ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் 230 நாள்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த சில வாரங்களாகப் போர் உச்சம் அடைந்திருக்கிறது. ரஷ்யாவை கிரீமியாவோடு இணைக்கும் பாலம், வெடிகுண்டுத் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பிறகு, உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா. இந்தப் பாலம் தகர்க்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்தபோது, வீரியம் குறையாமல் தாக்கிவருகிறது ரஷ்ய ராணுவம். இந்தப் போரில், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நின்றபொழுதும், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் முன்வைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்துவந்தது இந்தியா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உக்ரைனின் முக்கிய மாகாணங்களான டொன்ட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஜப்போரிஷ்யா ஆகிய நான்கு மாகாணங்களை பொது வாக்கெடுப்பு நடத்தி, தங்களுடன் இணைத்துக்கொண்டது ரஷ்யா. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது அல்பேனியா.
இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது ரஷ்யா. 193 நாடுகள் கொண்ட ஐ.நா சபையில், ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 39 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. 13 நாடுகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன.
தொடர்ந்து, அல்பேனியா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட 104 நாடுகள் வாக்களிக்க, மறுபரிசீலனைக் கோரிக்கைக்கு ஆதரவாக 16 நாடுகள் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இந்தியா, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தாலும், போரில் ரஷ்யாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. `போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே உரிய தீர்வைக் காணமுடியும்' என்பதே இந்தியாவின் கருத்தாக இருந்துவருகிறது. கடந்த மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ``இது போருக்கான காலம் அல்ல. தொலைப்பேசி வாயிலாக நான் உங்களிடம் பல முறை இதைச் சொல்லியிருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை மட்டுமே உலகை ஒன்றாக வைத்திருக்கும்'' என்று ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கஜகஸ்தானில் நடக்கவிருக்கும் ரஷ்யா - மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார் புதின். இந்த மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய புதின், ``உக்ரைன் விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனச் சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்தியா, சீனா என இருவருமே எங்களது நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்'' என்றார்.
இந்தியா - ரஷ்யா உறவு!
`போர் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யாமீது கரிசனம் காட்டுவது ஏன்?' என்ற கேள்விக்கு சில கருத்துகளைப் பதிலாகத் தருகிறார்கள் சர்வதேச அரசியலை உற்று நோக்குபவர்கள். ``ரஷ்யா, சோவியத் யூனியன் நாடாக இருந்தபோதே, இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பக்கமே நின்றது ரஷ்யா. சீனா கம்யூனிச நாடாக இருந்தபோதிலும், அவர்களுடன் இந்தியா போர் புரிந்தபோது, ரஷ்யா நடுநிலையே வகித்தது. 1970-ல் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது, அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அப்போதும் ரஷ்யா இந்தியாவை ஆதரித்தது. மேலும், இந்தியாவின் ராணுவத் தளவாடங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை ரஷ்யாவைச் சேர்ந்தவை. `ரஷ்யாவின் தளவாட பாகங்கள் இல்லாமல் இந்தியாவின் கப்பல்கள் மிதக்காது; விமானங்கள் பறக்காது' என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியாவின் ராணுவக் கட்டமைப்பில் ரஷ்யா பங்காற்றியிருக்கிறது. எனவே, இந்தப் போருக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க முடிந்தாலும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது கடினம்'' என்கின்றனர்.
கடந்த 2021 டிசம்பரில் ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவுக்கு வந்து சென்ற பிறகு இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்தது. கொரோனா காலகட்டத்தில், இரண்டு முறை மட்டுமே அவர் ரஷ்யாவை விட்டு வெளியே சென்றார். முதலில், அமெரிக்க அதிபர் பைடனைச் சந்தித்தவர், பின்னர் இந்தியப் பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்தார். அதுவும், சீனா செல்லும் திட்டத்தைக் கைவிட்டு, இந்தியாவுக்கு வந்தார் புதின். இது இந்தியாமீது ரஷ்யா வைத்திருக்கும் மதிப்பைக் காட்டியது.
இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக இருக்கும் நல்லுறவு காரணமாகத்தான் இந்தியா, ரஷ்யாவுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருக்கிறது. ``ரஷ்யாவுடன் வைத்திருக்கும் நல்லுறவால் இந்தியாவுக்கு, சாதகம், பாதகம் என இரண்டுமே இருக்கின்றன. ரஷ்யாவுடனான இந்த உறவால், அமெரிக்காவை இந்தியா பகைத்துக்கொள்ளும் நிலை உருவாகலாம். ஆனால், ராணுவக் கட்டமைப்பில் இந்தியாவுக்குப் பேருதவி செய்த ரஷ்யாவைப் பகைத்துக்கொள்வது பெரும் சிக்கலை உண்டாக்கும்'' என்கிறனர் தேசிய அரசியல் நோக்கர்கள்
source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-russia-india-relationship
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக