Ad

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

`மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி வாங்கினேன்'- ரூ.25 கோடி பம்பர் பரிசுவென்ற ஆட்டோ டிரைவர் அனூப்!

கேரள மாநில அரசு ஒவ்வொரு பண்டிகைக்கும் பெரிய அளவிலான பரிசுத் தொகையுடன் கூடிய லட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. கேரளாவின் பாரம்பர்ய, கலாசார விழாவான திருவோணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் லாட்டரி விற்பனையைத் தொடங்கியது கேரள லாட்டரித்துறை.

இந்த முறை முதல் பரிசுக்கான தொகை 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஓணம் பண்டிகை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் லாட்டரிச் சீட்டுக்கன குலுக்கல் நடைபெற்றது. அதில் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. பழவங்காடி பகவதி லாட்டரி ஏஜென்சியில் இருந்து தனது சகோதரி ஒருவரிடம் நேற்று முன் தினம் மாலையில் அனூப் இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். லாட்டரி பரிசு விழுந்தது குறித்து தன் மனைவி மாயா-விடம் முதலில் தெரிவித்துள்ளார் அனூப்.

அனூப் தனது குடும்ப்த்துடன்

இதுபற்றி அனூப் கூறும்போது, "எனது மகன் அத்வைத் உண்டியலில் காசுகளை சேர்த்து வைத்திருந்தான். அந்த் உண்டியலை உடைத்துதான் இந்த லாட்டரி சீட்டை சனிக்கிழமை மாலை வாங்கினேன். நான் முன்பு ஓட்டல் வேலை செய்தேன், பின்னர் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற விண்ணப்பித்திருந்தேன். அதற்காக அனுமதியும் கொடுத்துவிட்டனர். இபோது லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதால் அந்த லோன் வாங்க வேண்டாம் என தீர்மானித்திருக்கிறேன்.

இனி வெளி நாட்டுக்கு வேலைக்கு போகாமல் சொந்த ஊரிலேயே பிசினஸ் செய்து பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார். கேரள மாநில அரசின் ஓணம் பம்பர் பரிசு லாட்டரிச் சீட்டுகள் மொத்தம் 67.50 லட்சம் அச்சிடப்பட்டன. அதில் சனிக்கிழமை மாலை கணக்குப்படி 66.40 லட்சம் லாட்டரிகள் விற்பனை ஆகியிருந்தன.

லாட்டரி

ஒரு சீட்டின் விலை 500 ரூபாய். 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள அனூபுக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிகிதம் வரி போக 15.75 கோடி ரூபாய் வழங்கப்படும். இரண்டாம் பரிசு 5 கோடி ரூபாய், மூன்றாம் பரிசாக பத்து பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். நான்காம் பரிசாக 90 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தம் 126 கோடி ரூபாய் அதிஷ்டசாலிகளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/onam-bumper-tvm-auto-driver-hits-jackpot-worth-rs-25-crore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக