ஆலந்தூர்
கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, இம்முறை ஆலந்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன் மீண்டும் களம்காண்கிறார். கூட்டணி பலம், அன்பரசனின் செல்வாக்கு, தொகுதி மக்களிடம் இருக்கும் நற்பெயர் காரணமாக தா.மோ.அன்பரசனே மீண்டும் தொகுதியைத் தக்கவைக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி)
அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ பழனியும், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் மோதுகிறார்கள். எளிதில் அணுகக்கூடியவர் என்பது பழனியின் ப்ளஸ். அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் மொளச்சூர் பெருமாள் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். அது, பழனிக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். காங்கிரஸுக்குச் செல்வாக்கான இந்தத் தொகுதியில் தி.மு.க-வினரும் இறங்கி வேலை செய்வது செல்வப்பெருந்தைக்கு ப்ளஸ். ஆகவே, செல்வப்பெருந்தகை முந்துகிறார்.
உத்திரமேரூர்
தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ சுந்தரும், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரமும் மோதுகிறார்கள். இதே தொகுதியில் நான்கு முறை வெற்றிபெற்ற சுந்தர், தொகுதி மக்களுடன் தனிப்பட்ட முறையில் நெருங்கிப் பழகுபவர் என்ற இமேஜ் இருக்கிறது. தொகுதியின் பெரும்பான்மைச் சமூகத்தினரான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். தொகுதியில் சீட் கிடைக்காத ரஞ்சித்குமார், அ.ம.மு.க-வில் இணைந்து வேட்பாளராகவும் ஆகிவிட்டார். அவர் அ.தி.மு.க வாக்குகளை கணிசமாகக் கவர்வார். அதனால், தொகுதியை சுந்தர் தக்கவைத்துக்கொள்வார்.
காஞ்சிபுரம்
பா.ம.க-வின் மகேஷ்குமாரும், தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ எழிலரசனும் மோதுகிறார்கள். எழிலரசனின் கடந்த ஐந்தாண்டுக்கால செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும், மக்கள் மத்தியில் அவர்மீது பெரிய அதிருப்தி கிடையாது. அ.தி.மு.க-வுக்குத் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்திருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலர், அ.ம.மு.க வேட்பாளர் மனோகரனுக்கு மறைமுக ஆதரவு தருகிறார்கள். இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையேயும் ஒற்றுமை இல்லை. இது மகேஷ்குமாருக்கு மைனஸ். ஆகவே, தி.மு.க-வே முந்துகிறது.
சோழிங்கநல்லூர்
தமிழகத்திலே அதிக வாக்காளர்களைக்கொண்ட இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வில் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷும் களம்காண்கிறார்கள். தொகுதியின் ஊராட்சிப் பகுதிகளில் தி.மு.க-வின் ஓட்டுவங்கி பலமாக இருக்கிறது. தொகுதிக்குள் வரும் சென்னை பெருமாநகராட்சியின் சில வார்டுகளில் அ.தி.மு.க பலமாக இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கியிருப்பது தி.மு.க-வுக்குக் கூடுதல் பலம். இத்துடன் சிறுபான்மையினர் ஓட்டுகளும் கிடைப்பதால், அரவிந்த் ரமேஷ் இங்கு முந்துகிறார்.
பல்லாவரம்
அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராசேந்திரனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ இ.கருணாநிதியும் மோதுகிறார்கள். தொகுதியில் கருணாநிதி செய்த பணிகள் அவருக்கு ப்ளஸ். சொந்தக் கட்சியினர் சிலரே உள்ளடி வேலை பார்ப்பது ராசேந்திரனுக்கு மைனஸ். இருவரும் தீவிரமாக வேலை பார்த்தாலும் சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் ஓட்டு வங்கி, தொகுதியிலிருக்கும் அரசு ஊழியர்கள் வாக்குகளால் தி.மு.க முந்துகிறது.
தாம்பரம்
அ.தி.மு.க-வில் 2011-ல் தாம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற டி.கே.எம்.சின்னையா, தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா போட்டியிடுகிறார்கள். சின்னையா ஐந்தாண்டுகள் இடைவெளிவிட்டது அவருக்கு மைனஸ். அ.ம.மு.க-வில் கரிகாலன் வாக்குகளைப் பிரிப்பதும் சின்னையாவுக்கு மைனஸ். கூடுதலாக, தற்போது தொகுதியில் பெரும் பிரச்னையாக இருக்கும் மேம்பாலப் பிரச்னையை சரிசெய்வதாக ராஜா கொடுக்கும் வாக்குறுதி மக்களிடம் எடுபடுகிறது. தவிர, தொகுதியில் சிறு சிறு பணிகள் செய்திருப்பதால், ராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது அவருக்கு ப்ளஸ். மேற்கண்ட காரணங்களால் முந்துகிறார் ராஜா.
செங்கல்பட்டு
அ.தி.மு.க-வில் கஜா என்கிற கஜேந்திரனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க-வில் ஐபேக் பரிந்துரையையும் மீறி வரலட்சுமி மதுசூதனுக்கு இரண்டாவது முறையாக சீட் வழங்கப்பட்டிருப்பது சொந்தக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், சிறுபான்மையினர் ஓட்டுகள் உட்பட தி.மு.க-வின் வாக்குவங்கி அவருக்கு ப்ளஸ். எப்படியாவது வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று கஜேந்திரன் பணத்தை வாரியிறைக்கிறார். இவருக்குக் கட்சி தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதும், பா.ம.க கூட்டணியில் இருப்பதும் ப்ளஸ். இருவரும் சமபலத்துடன் மோதுவதால், நிலைமை இழுபறியே!
திருப்போரூர்
பா.ம.க-வில் திருக்கச்சூர் ஆறுமுகமும், வி.சி.க கட்சியில் எஸ்.எஸ்.பாலாஜி மோதுகிறார்கள். அரசியல் எதிரிகளான பா.ம.க-வும், வி.சி.க-வும் நேருக்கு நேர் மோதும் தொகுதி என்பதால், போட்டி கடுமையாக இருக்கிறது. பானைச் சின்னத்தில் போட்டியிடுவது பாலாஜிக்கு எடுபடவில்லை என்றாலும், பட்டியல் மற்றும் வன்னியர் சமூகம் அல்லாத இதர சமூக வாக்குகளும் இவருக்குக் கைகொடுப்பது ப்ளஸ். அ.ம.மு.க-வின் வேட்பாளர் கோதண்டபாணி, அ.தி.மு.க வாக்குவங்கியில் சிறு சேதாரத்தை ஏற்படுத்துகிறார். 2019 திருப்போரூர் இடைத்தேர்தலில் தி.மு.க இங்கு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது வி.சி.க-வுக்குத் தெம்பைத் தருகிறது. இதனால், இழுத்துப் பிடித்து கரைசேர்கிறார் பாலாஜி.
செய்யூர் (தனி)
அ.தி.மு.க-வில் கணிதா சம்பத்தும், தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வில் பனையூர் பாபுவும் போட்டியிடுகிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க., சுமார் 18,000 வாக்குகளைப் பெற்றதால், இந்தமுறை தொகுதியை நம்பிக்கையுடன் கேட்டு வாங்கியிருக்கிறது. கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியிலிருந்த கூட்டணிக் கட்சிகள் இந்தமுறை தி.மு.க-வுடன் இருப்பதும் வி.சி.க-வுக்கு பலம். தொகுதியிலிருக்கும் கணிசமான வன்னியர் சமூக வாக்குகள் கணிதா சம்பத்துக்கு ப்ளஸ் என்றாலும், சொந்தக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது அவருக்கு மைனஸ். மேற்கண்ட காரணங்களால் வி.சி.க முந்துகிறது.
மதுராந்தகம் (தனி)
அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி மரகதம் குமரவேலும், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வின் மல்லை சத்யாவும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி மீது தொகுதியில் பெரிய அளவில் அதிருப்தி இல்லாததும், நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமலிருந்த மதுராந்தகம் ஏரியைத் தூர்வாருவதற்கு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை புகழேந்தி பெற்றுத் தந்திருப்பதும் தி.மு.க கூட்டணிக்கு பலம். மரகதம் குமரவேலுக்குக் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடப்பது அவருக்கு மைனஸ். இதனால், மல்லை சத்யாவே முந்துகிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/election/2021-tamil-nadu-assembly-election-survey-kanchipuram-chengalpattu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக