Ad

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

குஜராத் தேர்தல் களத்தில் அடித்து ஆடும் கெஜ்ரிவால்... பாஜக-வுக்கு பாதகத்தை ஏற்படுத்துமா?!

‘குஜராத் மாடல் வளர்ச்சி’ என்ற பிம்பத்தின் மூலம் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, மத்தியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவர் நரேந்திர மோடி. கட்சியிலும் ஆட்சியிலும் உச்ச அதிகாரம் படைத்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவருக்கும் குஜராத் தான் சொந்த மாநிலம். அங்கு, பா.ஜ.க-வின் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்வதில் இவர்கள் இருவரும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார்கள்.

மோடி

குஜராத்தில் காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி. ஆனால், அங்கு காங்கிரஸின் செல்வாக்கு எப்போதோ சரிந்துவிட்டது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இல்லை என்கிற சூழலில்தான், பா.ஜ.க-வின் குஜராத் கோட்டையைத் தகர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கியிருக்கிறார்.

தேர்தல் இலவசங்கள் தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் வாக்காளர்களைக் கவர்ந்துவருகின்றன. அதை, டெல்லி, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் பார்க்க முடிந்தது. குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கேயும் இலவசங்கள் தொடர்பான பல வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துவருகிறார். இன்னொருபுறம், தேர்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துப் பிரசாரத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் தீவிரமாக முன்னெடுக்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சிக்கு செக் வைப்பதற்காகவே இலவசங்களுக்கு எதிரான பிரசாரத்தை பா.ஜ.க மேற்கொள்வதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், இலவசங்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்குவதை சட்டப்படி தடுக்க முடியாது. எனவே, ‘இலவச’ வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற்றியதன் மூலம் பா.ஜ.க-வுக்கு கடும் போட்டியை ஆம் ஆத்மி கொடுத்துவருகிறது.

குஜராத்துக்கு கெஜ்ரிவால் அடிக்கடி பயணம் மேற்கொண்டுவருகிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “காங்கிரஸ் கட்சியின் கதை முடிந்துவிட்டது. காங்கிரஸ் பற்றிய கேள்விகள் மக்களின் மனதில் இல்லை. எனவே, காங்கிரஸ் தொடர்பான கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்று பதிலளித்தார்.

இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளுடன் ஊழல் ஒழிப்பு பற்றியும் கெஜ்ரிவால் பேசிவருகிறார். அந்தப் பேச்சும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக செய்திகள் வருகின்றன. சமீபத்தில் அகமதாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, ``குஜராத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பதாக நான் சந்திக்கும் அனைவருமே சொல்கிறார்கள். மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை ஊழல் நிறைந்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக யாராவது பேசினால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

அமித் ஷா

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்தால், ஊழலற்ற அரசை வழங்குவோம், முதல்வரும் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் ஊழலில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிசெய்வோம். மீறி யாராவது ஊழலில் ஈடுபட்டால், அவர்களை சிறையில் தள்ளுவோம். மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொறு பைசாவும், மக்களுக்கான சேவைகளுக்கே செலவு செய்வோம் என்பற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று கெஜ்ரிவால் பேசினார்.

மேலும், “பா.ஜ.க ஆட்சியில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டுவரும் சட்டவிரோத வர்த்தகங்கள் தடுத்துநிறுத்தப்படும். தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் விசாரிக்கப்படும். ஊழல்கள் மூலம் சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன்களுக்காக செலவிடப்படும். ஊழல் செய்து சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறந்த பள்ளிகளை உருவாக்கவும் மின்சாரத்துக்கும் பொதுமக்களின் சேவைகளுக்காகவும் அந்தப் பணம் செலவிடப்படும்.

கெஜ்ரிவால்

ஆம் ஆத்மியின் ஆட்சி அமைந்தால், அரசு அலுவலங்களில் மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. டெல்லியில் செய்யப்படுவதுபோல, வீட்டு வாசல்களுக்கே வந்து பல்வேறு நலச் சேவைகளை வழங்குவோம். மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். பெண்களுக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்குவோம். தரமான - இலவச மருத்துவச் சிகிச்சையையும், தரமான கல்வியையும் வழங்குவோம். புதிய வேலைகளை உருவாக்குவோம்” என்று கெஜ்ரிவால் வாக்குறுதிகளை அடுக்குகிறார்.

தமது வெற்றியைத் தடுக்கும் சக்தி காங்கிரஸுக்கு கிடையாது என்பதால், தங்களின் கோட்டையாக குஜராத் தொடரும் என்ற பா.ஜ.க-வினரின் நம்பிக்கை, தற்போது ஆம் ஆத்மியால் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஆம் ஆத்மியால் குஜராத் தேர்தல் களம் சூடுப்பிடித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-the-campaign-of-kejriwal-affect-bjp-in-upcoming-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக