Ad

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

``அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்த பாஜக-வில் ஆளில்லை” - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

``திமுக எம்.பி ஆ.ராசா சனாதனம் குறித்து சில கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவருகிறார். அதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்களே?”

``ஆ.ராசா பேசிவரும் கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள் அல்ல. மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களைத்தான் அவர் பேசிவருகிறார். இப்படியெல்லாம் மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார். அதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசமான கருத்து இடம்பெற்றிருக்கும் அந்த புத்தகத்தைத்தான் தடை செய்ய வேண்டும். அந்த கருத்துக்கள் குறித்து நடைபெறும் பிரசங்கங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.

பெரியார்

பெரியார் திடலில் ஆ.ராசா பேசிய அதே மேடையில் நானும் இருந்தேன். நான் பேசிய கருத்துகளைத்தான் ஆ.ராசாவும் பேசினார். இருவரின் பேச்சின் உள்ளடக்கமும் ஒன்றுதான். அவர் என்ன பேசினாரென்றால்... ‘இந்துத்துவத்தை நீ ஒத்துக்கொண்டால் நீ இந்து என்று பொருள். இந்து என்று ஒத்துக்கொண்டால் நீ சூத்திரன் என்று பொருள். சூத்திரன் என்று ஒத்துக்கொண்டால் நீ விபச்சாரியின் மகன் என்று பொருள்.. இதைத்தான் பெரியார் சொன்னார்’ என்றார்.

அது, ஆ.ராசாவின் கருத்து அல்ல. அது பெரியாரின் கருத்து. அது பெரியாரின் கருத்து அல்ல.. அது மனு தர்மத்தின் கருத்து. மனு தர்மத்தில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஏன் விமர்சிக்க மறுக்கிறார்கள். ஆ.ராசா பேசியது சரியா தவறா என்று விவாதிப்பதைவிட, மனு தர்மத்தில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதா என்று விவாதிக்க வேண்டும். ஆனால், அதை யாரும் பேசுவதில்லை.”

``இதுபோன்ற கருத்துக்களை நீங்களும் தொடர்ந்து பேசிவருகிறீர்களே?”

``நான் ஒரு ஆன்லைன் கூட்டத்தில் பேசியபோது, மனுதர்மம் இப்படித்தான் பெண்களை இழிவாகச் சித்தரிக்கிறது என்று சொன்னேன். அதை எடிட் செய்து நான் பெண்களைக் கொச்சைப்படுத்தியதாகச் சொன்னார்கள். பிறகு, மக்களே மனுதர்மத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உண்மை எதுவென்று மக்களுக்குப் புரிந்துவிட்டது”.

தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசும் ஆ.ராசா

``வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்பட்ட நூலைப் படித்துவிட்டு மனு தர்தம் குறித்து நீங்கள் தவறாகப் பேசுகிறீர்கள் என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?”

``இல்லை. முத்துரங்கச் செட்டியாரின் வேண்டுகோளுக்கு இணங்க ராமானுஜாச்சாரியார் எழுதிய புத்தகத்தில் மனு தர்மம் குறித்து சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன். சமஸ்கிருதக் கலப்புடன் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் புத்தகம் 1919-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் 8-வது அதிகாரத்தில், எழு வகைத் தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில், தன்னுடைய விபச்சாரியின் மகன் என்று தொழிலாளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஒட்டுமொத்தத் தொழிலாளர்களையும் சூத்திரர்கள் என்று சொல்கிறார்கள்.

ராமானுஜாச்சாரியார் ஆங்கிலேயரா? முத்துரங்கச் செட்டியார் ஆங்கிலேயரா? இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக இருந்தார்களா? இப்படியெல்லாம் இவர்கள் சொல்வார்கள் என்று தெரிந்துதான் அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்தார். சூத்திரர்கள் என்று சொல்லி இழிவுபடுத்தும் இந்து மதத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கேட்டார்.”

``அப்படியென்றால், அம்பேத்கரை பா.ஜ.க விமர்சிப்பதற்குப் பதிலாக ஏன் கொண்டாடுகிறது?”

``அதில் தான் அவர்களின் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இந்து மத எதிர்ப்பு கருத்துக்களுக்காக பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் கடுமையாக எதிர்ப்பார்கள். ஆனால், அம்பேத்கரை அவர்களை எதிர்க்க மாட்டார்கள்... விமர்சிக்கவும் மாட்டார்கள். மாறாக, அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். அவருக்கு சிலை வைக்கிறார்கள்... நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.

இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை பெரியார் வேண்டுமென்றே சொல்கிறார் என்கிறார்கள். சரி, அம்பேத்கரும் ஏன் அப்படிப் பேச வேண்டும்? பெரியார் செய்த அனைத்தையும் அம்பேத்கர் செய்திருக்கிறார். அம்பேத்கரை ஏன் அவர்கள் விமர்சிப்பதில்லை? அதற்குக் காரணம் இருக்கிறது.

அம்பேத்கர்

இன்றைக்கு காங்கிரஸ் பலவீனமாகிக்கொண்டே வருகிறது. அது பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட ப ல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற தலைவர்கள் தனிக் கட்சிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் பக்கம் காங்கிரஸ் கட்சியிலிருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரெல்லாம் போய்விட்டார்கள்.

தற்போது, காங்கிரஸை ஆதரிப்பவர்களில் பெரும்பாலோர் தலித் மக்கள். எனவே, காங்கிரஸை ஆதரிக்கும் தலித் மக்களைக் குறிவைத்து பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் செயல்படுகின்றன. எனவே, அம்பேத்கரை விமர்சித்தால், அவர்களின் நோக்கம் நிறைவேறாது என்பதால், அம்பேத்கரைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். அம்பேத்கரை விழுங்கவும் பார்க்கிறார்கள்”.

``அவர்களுடன் நீங்கள் பொதுவில் விவாதம் செய்தால், உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரிந்துவிடுமே?”

``முதலில், அம்பேத்கரைப் பற்றி முழுமையாக விவாதிப்போம். ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் பற்றி விவாதிக்கலாம். அம்பேத்கர் ஏன் மதம் மாறினார் என்பதை விவாதிக்கலாம். ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் பற்றி விவாதிக்கலாம். இந்து மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால், இப்படிப்பட்ட புத்தகங்கள் அவர் எழுதுவாரா?

திருமாவளவன்

அவர்களிடம் விவாதம் செய்யலாமே என்று கேட்டால், விவாதம் செய்வதற்கான தகுதியுடன் அங்கு யாருமே இல்லை. எல்லாவற்றையும் குதர்க்கமாகவும், எமோஷனலாகவுமே அவர்கள் அணுகுகிறார்கள். அறிவுப்பூர்வமான விவாதம் நடத்துவதற்கு பா.ஜ.க-வில் ஆளில்லை.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/there-is-nobody-in-bjp-for-intellectual-argumentsays-thirumavalavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக