Ad

வியாழன், 15 செப்டம்பர், 2022

உக்ரைன்: ஒரே இடத்தில் 440 உடல்கள்... ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுத்த பகுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

ஏழு மாதங்களுக்கு மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்துவருகிறது. இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் இந்தப் போரில், இதுவரை எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகச் சில அதிரடிகளை மேற்கொண்டுவருகிறது உக்ரைன் ராணுவம்.  கிழக்கு உக்ரைனிலுள்ள பெரும்பாலான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ரஷ்ய ராணுவம். குறிப்பாக, ரஷ்யாவை ஆதரிக்கும் மக்கள் அதிகம் வாழும் டொனட்ஸ்க் மாகாணத்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தற்போது, அந்த மாகாணத்திலுள்ள இஸியம் என்ற நகரை தங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறது உக்ரைன்.

உக்ரைன்

இந்த நகரிலுள்ள கிடங்கில்தான் பெருமளவு ஆயுதங்களை வைத்திருந்தது ரஷ்யா. தங்களது ராணுவ மையமாக விளங்கிய இஸியம், மீண்டும் உக்ரைன் கைக்குச் சென்றிருப்பது ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அதே டொனட்ஸ்க் மாகாணத்திலுள்ள பாலாக்லியா என்ற முக்கிய நகரத்தையும் உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்திருக்கிறது.

இஸியம் பகுதி

இந்த நிலையில், ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிழக்கு நகரமான இஸியத்தில் 440-க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடத்தை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடராக உக்ரைனிய தலைமை காவல் புலனாய்வாளர் செர்ஹி போல்வினோவ் (Serhiy Bolvinov), "கண்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு உடலிலும் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். ரஷ்யாவிடமிருந்து விடுவிக்கப்பட்ட (பகுதிகளில்) உள்ள  மிகப்பெரிய சவ புதைக்குழிகளில் இதுவும் ஒன்று என்று என்னால் சொல்ல முடியும்... 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் பீரங்கித் தாக்குதலில் இறந்ததும், சிலர் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததும் தெரியவந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி "ரஷ்யா எல்லா இடங்களிலும் மரணத்தை விட்டுச் செல்கிறது, அதற்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும்" தெரிவித்திருக்கிறார். ஆனால், ரஷ்யா "போரில் போர்க் குற்றங்களையோ அல்லது. குடிமக்களையோ குறிவைக்கவில்லை" என மறுத்து வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/mass-grave-of-over-440-bodies-found-in-ukraines-recaptured-city-official

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக