மொழிவழிச் சிறுபான்மையினர் வாக்குகளும் மோகனுக்குக் கைகொடுக்கின்றன. மாவட்டச் செயலாளர் சத்யாவின் ஆதரவாளர்கள் கோகுல இந்திராவுக்குப் பணி செய்ய மறுப்பது அவருக்கு மைனஸ். போட்டியில் தி.மு.க-வே முந்துகிறது.
விருகம்பாக்கம்
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ விருகை ரவியும், தி.மு.க-வில் பிரபாகர் ராஜாவும், ம.நீ.ம கட்சியில் சினேகனும் மோதுகிறார்கள். விருகை ரவி தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளைச் செய்திருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை அவருக்கு மைனஸ். வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜாவின் மகன் என்பதும், தொகுதிக்குள் இருக்கும் கோயம்பேடு வியாபாரிகளின் ஆதரவும், நாடார்கள் வாக்குகள் பிரபாகர் ராஜாவுக்கு ப்ளஸ். தே.மு.தி.க மற்றும் ம.நீ.ம வாக்குகளும் அ.தி.மு.க வாக்குவங்கியில் ஓரளவுக்குச் சேதாரத்தை ஏற்படுத்துவதால், பிரபாகர் ராஜா முந்துகிறார்.
சைதாப்பேட்டை
அ.தி.மு.க-வில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனும் களம்காண்கிறார்கள். அ.ம.மு.க-வில் போட்டியிடும் செந்தமிழன், தொகுதியில் கணிசமாக இருக்கும், தான் சார்ந்த வன்னியர் வாக்குகளைப் பிரிக்கிறார். இது பா.ம.க-வுடன் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க-வுக்கு மைனஸ். சைதை துரைசாமி ஆக்டிவ் அரசியலில் இல்லாதது அவருக்கு மைனஸ். மா.சுப்பிரமணியன் எளிமையானவர், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது அவருக்கு ப்ளஸ். மேற்கண்ட காரணங்களால் தொகுதியைத் தக்கவைக்கிறார் மா.சுப்பிரமணியன்.
தி.நகர்
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சத்திய நாராயணாவும், தி.மு.க-வில் மறைந்த ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதியும் களம்காண்கிறார்கள். பொதுவாகவே அ.தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதி இது. பா.ம.க கூட்டணியில் இருப்பது கூடுதல் பலம்.மேற்கு மாம்பலத்தின் பா.ஜ.க ஆதரவு வாக்குகளும் சத்தியாவுக்குக் கைகொடுக்கின்றன. ஆனால், தொகுதியில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வியாபாரிகளிடம் சத்தியா செய்த ‘பஞ்சாயத்துகள்’ அவருக்கு மைனஸ். கருணாநிதிக்குத் தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லாதது அவருக்கு மைனஸ். ம.நீ.ம சார்பில் பழ.கருப்பையாவும் ஓரளவுக்கு ஓட்டுகளைப் பிரிக்கும் நிலையில், கடைசி நேரத்தில் முந்துகிறார் சத்தியா.
மயிலாப்பூர்
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நட்ராஜும், தி.மு.க-வில் மயிலை த.வேலுவும் போட்டியிடுகிறார்கள். பொதுவாகவே இதை `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்பார்கள். அதனாலேயே, பெரும்பாலும் மயிலாப்பூரைக் கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கிவிடும். ஆனாலும், இந்தமுறை நம்பிக்கையுடன் வேலுவை கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது. ஆனால், குறுகியகாலத்தில் கட்சியில் அவர் வளர்ச்சியடைந்ததால், சொந்தக் கட்சியினரே அவருக்கு உள்ளடி வேலை பார்க்கிறார்கள். தொகுதிக்குள் கட்சிக் கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பதும், தொகுதியில் பரவலாக இருக்கும் நட்ராஜின் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் நட்ராஜைக் கரைசேர்க்கின்றன.
வேளச்சேரி
அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.அசோக், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஹெச்.ஹசன் மோதுகிறார்கள். தொடக்கத்தில் சுணக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரசாரம், ராகுல் காந்தியின் வேளச்சேரி வருகைக்குப் பிறகு வேகமெடுத்திருக்கிறது. அசோக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது, மக்கள் மத்தியில் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ம.நீ.ம சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கணிசமான வாக்குகளைப் பெறுகிறார். தி.மு.க-வின் கட்டமைப்பு இங்கு பலமாக இருப்பதால் ஹசன் முந்துகிறார்.
கும்மிடிப்பூண்டி
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் பிரகாஷ், தி.மு.க-வில் கோவிந்தராஜன் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமாருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதால், அவரின் ஆதரவாளர்கள் பா.ம.க-வுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இது தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. கோவிந்தராஜனின் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் வாக்குகள் எனத் தொகுதியின் கணிசமான வாக்குகள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கோவிந்தராஜ். கள நிலவரத்தில் முந்துகிறார் கோவிந்தராஜன்.
பொன்னேரி (தனி)
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சிறுனியம் பலராமனும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் துரை.சந்திரசேகரும் மோதுகிறார்கள். அதானி துறைமுக விரிவாக்கப் பிரச்னை தொகுதிக்குள் பலராமனுக்கு பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது பலராமனுக்கு மைனஸ். துரை.சந்திரசேகருக்கு தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது துரை.சந்திரசேகருக்கு மைனஸ். போட்டி கடுமையாக இருந்தாலும், அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகளால் காங்கிரஸ் கரை சேர்கிறது.
திருத்தணி
அ.தி.மு.க-வில் கோ.அரியும், தி.மு.க-வில் சந்திரனும் போட்டியிடுகின்றனர். 1996-க்கு பிறகு இந்தத் தேர்தலில்தான் தி.மு.க - அ.தி.மு.க நேரடியாக மோதுகின்றன. பா.ம.க., அ.தி.மு.க கூட்டணியால் கோ.அரிக்கு வன்னியர்கள் ஓட்டுகள் அதிகம் கிடைப்பது அவருக்கு ப்ளஸ். சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு கிடைப்பது சந்திரனுக்கு ப்ளஸ். போட்டியில் முந்துகிறார் சந்திரன்.
திருவள்ளூர்
அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ரமணாவும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். தொகுதி மக்களைச் சந்திப்பதில்லை என்ற புகாரால், வி.ஜி.ராஜேந்திரன் மீது அதிருப்தி நிலவுகிறது. குட்கா வழக்கு, உட்கட்சிப் பூசல், பா.ஜ.க கூட்டணி ஆகியவை ரமணாவுக்கு மைனஸ். ஆரம்பத்தில் இந்தத் தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாக இருந்தாலும், ரமணாவின் பிரசார வியூகம், சிறப்பான ‘கவனிப்பால்’ அ.தி.மு.க முந்துகிறது.
பூந்தமல்லி (தனி)
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வின் இராஜமன்னாரும், 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் மோதுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் புரட்சி பாரதம் கட்சியினரின் வாக்குவங்கி கணிசமாக இருக்கும் இந்தத் தொகுதியில், அவர்களுக்கு சீட் தராததால் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வினருக்கும் சீட் கிடைக்காததால், அவர்களும் இறங்கி வேலை செய்யவில்லை. இவையெல்லாம் தி.மு.க-வுக்கு ப்ளஸ். மேற்கண்ட காரணங்களால் கிருஷ்ணசாமி முந்துகிறார்.
ஆவடி
அ.தி.மு.க-வில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், தி.மு.க-வில் நாசரும் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் அமைச்சர் பாண்டியராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்த நாசர், இந்த முறை வெற்றிபெறத் தீவிரமாக வேலைபார்க்கிறார். சிறுபான்மையினர் ஓட்டுகள் நாசருக்குச் சிதறாமல் கிடைப்பது அவருக்கு ப்ளஸ். அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகள், உட்கட்சிப் பூசல்கள் பாண்டியராஜனுக்கு மைனஸ். போட்டியில் முந்துகிறார் நாசர்.
மதுரவாயல்
அ.தி.மு.க-வில் அமைச்சர் பென்ஜமினும், தி.மு.க-வில் காரம்பாக்கம் கணபதியும் மோதுகின்றனர். சீட் கிடைக்காத தி.மு.க-வினரின் உள்ளடி வேலை கணபதிக்கு மைனஸ். பா.ஜ.க மீதான மக்களின் அதிருப்தி மனநிலை, சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காதது பென்ஜமினுக்கு மைனஸ். கடும் போட்டி நிலவுவதால், கடைசி நேரத்தில் வாக்காளர்களை ‘வெயிட்டாக’ கவனிக்கத் திட்டமிட்டிருக்கிறது அமைச்சர் தரப்பு. இதனால், மதுரவாயலில் நிலைமை இழுபறியே!
அம்பத்தூர்
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டரும், தி.மு.க-வில் ஜோசப் சாமுவேலும் களம்காண்கிறார்கள். தொகுதியில் 35 சதவிகிதம் இருக்கும் ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுகள் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் என்பது ஜோசப் சாமுவேலுக்குச் சாதகம். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வினர் ஒத்துழைப்பு இல்லாததால், வன்னியர்களின் ஓட்டுகளும் அ.தி.மு.க-வுக்கு முழுமையாகக் கிடைக்குமா என்று தெரியவில்லை. தி.மு.க-வே இங்கு முந்துகிறது.
மாதவரம்
அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியும், தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ சுதர்சனமும் மோதுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக தொகுதிப் பக்கம் அதிகம் தலைகாட்டவில்லை என்பது சுதர்சனத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியிலிருக்கும் கணிசமான வன்னியர்கள் ஓட்டுகளைக் குறிவைத்தே அத்தனை கட்சிகளும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன. வன்னியர் ஓட்டுகள் சிதறுவதாலும், அ.ம.மு.க வேட்பாளர் தட்சிணாமூர்த்தி பிரிக்கும் ஓட்டுகளாலும் மூர்த்தி பின்தங்குகிறார். மேற்கண்ட காரணங்களாலேயே தொகுதியைத் தக்கவைத்துக்கொள்கிறார் சுதர்சனம்.
திருவொற்றியூர்
அ.தி.மு.க-வில் கே.குப்பனும், தி.மு.க-வில் கே.பி.சங்கரும், நாம் தமிழர் கட்சியில் சீமானும் போட்டியிடுகின்றனர். தொகுதியிலிருக்கும் மீனவர், ஆதிதிராவிடர் சமூகத்தினரின் கணிசமான வாக்குகள் தி.மு.க-வுக்கு ப்ளஸ். சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த கே.பி.பி.சாமி மறைந்ததால், அந்த அனுதாப அலையும் அவரின் தம்பியான சங்கருக்குக் கைகொடுக்கிறது. அ.ம.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் ஓட்டுகளும் குப்பனுக்கு மைனஸ். இதனால், கே.பி.சங்கரே முந்துகிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/election/2021-tamil-nadu-assembly-election-survey-chennai-thiruvallur-districts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக