ஐக்கிய நாடுகள் சபையின் 46-வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் பத்து ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தச் செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், `இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளது’ என்று அதிகாரபூர்வமாகவே அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் இந்திய அரசை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின்போது இந்தியா, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன. முன்னர் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். மனித உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014-ம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவில்லை. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கையை வைத்துவருரும் நிலையில், வரும் மார்ச் 22-ம் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/india-assured-the-support-in-unhrc-says-sri-lankas-foreign-secretary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக