புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தி.மு.க வேட்பாளர்களான திருமயம் ரகுபதி, புதுக்கோட்டை டாக்டர்.முத்துராஜா, ஆலங்குடி மெய்ய நாதன், விராலிமலை பழனியப்பன், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான காங்கிரஸ் அறந்தாங்கி ராமச்சந்திரன், சிபிஎம் கந்தர்வக்கோட்டை சின்னதுரை ஆகியோரை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, திறந்த வேனில் நின்றவாறு பேசிய ஸ்டாலின், ``புதுக்கோட்டை மாவட்டத்தின் அவமானச் சின்னமாக குட்கா புகழ் விஜயபாஸ்கர் இருக்கிறார். குட்கா பாஸ்கர், குவாரி பாஸ்கர், சிபிஐ பாஸ்கர் எனப் பல பெயர்களையும் கொண்டிருக்கிறார்.
கொடிய நோயான கொரோனாவிலும் ஊழல் செய்தவர். மக்கள் நலன் கருதி மக்கள் நல்வாழ்வுத்துறை உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தத் துறை மந்திரி விஜயபாஸ்கர் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் குட்கா விற்பனைக்குத் துணை நின்றார். இந்த குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் குட்கா ஊழல் செய்தது. டி.ஜி.பி ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தொடர்பிலிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிஐ விசாரணையில் இருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிகளவு பணம் பகிரங்கமாக பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால், தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. அப்போது, விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது.
அதில், யார் யாருக்கு எவ்வளவு தொகை என்ற பட்டியலும், அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயரும் இருந்தது. 2017-ல் விஜயபாஸ்கர் குடும்பமே, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது நாடறிந்த உண்மை. அனைத்திலும் அடித்த கொள்ளை போதாதென்று கொரோனாவிலும் கொள்ளையடித்திருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டாமல் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர்.
அதிக விலைக்கு கொரோனா சோதனை கிட் வாங்கியிருக்கிறார்கள். கொள்ளை நடந்திருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில், சட்டமன்றத்தில் முதல்வரைப் பார்த்து,`` நாடு முழுவதும் கொரோனா பரவுகிறது. தமிழ் நாட்டுக்குள்ளும் நுழைகிறது.
தடுக்கும் முயற்சியில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்ற கேட்டேன். முதல்வர் தான் அறிவாளியாச்சே,பதில் சொல்லப்போகிறார் என்று நினைத்தேன். எழுந்து `அம்மா ஆட்சியில கொரோனா எல்லாம் வராது’ என்றார். ஒரு உயிரைக் கூட இழக்க மாட்டோம் என்று சொன்னார். `கொரோனா எல்லாம் ஹார்ட் பேஷ்ன்ட், சர்க்கரை நோயாளிகளுக்குத் தான் வரும்’ என்று அலட்சியமாக பேசினார். அடுத்த நாள், முதலமைச்சர் மாஸ்க் போட்டுக் கொண்டு சட்டமன்றம் வந்தார். ஆதாரத்தோடு சொல்கிறேன் ஒரு மாஸ்கின் ஒரிஜினல் விலை ரூ.5. ஆனால், ரூ.15-க்கு வாங்கியிருக்கிறார்கள். மருந்து தெளிப்பான், பிளீச்சிங் பவுடர் என எல்லாவற்றிலும் கொள்ளை. கொரோனாவிலும் கொள்ளை அடித்த ஆட்சி இந்த ஆட்சி. ஜெயலலிதா அவர்களுக்கு பச்சை துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் பன்னீர் செல்வமும். ஜெயலலிதா மறைவதற்கு முன்பு, 2016 ஜூன் மாதம் பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக அரசு சார்பில் ஒரு மனு கொடுத்திருந்தார்.
ஜி.எஸ்.டி, நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அவர் உயிருடன் இருந்த வரை இந்த திட்டங்களை எல்லாம் ஆதரிக்க முடியாது என்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்த போது, எதையெல்லாம் ஆதரிக்க முடியாது என்று பல்வேறு சட்ட திட்டங்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றனர். இதைவிட ஜெயலலிதாவிற்கு அவர்கள் செய்திருக்கும் பச்சைத் துரோகம் எதுவுமே இருக்க முடியாது. இப்போது வரை, இந்த நிமிடம் வரை பா.ஜ.கவுக்கும், மோடிக்கும் அடிமையாக இருக்கக்கூடியவர்கள் தான் இந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்தல் நேரம் என்பதால், சிறுபான்மையினரை ஆதரிப்பது மாதிரியான நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள், முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆனால், தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது, விவசாயிகளுக்கு ஏதோ செய்யப்போவதாக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் முதல்வராக இருந்த போது, கூட்டுறவு கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்தார். 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், உச்ச நீதிமன்றத்தில் நிதிப் பற்றாக்குறையால் தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிவிட்டுத் தேர்தலுக்காக தற்போது கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்து முதல்வர் நாடகமாடி வருகிறார்.
கலைஞர் ஆட்சியில் ஏராளமான மகளிர் திட்டங்களைக் கொண்டு வந்தோம். தற்போதும், ஏராளமான திட்டங்களை வாக்குறுதிகளில் அறிவித்திருக்கிறோம். குண்டாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டம், புதுக்கோட்டைப் புறவழிச்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், கோட்டைப்பட்டினத்தில் கடல் உணவுகளைப் பதப்படுத்தக் கூடிய குளிர்பதனக் கிடங்கு, திருமயத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, ஜெகதாப்பட்டினம், கீரனூர், மீமிசல், மணமேல்குடியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். புதுக்கோட்டையில் கால் நடை மருத்துவக் கல்லூரி, வேளான் கல்லூரி, மாத்தூர், கீழாத்தூர், பொன்னமராவதி, ஆலங்குடி, திருமயத்தில் தொழிற்பேட்டைகள், அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும்.
விராலிமலை, கீரனூர்,கந்தர்வக்கோட்டையில் உழவர் சந்தை உருவாக்கப்படும். அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி, ஆலவயலில் காய்கறி குளிர்பதன நிலையம் உருவாக்கப்படும். அதோடு, பொன்னமராவதி, ஆலங்குடி, இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும். எல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால், திமுக ஆட்சி மலர வேண்டும். நாம் நன்றாக இருந்தால் தான் குடும்பம் நன்றாக இருக்க முடியும். நம்ம சந்ததி நல்லா இருக்க முடியும். தயவு செய்து கூட்டமாக இருக்கும் இடத்தில் மாஸ்க் போடுங்கள். தடுப்பூசி போடாதவர்கள் உடனே போட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/eps-ops-betrayed-jayalalitha-accuses-mk-stalin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக