Ad

திங்கள், 19 செப்டம்பர், 2022

பெளர்ணமி அப்பளமும் பெருகிய லாபமும்..! `மாத்தி யோசி’ பிசினஸ் கதைகள் - 1 - புதிய தொடர்...

ஜம்புலிங்கம் காரிலிருந்து இறங்கி தன்னுடைய ரெஸ்டாரன்டுக்குள் நுழைந்தார். டிரைவர் வண்டியை பார்க்கிங் இடத்துக்கு எடுத்துச் சென்றார். மதியம் சுமார் 1 மணி.

டைனிங் ஹால் நிரம்பி வழிந்தது. 96 இருக்கைகளும் ஃபுல். ``6-ம் நம்பர் டேபிளுக்கு ரசம்” என்று ஒரு சூப்ரவைசர் குரல் கொடுத்தார். ஓர் ஊழியர் ரசவாளியோடு அங்கே விரைந்தார்.

உணவகம்

புவனா ஹோட்டல் அந்த ஊரில் ரொம்பவும் பிரசித்தம். மையப் பேருந்து நிலையத்துக்கு நேரெதிரே இருந்தது. அதனால் பயணிகள் வந்து உண்பது இயல்பாகவே நடந்தது. தினமும் 200 பேர் தேடிவந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

ஜம்புலிங்கம் கல்லா அருகே நின்றுகொண்டு மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். ``நாமே கண்காணித்தால்தான் வியாபாரம் நல்லா நடக்கும் ஸார்” என்று அடிக்கடி சொல்வார்.

ஐந்தாறு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஹோட்டலை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தது. ``எடமே இல்லைம்மா. பக்கத்து ஹோட்டலுக்குப் போகலாம் வா” என்று அந்தக் குடும்பத் தலைவர் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே போனார்.

இந்த வாசகம் ஜம்புலிங்கம் மனதில் ஆழப் பதிந்தது. ஒரு வியாபாரம் மிஸ் ஆகிவிட்டதே என்று நினைத்தார். டைனிங் ஹாலில் இடமில்லைதான். ஆனால், அந்தப் பிரச்னையை வேறு வகையில் தீர்க்க முடியுமா என்று யோசித்தார்.

சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை எல்லோரையும் நோட்டம் விட்டார். பலரும் நன்கு தெரிந்தவர்கள்தான். அவர்களுடைய பெயர்கள்கூட இவருக்கு அத்துப்படி. தினமும் இங்கே உண்பவர்கள். சகாய விலை, வயிற்றைக் கெடுக்காத உணவு. அதனால் அவர்கள் தருகிற ஆதரவு.

ஹோட்டல்

இந்த சிந்தனை ஓடிக்கொண்டிருந்தபோது ஜம்புலிங்கத்தின் மூளைக்குள் நூறு வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்தது. அங்கே தெரிந்த முகங்களில் 90% ஆட்டோ டிரைவர்கள். எதிரே இருந்த பேருந்து நிலையத்தில்தான் அவர்களது ஸ்டாண்ட்.

புவனா ஹோட்டலின் மேலே உள்ள லாட்ஜில் இருப்பவர்கள் உள்ளூரில் எங்காவது போக வேண்டும் எனில், இவர்களைத்தான் சிபாரிசு செய்வார் ஜம்புலிங்கம். அடாவடி சார்ஜ் இருக்காது. அதனால் இவரோடு பசை போட்டு ஒட்டியது போன்ற நெருக்கம்.

மறுநாளே, வழக்கமாகச் சாப்பிட வரும் எல்லா ஆட்டோ டிரைவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒரு ஐடியாவைச் சொன்னார். எல்லோரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்கள்.

வழக்கமான கேரியர் சாப்பாடு இரண்டு நபர்களுக்குப் போதுமானதாக இருக்கும். விலை கொஞ்சம் அதிகம். ஆனால், லிமிட்டட் மீல்ஸ்-ஸையே ஆட்டோ டிரைவர்களுக்குத் தருவதாகச் சொன்னார். ``ஒரு கேரிபேக்கில் அளவுச் சாப்பாடு. உள்ளே வந்து சாப்பிடும் ரேட்டில் 15 ரூபாய் தள்ளுபடி". அவர்கள் இந்த யோசனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். தினமும் 15 ரூபாய் சேமிக்க முடிகிறதே..!

நான் அங்கே போனபோது, ஆட்டோ டிரைவர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கினர். எண்ணிக்கை சுமார் 50. என்னருகே அமர்ந்திருந்த ஜம்புலிங்கத்துக்கு வணக்கம் போட்டபடி வெளியே சென்றனர்.

சாப்பாடு!

சாப்பாட்டு நேரம் 1 முதல் 2 மணி வரைதான். அதற்கு முன்னரும், பின்னரும் அத்தனைத் தள்ளுமுள்ளு இருக்காது. இங்கே நேரமும் இருக்கைகளும்தான் நம்மைச் சிறைப்படுத்தும் விஷயங்கள். வியாபாரத்தில் இதை constraints என்பார்கள். இது ஒரு வகையான பற்றாக்குறை.

இவற்றில் சில பற்றாக்குறை கண்ணுக்குத் தெரியும். சில பூடகமாக ஒளிந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடிப்பதுதான் வியாபார வெற்றிக்கான வழி. அதைத்தான் ஜம்புலிங்கமும் செய்தார். ரூ.15 தள்ளுபடி அவர்களுக்கு. அந்த நாற்காலியில் இன்னொரு புது கஸ்டமர். எப்படி யுக்தி!

`அந்தப் பையில் தனியாக, முழு அப்பளமாகத் தருகிறீர்களே. அது எதற்காக ஸார்?” என்று கேட்டேன். நான்காக உடைத்துப் போட்டால் ஈஸியாக இருக்குமே என்பது என் சந்தேகம்.

``உள்ளே வந்து சாப்பிட்டால் முழு அப்பளம் கிடைக்கும். அதை உடைத்துதான் சாப்பிடுவோம். ஆனாலும் அது முழுசா இருந்தாத்தானே அவர்களது திருப்தியும் முழுசா இருக்கும்?” என்றார்.

பெளர்ணமி அப்பளம் தந்தது கூடுதல் லாபம்..!

(மாத்தி யோசி பிசினஸ் கதைகள் தொடரும்)

- வெற்றி விடியல் சீனிவாசன்



source https://www.vikatan.com/business/finance/increased-profits-at-the-hotel-change-thinking-business-stories-1-new-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக