Ad

புதன், 14 செப்டம்பர், 2022

மீண்டும் `மாஸ்’ காட்ட தயாராகும் எடப்பாடி... ஆப்ஷன் இன்றி தவிக்கிறதா பன்னீர் தரப்பு?!

ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததில் இருந்து ஓ.பி.எஸ் சட்ட வழிகளில் மட்டுமே தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார். அதன்படிதான், ``ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது'' என உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மூலம் தீர்ப்பை ஓபிஎஸ் பெற்றிருந்தார். அதில் `அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்' என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது, இரு தரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், நீக்கம் உள்ளிட்ட எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டது.

ஓபிஎஸ் - இபிஎஸ்

இதன்காரணமாக, நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஆட்பிடிப்பு என குஷி மோர்டில் வலம் வந்தார் ஓ.பி.எஸ். அதன் விளைவாக திண்டுக்கல், மதுரையை சேர்ந்த சில நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்ட ஒ.பி.எஸ், அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். ஒரு கட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார் ஓ.பி.எஸ்.

ஆனால், ஓ.பி.எஸ்-ஸின் குஷி மோர்டு நீடிக்கவில்லை. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்ப்பு எடப்பாடி செய்திருந்த மேல்முறையிடு வழக்கில், எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால், ஓ.பி.எஸ் தரப்பிடம் பேசிக் கொண்டிருந்த எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் சைலண்ட் மோடுக்குச் சென்றனர். மேலும், பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயண திட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. அதோடு, தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடும் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், எடப்பாடியோ, இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் தலைமை அலுவலகத்தில் தனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட செப்.8-ம் தேதி அங்கு சென்றார். அங்கு பொறுப்பேற்ற கையோடு, செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் விழாவுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

மேலும், தி.மு.க அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து செப்.16-ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்து மாஸ் காட்டி வருகிறார் எடப்பாடி. அதேபோல, நிர்வாகிகளின் இல்ல விழாக்களுக்கும் பொதுக்கூட்டம் போல கூட்டத்தை கூட்டி, ஓ.பி.எஸ்-ஸின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியும் வருகிறார் எடப்பாடி. இந்நிலையில், அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செப்.12-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ்

இந்த வழக்கு முடிவு தனக்கு சாதகமாக வரும் என்று ஓ.பி.எஸ் எண்ணியிருந்த நிலையில், ' மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க ஓ.பி.எஸ் சட்ட வழிகளை நாடலாம்' என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். பொதுக்குழு தொடர்பான வழக்கு, அலுவலகத்தின் மீதான அதிகாரம் என தான் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்றங்களின் தீர்ப்பே எதிராக அமைந்து வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசினோம். "இந்த தீர்ப்பு எங்களுக்கு எந்த வகையிலும் பின்னடைவு இல்லை. ஏனென்றால், அலுவலகம் சாவி தொடர்பாக மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் வழி சொல்லியிருக்கிறது.

ஓபிஎஸ்

இதன்மூலம், உரிமையியல் வழக்கு தொடர்ந்து, திடமாக, விரிவாக எங்களால் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க முடியும். அதேபோல, பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வரவுள்ளது. அது நிச்சயம் எங்களுக்கு சாதகமாக வரும்" என்றார்கள் அதீத நம்பிக்கையில்...

மீண்டும் சட்டப்போராட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஓ.பி.எஸ் கணக்கு வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!



source https://www.vikatan.com/government-and-politics/politics/eps-ready-to-show-mass-again-is-ops-has-no-options

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக