இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 80 ரன்கள் குவித்து, இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் நின்று அதிரடி கிளப்பினார் கேப்டன் விராட் கோலி.
ஒரு சில போட்டிகளில் ஏற்கெனவே ஒப்பனிங் பேட்ஸ்மேனாக கோலி களமிறங்கியிருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது இடம் என்பது ஒன் டவுன்தான். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது வழக்கமான 1 டவுன் இடத்தில் இறங்கிய கோலி டக் அவுட் ஆனார். அடுத்தப்போட்டியில் தொடர்ந்து தனது வழக்கமான பொசிஷனில் 1 டவுன் வீரராகவே களமிறங்கி 73 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றார். ஆனால், மூன்றாவது போட்டியில் தனது 1 டவுன் இடத்தை இஷான் கிஷனுக்காக விட்டுக்கொடுத்து, மீண்டும் 77 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே இருந்தார். நான்காவது போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு தனது 1 டவுன் இடத்தைவிட்டுக்கொடுத்தவர், ஐந்தாவது டி20 போட்டியில் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தபோதுதான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சாதனைகள் நிகழ்த்தினார் கோலி.
''எல்லா முடிவுகளுமே அந்த நேரத்தில் கேப்டன் என்ன நினைக்கிறார் என்பதைப் பொருத்ததுதான். ஆனால், எல்லோருடனும் உட்கார்ந்து, கலந்தாலோசித்து, எல்லா கருத்துகளையும் ஒருங்கிணைத்து அணியின் நலனுக்கு எது சரியாக இருக்குமோ அந்த முடிவைத்தான் எடுக்கவேண்டும். கோலி என்னோடு ஓப்பனிங்தான் இறங்கவேண்டும், அதுதான் அணிக்கு நல்லது என்று அவர் நினைத்தால் அதன்படியே நடக்கட்டும்.
வெளியே யார் என்னப் பேசுகிறார்கள், யாரை ப்ளேயிங் லெவனுக்குள் வைக்கவேண்டும், எடுக்கவேண்டும் என சொல்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் யோசிப்பதில்லை. சரியான வீரர்களை, ஃபார்மில் இருப்பவர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அணியாக நாங்கள் எடுக்கும் முடிவு. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி என்னோடு ஓப்பனிங் இறங்கமாட்டார் என நினைக்கிறேன். அதனால் அடுத்து என்ன என்பது பற்றி யோசிப்போம். உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது'' என்றார் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மா.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு, கோலி ஓய்வளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் ஷர்மாவின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, மேட்சின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோலி தன்னுடைய ஓப்பனிங் பொசிஷன் குறித்துப்பேசினார்.
''நான் இதற்கு முன்பு பேட்டிங் ஆர்டரில் பல பொசிஷன்களில் இறங்கி விளையாடியிருக்கிறேன். இப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலமாக இருப்பதாக நம்புகிறேன். அதனால் அணியின் சிறந்த இரண்டு வீரர்கள், டி20 போட்டியில் அதிகப்பந்துகளை சந்திக்கக்கூடிய ஓப்பனிங் பொசிஷனில் இறங்கினால் அது அணிக்கு பலமாக இருக்கும். அதனால் நான் ரோஹித்தோடு ஒப்பனிங் இறங்கவே இப்போது விரும்புகிறேன்.
நாங்கள் இருவருமே பார்ட்னர்ஷிப் போட்டு அடித்து ஆட ஆரம்பித்தால் அது எப்படிப்பட்ட ஆட்டமாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒருவர் அவுட் ஆகி வெளியேறினாலும், இன்னொரு பேட்ஸ்மேன் களத்தில் செட் ஆகி விளையாடும்போது அது பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கும். அதனால் உலகக்கோப்பை வரை இதையே தொடரலாம் என நினைக்கிறேன்'' என்றார் கோலி.
மேலும், ஐபிஎல் போட்டிகளிலும் பெங்களூரு அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்குவேன் என்றும் இப்போதே அறிவித்திருக்கிறார் விராட் கோலி.
source https://sports.vikatan.com/cricket/rohit-sharma-speaks-about-kohlis-opening-batting-position
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக