Ad

திங்கள், 26 செப்டம்பர், 2022

வியக்க வைத்த 9 வயது சிறுமி |தன் சாதனையை மீண்டும் தகர்க்கும் எலியுட் | உலக செய்திகள் ரவுண்ட்அப்

வியக்க வைத்த 9 வயது சிறுமி |தன் சாதனையை மீண்டும் தகர்க்கும் எலியுட் | உலக செய்திகள் ரவுண்ட்அப்

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ-வையே வியக்க வைத்த 9 வயது இந்தியச் சிறுமி!

ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் ஒன்பது வயதான சிறுமி ஹானா முகமது ரபீக்கிற்கு பாராட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். துபாயில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சிறுமி ஹானா, பிள்ளைகள் தூங்குவதற்காக பெற்றோர்கள் கதை சொல்ல ஒரு தனி செயலி உருவாக்கியுள்ளார். இந்த iOS செயலியை ஐபோன்களுக்காக உருவாக்கியுள்ளார் ஹானா. உலகின் மிக சிறிய வயதுடைய iOS டெவலப்பர் ஆக தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு டிம்மிற்கு அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவருக்கு ஐந்து வயது முதலே கோடிங் கற்று தரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த செயலிக்காக தானே பத்தாயிரம் வரிகள் கோடிங் எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியின் வாயிலாக பெற்றோர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது கதைகளை கூறி பதிவு செய்து பிள்ளைகளை தூங்க வைக்க இயலும். இந்த கண்டுபிடிப்பிற்காக அவரை பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் டிம் குக் . "இந்த சிறு வயதில் நீ செய்துள்ள சாதனைகள் அனைத்திற்கும் எனது பாராட்டுக்கள். மேலும் இது போன்று வரும் நாட்களிலும் உயர வாழ்த்துக்கள்" என அவர் பாராட்டியுள்ளார்.

புயலால் முடங்கிய பிலிபைன்ஸ்... துரித நடவடிக்கைகளில் அரசு தீவிரம்!

பிலிபைன்ஸ் நாட்டை நூறா என்ற புயல் கடுமையாக தாக்கி வருகிறது. பலத்த சூறை காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த புயலால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொட்டும் கன மழையால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது மேலும் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்திட்ட 8,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

`என் ஓய்வு இப்போதைக்கு இல்லை'

டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் அவரின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், டென்னிஸ் விளையாட்டில் உள்ள மற்ற சீனியர் வீரர்களின் ஓய்வு குறித்த கேள்விகள் வலம் வர துவங்கின. தற்கால டென்னிஸ் என்றாலே ஃபெடரர், நடால், ஜோகோவிச் என்று ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. ஃபெடரர் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஜோகோவிச் தனது ஓய்வு இப்போது இல்லை எனக்கூறி தனது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளார். தான் இன்னும் வயதானதாக உணரவில்லையென செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தனது சாதனையை தானே முறியடித்த கென்ய வீரர்!

பெர்லின் நகரில் நடைப்பெற்ற மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோக்ம் 2:01:09 மணிநேரத்தில் கடந்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். 26 மையில் தூரத்தை இவர் இந்த காலத்தில் கடந்துள்ளார். இதற்கு முன்னர் இவர் ஓடியதை விட முப்பது வினாடிகள் குறைவாக எடுத்துக்கொண்டுள்ளார் எலியுட். இவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

கொலம்பியன் திரைப்படத்திற்கு கோல்டன் ஷெல் விருது!

கொலம்பியன் திரைப்படமான "The kings of the World" என்ற திரைப்படத்திற்கு ஸ்பெயின் நாட்டில் நடைப்பெற்ற 70வது சான் செபாஸ்டியன் திரைப்பட விழாவில் கோல்டன் ஷெல் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான இந்த விருதை அந்த திரைப்படத்தின் இயக்குநர் லாரா மோரா பெற்றுக்கொண்டார். சிறந்த இயக்குநருக்கான விருதை ஜப்பான் நாட்டை சேர்ந்த கென்கி காவமுரா வென்றுள்ளார்.

சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல்!

சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியான நிலையில் ஆறு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். ராணுவ தளவாடம் அருகே ராணுவ உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர் தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இதில் ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பில் அவ்வப்போது இது மாதிரியான சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்னை நடந்துகொண்டு வருகிறது. 2017-ல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 512 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/international/international-roundup-from-girl-wondered-tim-cook-to-somalia-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக