Ad

செவ்வாய், 18 அக்டோபர், 2022

``‘குஜராத் மாடல்’ பயத்தில் ‘திராவிட மாடல்’ என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்!” - குஷ்பு அதிரடி

`சென்னையிலேயே இல்லை’ என்று சொல்லுமளவுக்கு வெளியூர்ப் பயணங்களில் பிஸியாக இருந்த நடிகையும், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவைப் பேட்டிக்காக தொடர்புகொண்டோம். தன் இல்லத்துக்கு வரச் சொன்னவர், தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தை முடித்துவிட்டு சந்தித்தார். இனி கேள்வியும் அதற்கான பதிலையும் பார்க்கலாம்...

``அரசியலில் நீங்கள் பரபரப்பாக இல்லையே... ஒதுங்கியிருக்கிறீர்களா அல்லது ஒதுக்கப்பட்டிருக்கிறீர்களா?”

``நான் ஒதுங்கவுமில்லை, ஒதுக்கப்படவுமில்லை. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை முன்னின்றுதான் ஒருவர் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்பதில்லை. கொடுத்த வேலையைப் பொறுப்பாக முடித்துக் கொடுப்பதுதான் இங்கே முக்கியம். எனக்கான வேலைகள் தேசிய அளவில்தான். மாநில அளவிலான வேலைகளை தலைவர் அண்ணாமலை நல்லமுறையில் செய்துகொண்டிருக்கும் போது அதில் தலையிடுவது அர்த்தமற்றது.”

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

``பல ஒன்றியங்கள் ஒன்றிணைந்த நாடு இந்தியா. அப்படி இருக்கும் போது இந்தியை மட்டும் பிராதன மொழியாக ஒவ்வொருமுறையும் முன்னிறுத்துவது சரியா?”

``இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. இங்கு எங்கேயும் இந்தி திணிக்கப்படவில்லையே. இதை சரியாக பார்க்காமல் தி.மு.க-வினர் ‘இந்தி மொழி... இந்தி மொழி...’ என்று தனது வழக்கமான அரசியலை முன்னெடுத்துள்ளனர். தேசியக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க, அவர்கள் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இன்னும் ஏன் சி.பி.எஸ்.சி முறையையே பின்பற்றுகிறார்கள். ‘இந்தி எதிர்ப்பு... இந்தி எதிர்ப்பிற்கான மற்றொரு போர்...’ என்று சொல்லி சொல்லி மாணவ, மாணவியரின் வரும் காலத்தை பாழாக்கி, அவர்கள் வாழ்க்கையை பணையம் வைத்து அரசியல் செய்வதை இனியாவது நிறுத்தட்டும் தி.மு.க!”

மோடி - ஸ்டாலின்

“ ‘திராவிட மாடல் அனைவருக்குமானது; குஜராத் மாடல் முதலாளிகளுக்கானது.’ என்கிறார்களே?”

``பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அதிகப்படியான தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து மாபெரும் வளர்ச்சியைக் காட்டினார். அதிலிருக்கும் நல்ல விஷயங்களைக்கொண்டு இன்று நாட்டையும் முன்னேற்றுகிறார். ஒருவேளை ‘குஜராத் மாடல்’ தமிழ்நாட்டுக்கு வந்தால், எங்கு அம்பலப்பட்டுவிடுவார்களோ என்கிற பயத்தில் ‘திராவிட மாடல்’ என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் தமிழக நலனுக்காக என்ன செய்திருக்கிறது... உண்மை நிலையை அறிய வேறு எங்கும் போக வேண்டாம். `ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல் முதல்வரின் கொளத்தூர் தொகுதியைப் பார்த்தாலே தெரிந்துவிடும். அங்கே கால்கூட வைக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.”

திமுக பொதுக்குழு

``தி.மு.க பொதுக்குழுவிற்கு பின் ‘முதியோர் முன்னேற்ற கழகம்’ என்று விமர்சிப்பதை ஒரு முன்னாள் தி.மு.க நிர்வாகியாக எப்படி பார்க்கிறீர்கள்?”

``நிச்சயமாக இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதில் பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார். அதனால்தான் ஐம்பது வயதுக்கு கீழ் இருப்பவர்களை முக்கிய துறைகளின் அமைச்சர்களாக நியமித்திருக்கிறார். அடுத்த தலைமுறையை உருவாகுவது, அவர்களது செயல்களை பரிசீலிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒரு கட்சியில் இளைஞரை நியமிக்கிறோம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ எந்த ஒரு முடிவும் எடுக்காமல் பாதயாத்திரை என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்டாலின் அவர்கள் 42 வருஷமா பதவி வரும், பதவி வரும்னு காத்திருந்து கடைசியாக வந்திருக்கிறார். நான் அதை விமர்சிக்க விரும்பவில்லை. என்னதான் எதிரில் நின்று கொண்டு முதல்வர் பற்றி பேசினாலும், அவர் இருக்கும் இன்றைய நிலைக்கு அவருடைய கடின உழைப்பை புறம் தள்ளிவிட முடியாது”

ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி

“என்.ஐ.ஏ மாதிரியான புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, அமைப்புகளை முடக்குவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதா?”

“மத்திய அரசு யாரையும் நேரடியாக முடக்கவில்லையே. எல்லாம் நிரூபிக்கப்பட்டு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீப்பு வந்திருக்கிறது. பா.ஜ.க சொன்னதினால்தான் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது என்றால், நம் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா? ஒரு தீர்ப்பு ஒருவருக்கு சாதகமாக இருந்தால் ஜனநாயகமாக இருக்கிறது. எதிர்ப்பாக இருந்தால் பா.ஜ.க கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது எந்த விதத்தில் நியாயம்”



source https://www.vikatan.com/government-and-politics/politics/kushboo-says-dmk-was-afraid-of-gujarat-model

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக