Ad

புதன், 21 செப்டம்பர், 2022

சசிகலா உறவினர் ராவணன்: ஜெயலலிதா குட்புக்கில் இடம்; அதிமுக-வின் அதிகாரப்புள்ளி - யார் இவர்?!

சசிகலா உறவினரான இராவணன் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொங்கு மண்டலத்தில் கோலோச்சியதுடன் அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நடவடிக்கைக்கு ஆளான பிறகு அரசியல் குறித்து நிகழ்வுகளில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தவர். இந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டு நேற்று இராவணன் உயிரிழந்தது சசிகலா உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சசிகலா

சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரன் மகள் மாதவி. சசிகலாவுக்கு தங்கை முறை உடையவர். மாதவியின் கணவர் இராவணன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசித்து வந்தார். தனது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக திருச்சியில் இருந்துள்ளார். இந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் மன்னார்குடி அருகே உள்ள ராதா நரசிம்மபுரம் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா தம்பி திவாகரன் இறுதி சடங்கிற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார்.

ராவணன்

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``கோவையில் சசிகலா தரப்பினர் நடத்தி வருவதாக சொல்லப்படும் ஆயில் நிறுவனத்தில் இராவணன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதே போல் சசிகலாவினுடைய மிடாஸ் மதுபான ஆலையிலும் பொறுப்பில் இருந்து கவனித்து வந்தார். கொடுக்குற வேலையை இராவணன் துல்லியமாக செய்வதை கவனித்த ஜெயலலிதா அரசியல் தொடர்பான ஆலோசனைகள், மூவ்கள் என பல முக்கிய பணிகளை முக்கியத்துவம் கொடுத்து இராவணனிடம் கொடுக்க தொடங்கினார்.

அ.தி.மு.க எதிர்கட்சியாக இருந்த சமயத்தில் ஒவ்வொன்றையும் கச்சிதமாக செய்து கொடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவராக மாறினார். பின்னர் போயஸ் கார்டன் முதல் கொடநாடு பங்களா வரை அனைத்திலும் அதிகாரம் செலுத்த கூடிய உச்சம் பெற்றவராக மாறினார் இராவணன். பின்னர் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கொங்கு மண்டலத்தையும் தாண்டி மாநிலம் முழுவதும் கோலோச்சினார். தன்னை நாடி வந்த பலரை அமைச்சராக்கியவர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட பலரை உருவாக்கியவர்.

திவாகரன் உடன் இராவணன்

அரசு முதல் அதிகாரிகள் வரை தன் கண் அசைவில் ஆட்டுவித்தவர். அ.தி.மு.க புள்ளிகள் வரை அதிகாரிகள் வரை பலரும் இராவணன் என்ற ஒற்றை பெயரையே உச்சரிக்க, சசிகலா தம்பி திவகாரன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தாரே எரிச்சலடைந்தனர். எந்த வேலையாக இருந்தாலும் இராவணன் மூலமாகவே செய்கிற நிலைக்கு திவாகரனே ஆளானார். பணம் வாங்கி கொண்டு கட்சி பதவிக்கு சிபாரிசு செய்கிறார் உள்பட இராவணன் மீது பல புகார்கள் செல்ல கோபமடைந்தார் ஜெயலலிதா.

அதன் பிறகு அவரை ஓரம் கட்டினார். சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்த போது முதல் ஆளாக நடவடிக்கைக்கு உள்ளானவர் இராவணன். அந்த அளவுக்கு ஆடி விட்டார் என அவரது சொந்தங்களே அப்போது பேசினர். சசிகலா கணவர் ம. நடராசன், இராவணன், திவாகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா. அந்த மூன்று பேரில் அதிகம் பாதிக்கப் பட்டவர் இராவணன் தான்.

ராவணன்

அதன் பிறகு எந்த ஆடம்பரமும் இல்லாமல் இருப்பதே வெளியே தெரியாத வகையில் அமைதியானார் இராவணன். மகனின் மருத்துவ உயர் படிப்பு மற்றும் தொழிலில் தன் கவனத்தை செலுத்தி வந்தார். அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டப்ப கூட இராவணனிடம் ஒருவர் கருத்து கூற, `கட்சியை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன். இப்ப நமக்கு எதுக்கு அந்த விஷயம். வேற பேசலாம்’ என சொல்லிட்டு கடந்து விட்டாராம். ஆனாலும் இராவணனால் உருவாக்கப்பட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் அவர்கிட்ட நட்பில் இருப்பதாக சொல்லப்பட்டுகிறது” என்றனர். மன்னார்குடியில் உள்ள இராவணன் உடலுக்கு சசிகலா தொடங்கி முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/news/politics/who-is-ravanan-who-was-once-power-centre-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக