Ad

புதன், 14 செப்டம்பர், 2022

காரைக்கால் டு சேலம்... 12,000 லிட்டர்  டீசல் கடத்தல் - டேங்கரை சேஸ் செய்து பிடித்த போலீஸார்

காரைக்காலிலிருந்து சேலத்துக்கு 12,000 லிட்டர் டீசலைக்  கடத்திச் சென்ற டேங்கரை  விரட்டிச் சென்று மடக்கிய  போலீஸார்,  கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட மேலும் மூவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீஸார்  தென்னங்குடி அருகே  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால்-கும்பகோணம் சாலையில் அதிவேகத்தில் சென்ற டேங்கரைப்  போலீஸார் நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. அந்த டேங்கரை விரட்டிச் சென்ற போலீஸார் 5 கி.மீ. பயணத்துக்குப்பின் தென்னங்குடி வரதராஜபெருமாள் கோயிலருகில் வழிமறித்து மடக்கினர். டேங்கரை திருநள்ளாறு போலீஸ்  ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் காரைக்கால் பச்சூர் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்கிலிருந்து 12,000 லிட்டர் டீசலை டேங்கரில் ஏற்றியுள்ளனர். 12,000 லிட்டர் டீசலை  ஏற்றிச் செல்வதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளரால்  போலியாக கம்பியூட்டரில் வடிவமைக்கப்பட்ட விற்பனை ரசீதை  டேங்கர் ஓட்டுனரிடம் இருந்து போலீஸார்  பறிமுதல்  செய்தனர். டீசல் எடுத்துச் செல்வதற்காக தனியார்  நிறுவனம் போலியாக இன்வாய்ஸ் தயாரித்திருந்ததும் தெரிய வந்தது.

காரைக்கால் sp office

அந்தப்  போலி ஆவணத்தை கைப்பற்றி டீசலுடன் டேங்கரையும் டேங்கரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தூத்துக்குடி கீழப்பாண்டிவார் மங்கலத்தைச் சேர்ந்த மகன் மாரிச்செல்வம் என்பவரையும் காரைக்கால் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக உணவுக்கடத்தல் தடுப்பு காவல் நிலைய ஆய்வாளர் பிரான்சிஸ் டொமினிக் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து டீசலுடன் டேங்கரை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் மாரிச்செல்வத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர், மேலாளர், பங்க் ஊழியர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karaikal-to-salem-diesel-smuggling-police-wraps-up-tanker-and-investigates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக