Ad

சனி, 24 செப்டம்பர், 2022

``திமுக தலைவருடன் விவாதிக்கத் தயார்; அவர் குறிக்கின்ற இடத்துக்கு நான் வருகிறேன்!" - அண்ணாமலை

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க சார்பில், கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதமர் மோடியின் சாதனை விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியை நேற்றைய தினம் (24.09.2022) அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அதற்கு முன்பாக, தெண்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்கு நேராகச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கூட்டேரிப்பட்டு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``தி.மு.க அரசு கடந்த 16 மாதங்களில் ஊழல் அரசு எனும் பெயரை வாங்கியுள்ளது. அதில் மாற்று கருத்தே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சட்ட ஒழுங்கு பெருமளவில் சீரழிந்திருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை

மத்திய அரசின் கூடங்குளம், எட்டுவழிச்சாலை போன்ற எத்தனையோ திட்டங்கள் இங்கு தடுக்கப்பட்டிருக்கிறது. புவியியல் ஆர்வலர்கள், என்.ஜி.ஓ என்றெல்லாம் வந்தார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த என்.ஜி.ஓ எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. எல்லோருமே மௌனமாக இருக்கிறார்கள். பல திட்டங்களை 'வேண்டாம்' என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் அவர்கள்.

இன்று இந்தியாவில் காப்பரின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதிலும் 40% காப்பரை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாடு இந்தியா. இன்று நம்முடைய தேவைக்கு இறக்குமதி செய்து கொண்டுள்ளோம். பா.ஜ.க எப்போதுமே தமிழ் மாடலா..? திராவிட மாடலா..? என விவாதிக்க தயாராக இருக்கிறது. உண்மையாகவே 'திராவிடன்' என்பதின் அர்த்தம் என்ன என்பதை விவாதிக்க தயாராக இருக்கிறோம். 70 ஆண்டுகளில் தி.மு.க-வின் சாதனை, 'திராவிட மாடல்' என்கிறார்கள், அதையும் விவாதிக்க தயாராக உள்ளோம்.

ஸ்டாலின் - அண்ணாமலை

தேசிய மாடலா... திராவிட மாடலா... இல்லை நாங்கள் முன்வைக்கும் தமிழ் மாடலா..! என விவாதிக்க தயாராக இருக்கிறோம். 15 மாதங்களில் தி.மு.க-வின் ஊழல் பட்டியல், அதையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். பொன்முடி அவர்கள் ஒரு கட்சியின் தலைவர் அல்ல. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சராக இருக்கிறார். அவர் நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பா.ஜ.க சார்பாக மாநில துணைத் தலைவர் அவருடன் விவாதிக்க வருவார்கள்.

தி.மு.க-வின் கட்சித் தலைவர் எப்போது விவாதிக்கத் தயார் என்றாலும், அவர் குறிக்கின்ற இடத்துக்கு நான் வருகிறேன்" என்றவர், 'புதுவையில் பாஜக-வின் கூட்டணி முடிவுக்கு வருகிறதா?' என்ற கேள்விக்கு "என்னிடம் எந்த ஐடியாவும் இல்லை" என்று கூறியபடி புறப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-tamilnadu-leader-annamalai-challenged-dmk-to-debate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக