Ad

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

`என்ன ஏற்பாடு செஞ்சிருக்கீங்க..?’ - நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் தற்போது எச்.1 என்.1 , டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கிறது. இந்தநிலையில், அதிகரித்து வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தச்சூழலில், மாநிலம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும் தமிழக மருத்துவத்துறையின் சார்பில் நேற்று(27-09-2022) சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

கூட்டம் தொடங்கிய போது

மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற  மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் இப்பயிற்சி நடைபெற இருந்தது. இந்த பயிற்சி கூட்டத்திற்குத் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டு கூட்டம் தொடங்க இருந்தது. அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கான உரிய ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார்.

கோபத்துடன் வெளியேறினார்

நிகழ்ச்சியிலிருந்து அமைச்சர் திடீரென வெளியேறியதால் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும், பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 50 செவிலியர்கள் மற்றும் சில மருத்துவர்களை மட்டுமே வரவழைத்து அதிகாரிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதனாலேயே அமைச்சர் கோபமுடன் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் விரைவில் உரிய ஏற்பாடுகளுடன் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/minister-left-health-department-program-due-to-lack-of-proper-arrangements

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக