சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு, பி பிளாக், தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் ரவி (50). இவரின் மனைவி கலைவாணி. இந்தத் தம்பதியினருக்கு உமேஷ் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். அவர், புனேவில் படித்து வருகிறார். சென்னை சௌகார்பேட்டையில் நிதி நிறுவனம் ஒன்றை ரவி நடத்தி வருகிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கலைவாணிக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார். ரவி தொழிலை கவனிக்கச் சென்று விட கலைவாணி பெரும்பாலும் வீட்டில் தனியாகவே இருப்பார். கழுத்தில் 15 சவரன் தாலி செயினும், கைகளில் தங்க வளையல்களும் என எப்போதும் அணிந்திருப்பது கலைவாணியின் வழக்கம்.
கலைவாணியின் வீட்டில் ஹேமாவதி என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு வேலைக்கு வருவது வழக்கம். கடந்த 20-ம் தேதி காலையில் ரவி, வேலைக்காக சௌகார்பேட்டைக்கு சென்றுவிட்டார். வீட்டு வேலை செய்யும் ஹேமாவதி, காலதாமதமாக வேலைக்கு வருவதாக கலைவாணியிடம் போனில் கூறியிருக்கிறார்.
இந்தநிலையில், ஹேமாவதி எப்போதும் வரும் நேரத்தைக் கடந்து, கலைவாணியின் வீட்டுக்கு வந்தபோது, வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. காலிங் பெல் அடித்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் ஹேமாவதி, ரவிக்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறார். அதையடுத்து ரவி, வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. கலைவாணிக்கு போன் செய்தும், அதை அட்டெண்ட் செய்யவில்லை. அதனால் சந்தேகமடைந்த ரவி, உடல் நலம் சரியில்லாததால் கலைவாணி வீட்டுக்குள் மயங்கியிருக்கலாம் எனக் கருதி, வீட்டின் ஜன்னல் கிரீல்லை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.
Also Read: சென்னை: சித்த வைத்தியரின் மனைவி கொலை - சீடனாக அறிமுகமானவரால் நேர்ந்த விபரீதம்!
அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையறையில் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கலைவாணி கிடந்திருக்கிறார். ரவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலைவாணியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலைவாணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர்.
இதையடுத்து மாதவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார், கலைவாணியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலைவாணி அணிந்திருந்த 15 சவரன் தாலி செயின், 4 சவரன் தங்க வளையல்கள், 10,000 ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கலைவாணியை கொலை செய்து கொள்ளையடித்தவர்கள் யாரென்று போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தலைமைக் காவலர்கள் நரேந்திரகுமார், சௌந்தர்ராஜன், காவலர் தியாகராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரவியும் அவரின் மனைவி கலைவாணியும் 2-வது மாடியில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்களுக்குச் சொந்தமான 7 வீடுகளை வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மேஸ்திரி தமிழ்வாணன் என்பவர் மூலம், பெயின்டிங் வேலை செய்யும் ராகேஷ், அவரின் மனைவி ரேவதி ஆகியோர் ரவிக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். ரவியின் வீட்டில் ராகேஷுக்கு காவலாளி பணியும் ரேவதி அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்தும் வந்திருக்கிறார். அதனால் ராகேஷும் ரேவதியும் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.
கலைவாணி, வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட ராகேஷ், ரேவதி ஆகியோர் உள்ளே சென்றிருக்கின்றனர். பின்னர் கலைவாணியை அவர்கள் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கின்றனர். கலைவாணி அவர்களுடன் போராடியிருக்கிறார். கலைவாணியை கட்டுப்படுத்த முடியாததால், அவரது கை, கால்களை சிவப்பு நிற துப்பட்டாவால் கட்டியிருக்கின்றனர். மேலும் அவர் சத்தம் போடாமலிருக்க கருப்பு டேப்பை வாயில் ஓட்டியிருக்கின்றனர். பின்னர் கலைவாணியின் தலையிலும் அடித்திருக்கின்றனர். அதன்பிறகே நகைகள், பணத்தைக் கொள்ளையடித்து விட்டு ராகேஷ், ரேவதி தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்திருக்கின்றனர். அதனால் அந்த அறையிலும் ரத்தக்கறைகள் படிந்திருக்கின்றன.
கலைவாணியை கொலை செய்தது ராகேஷ், ரேவதி என தெரியவந்ததும் அவர்களை ரவிக்கு அறிமுகப்படுத்திய தமிழ்வாணன் மூலம் விசாரணையை நடத்தினோம். அப்போதுதான் ராகேஷ், ரேவதி நகைகளுடன் பதுங்கியிருக்கும் இடம் தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்று அவர்களை கைது செய்து நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்.
கைதான ராகேஷ், ரேவதி பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ராகேஷ் பெயின்டிங் வேலைக்காக சென்னை வந்திருக்கிறார். ரவியின் வீட்டில் இரவில் காவலாளியாகவும் பகலில் பெயின்டிங் வேலையும் செய்திருக்கிறார். அதனால்தான் அவரை மனைவியுடன் வீட்டின் கீழ்தளத்தில் தங்க ரவி அனுமதித்திருக்கிறார். செலபோன் சிக்னல் மூலம் இருவரும் பெங்களூருவில் தங்கியிருக்கும் தகவல் தெரியவந்ததும் அவர்களைப் பிடித்திருக்கிறோம். கலைவாணியைக் கொலை செய்த பிறகு அவர் அணிந்திருந்த ஒவ்வொரு நகைகளையும் ராகேஷும் ரேவதியும் கழற்றியிருக்கின்றனர். கலைவாணி அணிந்திருந்த மெட்டியைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-business-man-wife-murdered
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக