பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகச் சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்த ஜான்சன், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். பிரிட்டன் அரசியலில் என்ன நடக்கிறது?
அமைச்சர்கள் ராஜினாமா!
2022 பிப்ரவரி மாதத்தில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பின்ச்சரை, அரசின் துணைக் கொறடாவாக நியமித்தார் போரிஸ். இவர்மீது கடந்த காலங்களில் பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்திருக்கின்றன. இந்த நிலையில், ஜூன் 29-ம் தேதி அன்று இரவு, கிளப் ஒன்றில் அதிக அளவில் மது அருந்திவிட்டு தகராறு செய்திருக்கிறார் பின்ச்சர். மேலும், இரண்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் பெரிதானதும், அடுத்த நாளே தனது துணைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 5-ம் தேதி பேசிய போரிஸ் ஜான்சன், ``கிறிஸ் பின்ச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையிலிருந்தபோதும், அது பற்றி எனக்குத் தெரிந்திருந்தபோதும், நான் அவரைத் துணை கொறடாவாக நியமித்தது தவறு. இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார். போரிஸ் மன்னிப்பு கோரிய சில மணி நேரங்களில், அவரின் அமைச்சரவையின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவரும், நிதியமைச்சருமான ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகிய இருவரும்தான் ராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்கள்.
கிறிஸ் பின்ச்சரின் பதவி நியமன நடவடிக்கைகளில் போரிஸ் ஜான்சன் நடந்து கொண்ட விதத்தைக் காரணம் காட்டி இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். ரிஷி சுனக், ``இந்த அரசாங்கம் திறமையுடனும், சரியான முறையிலும் செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இருவரைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் க்வின்ஸும் (Will quince) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சியின் துணைத் தலைவரான பிம் அஃபோலமி, பிரிட்டனின் வர்த்தக தூதர் ஆண்ட்ரூ, அமைச்சக உதவிப் பணியிலிருந்த ஜோனாத்தன் குல்லிஸ், சாகிப் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் போர்க்கொடி!
எதிர்க்கட்சியினரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். ``பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது தெரிந்தும், அதை மறைத்து அவருக்குப் பதவி கொடுத்திருக்கிறார் போரிஸ். விரைவில் தேர்தல் வர வேண்டும். நம் நாட்டுக்கு அரசாங்க மாற்றம் வேண்டும்'' என்கின்றன எதிர்க்கட்சிகள். சொந்தக் கட்சியினர் ஒருபக்கம், எதிர்க்கட்சிகள் மறுபக்கம் எனக் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் போரிஸ் ஜான்சன். இந்த நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் போரிஸ், ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு!
ஏற்கெனவே, கொரோனா மூன்றாம் அலை உச்சத்திலிருந்தபோது கட்டுப்பாடுகளை மீறி, பிரதமர் அலுவலகத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சர்ச்சையில் சிக்கினார் போரிஸ். அப்போது அவரின் சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராகக் கிளம்ப, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 211 எம்.பி-க்களின் ஆதரவோடு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் போரிஸ். தற்போது மீண்டும் அவருக்கு எதிராகச் சொந்தக் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் களமிறங்கியிருப்பதால், அவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கக்கூட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2024-ம் ஆண்டுதான் போரிஸ் அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே ஆட்சி கவிழ்ந்துவிட்டால், தேர்தல் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. தற்போது அவருக்கு எதிராக மூன்று அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், மற்ற முக்கிய அமைச்சர்கள் போரிஸுக்கு ஆதரவாகவே நிற்கின்றனர். அடுத்தடுத்த நாள்களில் மேலும் சில அமைச்சர்கள், போரிஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறினால், அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ``2007-ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக இருந்த கார்டன் பிரவுன் அமைச்சரவையிலும், சில அமைச்சர்கள் பதவி விலகினர். ஆனால், அப்போது பிரவுனுக்கு விசுவாசிகளாக இருந்த அமைச்சர்கள், அவருக்கு ஆதரவாக இருந்ததால் அவரது பிரதமர் பதவி தப்பித்தது. அதேபோல, தற்போதிருக்கும் அமைச்சர்கள் போரிஸுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில், அவர் தப்பித்துக் கொள்வார்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
அடுத்த பிரதமர் ரிஷி சுனக்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், இன்ஃபோசிஸ் கிருஷ்ணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், 2020-ம் ஆண்டில் பிரிட்டனின் நிதியமைச்சரானர். கொரோனா காலத்தில், நிதித்துறையைத் திறம்படக் கையாண்டதால், மக்கள் மத்தியிலும், கன்சர்வேட்டிவ் கட்சியினர் மத்தியிலும் நற்பெயர் பெற்றார் ரிஷி. கடந்த முறை போரிஸ் ஜான்சனுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியபோது, போரிஸின் பதவி பறிபோனால், அடுத்த பிரதமராக ரிஷி சுனக்தான் இருப்பார் என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், அந்த யூகங்களைத் தொடர்ந்து நடந்த சம்பவம் ஒன்று ரிஷிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இன்ஃபோசிஸ் கிருஷ்ணமூர்த்தியின் மகளும், ரிஷியின் மனைவியுமான அக்ஷதா கிருஷ்ணமூர்த்தி, சரிவர வரி செலுத்தவில்லை என்று கிளம்பிய புகார்கள்தான் ரிஷிக்குப் பின்னடைவை ஏற்படுத்தின. பிரிட்டன் குடியுரிமை பெறாமல், அங்கு வசிப்பவர்கள் வெளிநாட்டிலிருந்து ஈட்டும் வருமானத்துக்கு வரி கட்டத் தேவையில்லை. அக்ஷதா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தனக்கிருக்கும் 0.9 சதவிகித பங்குகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாய்க்கு வரிக் கட்டாமல் இருந்தார். `கோடிக் கணக்கான வருமானத்துக்கு வரி கட்டாமல் இருப்பதற்காகவே குடியுரிமை பெறாமல் இருக்கிறார் அக்ஷதா. நிதியமைச்சரின் மனைவியே இப்படி வரி ஏய்ப்பு செய்யலாமா?' என்று எதிர்ப்புகள் கிளம்பின.
இதைத் தொடர்ந்து ரிஷி, ``என் மனைவி, அவரின் தாய் நாடான இந்தியாமீது வைத்திருக்கும் பற்றை என்னால் கைவிடச் சொல்ல முடியாது. இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதால்தான், அக்ஷதா பிரிட்டன் குடியுரிமை பெறவில்லை. இருந்தும், அவர் முறையான வரி செலுத்திவருகிறார்'' என்று விளக்கமளித்தார். அக்ஷதாவும், ``வெளிநாடுகளில் கிடைக்கும் வருமானத்துக்கும் பிரிட்டனில் வரி செலுத்துவேன்'' என்று உறுதியளித்தார். இதையடுத்து, இந்த சர்ச்சைகள் அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் பிரிட்டனின் பிரதமர் ரேஸில் ரிஷி சுனக்கின் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
இது குறித்து சர்வதேச அரசியலை உற்று நோக்கும் சிலர், ``போரிஸ் ஜான்சனின் சாம்ராஜ்ஜியம் சரிந்து கொண்டிருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியினரே அவர்மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அவரை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்திருப்பதால், ரிஷிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகும் எண்ணம் இருக்கலாம். ஒருவேளை கட்சிக்குள் தனக்கான ஆதரவை அவர் திரட்டினால், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பளாரக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி நிறுத்தப்படலாம்'' என்கிறார்கள். காலம் என்ன பதில் வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
source https://www.vikatan.com/government-and-politics/international/what-is-happening-in-britain-politics-and-borris-johnson
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக