Ad

சனி, 20 மார்ச், 2021

மதுர ருசி: பரோட்டா, நாட்டுக்கோழி, மட்டன் சுக்கா... மணக்கும் மசாலா வாசம், மார்க்கெட்டெங்கும் வீசும்!

எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை தெற்குவாசல் மார்க்கெட் ஏரியா, மாலையானதும் மசாலா வாசத்தால் மணமணக்க ஆரம்பித்துவிடும். அதற்கு காரணம், அங்கு அமைந்திருக்கும் சுகன்யா ஹோட்டல்.
நாட்டுக்கோழி கிரேவி

செட் பரோட்டா என்று சொல்லப்படும் கொத்து பரோட்டாவை நையப் புடைக்கும் சத்தம், பாரம்பர்ய இசைபோலக் கேட்க, காற்றில் மிதந்து வரும் மசாலா மணத்தில் ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் நம்மை, 'வாங்க வாங்க' என்று அழைக்க ஆரம்பித்துவிடும்.

30 வருடங்களுக்கு முன் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட சுகன்யா ஹோட்டல், அதன் சுவைக்காக மக்கள் படையெடுக்கும் ஹோட்டலாக மாறிப்போனது. சிறியதும் பெரியதுமாக தெற்குவாசல் பகுதியில் பல ஹோட்டல்கள் இருந்தாலும் சுகன்யாவுக்கென்றே சாமானியர் முதல் வசதியானவர் வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பரோட்டா சால்னா

பெரும்பாலான ஹோட்டல்களில் வார இறுதி நாள்களில்தான் பார்சலுக்கான கூட்டம் அதிகம் வரும். ஆனால், இங்கு தினமும்!

அப்படி என்ன இந்த ஹோட்டலில் விசேஷம் என்று கேட்பவர்களுக்குச் சொல்ல நிறைய இருக்கு.

கொத்து பரோட்டா
மட்டன், சிக்கன் பிரியாணி, பரோட்டா, முட்டை பரோட்டா, கறி பரோட்டா, கொத்து பரோட்டா, இடியாப்பம், தோசை, கறி தோசை, ஊத்தப்பம் ஆகியவை மெயின் அயிட்டங்கள்...
மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி, ஈரல், குடல் கிரேவி, மூளை ப்ரை, எலும்புக் குழம்பு, முட்டைக்கறி, நாட்டுக்கோழி சாப்ஸ், காடை வறுவல், பிராய்லர் கோழி கிரேவி, ப்ரை, ரோஸ்ட் என இதன் மெனு நீளும்.
நாட்டுக்கோழி

அதிலும் இவர்கள் தயார் செய்யும் பரோட்டாக்கள் தனித்துவமானவை. அதிலும் கொத்து பரோட்டோ தனி ருசியானது. அதை அவர்கள் உருவாக்கும் விதம் தனிக் கலை. இங்கு வெளிப்படையான கிச்சன் என்பதால் தயாரிக்கும் உணவுகளை நேரடியாகப் பார்க்கலாம்.

இங்கு ரெண்டு பரோட்டா வாங்க வந்தாலும் ரெண்டாயிரம் ரூபாய்க்குச் சாப்பிட வந்தாலும் கவனிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும். டிபன் வாங்கிவிட்டு சைடிஷ் ஆர்டர் பண்ணாவிட்டாலும் 3 வகையான குழம்பு கொடுத்து உங்களைத் திணற அடிப்பார்கள். சில வாடிக்கையாளர்கள் கேட்பதால் சைனீஷ் உணவுகளையும் வைத்திருக்கிறார்கள்.

சுகன்யா ஹோட்டல்

பஞ்சு போன்ற பரோட்டோ, வெரைட்டியான சால்னா ருசிக்காக மக்கள் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். அதிலும் இவர்கள் தரும் எலும்புக் குழம்பு தனி ரகம்.

Also Read: மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!

ஹோட்டல் உரிமையாளர் சங்கர் நம்மிடம், "வெரைட்டியான உணவுகள், வீட்டு ருசி, அன்பான கவனிப்பு, நியாயமான விலை, கலப்படமில்லாத பொருள்கள்... இதனால்தான் எங்கள் ஹோட்டலைத் தேடி மக்கள் வருகிறார்கள். பல வருடங்களாக இப்பகுதியில் ஹோட்டல் நடத்தி இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்காரர்களும் தேடிவரும் வகையில் வளர்ந்திருக்கிறோம். எப்போதும் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்" என்றார்.

அப்புறம் என்ன, மதுரை வரும்போது தெற்குவாசல் சுகன்யா ஹோட்டலுக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போங்க.


source https://www.vikatan.com/health/food/madurai-foods-madurai-market-special-non-veg-menu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக