Ad

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு?

சமீபகாலமாக இந்து மதத்துக்கு அடித்தளமாக இருக்கும் மனு நீதி, வேத நூல்கள் உள்ளிட்டவை விவாதப் பொருளாகி வருகின்றன. குறிப்பாக திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் மனு நீதியை மிக தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், திமுக எம்.பி-யும், அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், யாரெல்லாம் இந்துக்குள் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தைச் சொல்வதாக சில கருத்துகளை முன்வைத்துப் பேசியிருந்தார்.

அண்ணாமலை

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆ.ராசாவின் பேச்சில் 40 நொடிகளை மட்டும் கட் செய்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் அரசியல் பேச்சின் அவல நிலை. திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உமிழ்ந்து, மற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிஷ்டவசமானது" என்று பதிவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஆ.ராசாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன. அதோடு, ஆ.ராசாமீது காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்தும் வருகின்றனர். மேலும், ஆ.ராசாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்துள்ளார்.

ஆ ராசா

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டபோது, ``இந்தியாவில் இல்லாத ஒன்றை ஆ.ராசா பேசவில்லை. இதிகாசங்களில், புராணங்களில் இருப்பதைதான் பேசியிருக்கிறார். கட்டுக் கதைகளை வாழ்வியலாக்கி விட்டனர். கடவுளின் பெயரில் மூடநம்பிக்கைகளையும், சாதிய தீண்டாமையை பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. அனைவரும் ஒரே கடவுளை வழிப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் கோயில் உள்ளே செல்ல முடிகிறது. இந்த தீண்டாமையின் பிறப்பிடத்தை ஒழிக்க வேண்டும்.

2,000 ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை கொண்டு வந்தாலும், ஆகவிதிகளில்படிதான் கோயில் இயங்க வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள். 1834-ம் ஆண்டிலேயே கல்வி முறை வந்தாலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களால் கல்வி பயில 150 ஆண்டுக்கால போராட்டம் தேவைப்பட்டது. வெளிநாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிற வேற்றுமை இருக்கிறது. ஆனால், ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று எங்குமில்லை. தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று புத்தகத்தில் அச்சடிக்கும் அளவுக்கு, தீண்டாமை இங்கு வாழ்வியல் ஆக்கப்பட்டுள்ளது.

இராஜீவ் காந்தி

வைதீக வழிபாடு மூலம்தான் தீண்டாமை இங்கு வந்தது. 1881-ம் ஆண்டு பரமக்குடியில் சட்டை கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு தீண்டாமை இருந்தது. இந்தியாவின் இந்து சட்டத்தில் பிரிவு 3-ல் ஆ.ராசா பேசியது அப்படியே இருக்கிறது. இந்த தீண்டாமை விஷயங்களை பொதுவெளியில் பேசிக் கொண்டே இருந்ததால் மக்கள் மனது மாறும். மக்கள் மனமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதில் பாஜக போன்ற அமைப்புகள் தீவிரமாக இருக்கின்றன. அதனால்தான் அதை சர்ச்சையாக்க பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் இதை புரிய தொடங்கிவிட்டார்கள்" என்றார். 



source https://www.vikatan.com/news/politics/arajas-speech-made-tamil-nadu-bjp-upset-what-does-the-dmk-side-say

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக