Ad

திங்கள், 12 ஏப்ரல், 2021

கொதிக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. `மம்தா பிரசாரத்திற்கு தடை’ - காந்தி சிலை முன்பு தர்ணா!

294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இத்தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போர் போன்றே நடந்து வருகிறது. பாஜக இத்தேர்தலில் தங்களது கட்சியின் முழு பலத்தையும் இறக்கி வேலை செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் விரைவில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டது என்ற கருத்தும் உலவுகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்த நான்காவது கட்ட தேர்தலில் போது கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதல்குச் என்ற என்ற இடத்தில் வாக்குச்சாவடி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பை வைத்து பா.ஜ.க-வும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து மம்தா பானர்ஜி மிகவும் ஆக்ரோஷம் அடைந்துள்ளார். இஸ்லாமிய ஓட்டுக்கள் சிதறக்கூடாது என்று மதத்தின் பெயரை சொல்லி வாக்கு கேட்டார். இதையடுத்து மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த கருத்துக்காக தேர்தல் கமிஷன் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

பிரசார களத்தில் மோடி

அதோடு மம்தா பானர்ஜி திங்கள் கிழமை இரவு 8 மணியில் இருந்து செவ்வாய் கிழமை இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், `சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், தேர்தல் நடைமுறைகளை பாதிக்கும் வகையிலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். எனவே அவர் 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்றார். 5-ம் கட்டத்தேர்தல் வரும் 17-ம் தேதி நடக்க இருக்கிறது. அப்பகுதியில் மம்தா பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்நடவடிக்கை ஜனநாயகமற்றது என்றும் ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு தினம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கையை கண்டித்து மம்தா பானர்ஜி செவ்வாய் கிழமை கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். பிற்பகல் 12 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். இப்போராட்டத்தின் போது எந்த வித வன்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாக இருக்கிறது. இதற்காக போராட்டம் நடைபெற இருக்கும் இடத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஞ்சிய நான்கு கட்டத்தேர்தலிலும் வன்முறை நடைபெறாமல் இருக்க அதிக அளவில் மத்திய படைகள் மேற்கு வங்கம் வந்த வண்ணம் இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் ஒருவர் மாற்றி ஒருவர் மேற்கு வங்கத்தை சுற்றிச்சுற்றி வந்து பிரசாரம் செய்கின்றனர். அமித்ஷா, `தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார்’ என்று கூறி தனது ராஜினாமா கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்கிறார்.

மம்தா பானர்ஜி - மோடி

இத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பா.ஜ.க 100 சதவீதம் நம்புகிறது. இத்தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியம் ஆகும். மேற்கு வங்கத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் அடுத்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதாகிவிடும் என்று பா.ஜ.க கருதுகிறது. உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலே மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பா.ஜ.க நம்புகிறது. எனவேதான் பாஜக மேற்கு வங்கத்திற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க முழுமையாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எனவேதான் அதற்கு ஈடுகட்டும் விதமாக மேற்கு வங்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்று பா.ஜ.க கருதுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு பிரபலமான ஒருவர் இல்லாமல் இருப்பதுதான் அக்கட்சிக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர் கங்குலியை அரசியலுக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/politics/ban-for-mamata-campaign-in-west-bengal-election-mamata-decided-to-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக