Ad

திங்கள், 12 ஏப்ரல், 2021

கொரோனா பரவல்: சில்லறை விற்பனை கடைகளுக்கு சுழற்சி முறை அனுமதி.. வியாபாரிகள் சொல்வது என்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனை மையத்தில் சுழற்சி முறையில் சில்லறை வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. கோயம்பேட்டில் மொத்தம் 1,834 சில்லறை விற்பனை கடைகளில் 900 கடைகள் ஒரு நாளும் மீதமுள்ள கடைகள் மற்றொரு நாளும் விற்பனை செய்துகொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10-ம்தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சில்லறை வியாபாரிகள் நடத்திய தர்ணா போராட்டத்தை தொடர்ந்து சுழற்சி முறையில் கடைகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. நேற்று முதல் சுழற்சி முறையில் சில்லறை விற்பனை கடைகள் செயல்படத் தொடங்கின.

கோயம்பேடு சந்தை

கோயம்பேடு காய்கறி சந்தையின் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சில்லறை விற்பனை கடைகளில் பாதி அடைக்கப்பட்டிருந்த சூழலில் அங்கே கள நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நேரடி விசிட் அடித்தோம்...

மொத்த வியாபாரக் கடைகளைத் தாண்டி மார்கெட்டின் மையமாக உள்ள சில்லறை விற்பனை கடைகள் இருக்கும் பகுதிக்கு சென்றபோது அங்கே ஆள்அரவம் ஏதுமின்றி அப்பகுதியே வெறிச்சோடிக் காணப்பட்டது. பல கடைகளின் முன் தொழிலாளர்கள் அமர்ந்து பரமபதம் விளையாடிக்கொண்டிருந்தனர். சில கடைகளுக்கு முன் ஒரு கோணிப் பையை விரித்து சிலர் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பகுதியை பார்க்கவே முழு லாக்டெளன் போட்டது போலவே தோற்றம் அளித்தது. ஆனால், அதே நேரத்தில் மொத்த வியாபாரக் கடைகளின் முன் லாரிகளில் காய்கறிகள் இறக்கிக் கொண்டிருப்பதையும் சில லாரிகள் காய்கறிகளுடன் நிறுத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இங்கே 100-க்கு 4 கடைகள் திறந்திருந்தன இருந்தால் அங்கே 100-க்கு 8 கடைகள் தான் அடைக்கப்பட்டிருந்தன.

மொத்தவியாபார கடைகள் - கோயம்பேடு

வெறிச்சோடிக் கிடந்த சில்லறை விற்பனை கடைகளிலிருந்த சில வியாபாரிகளிடம் பேசினோம். அங்கிருந்த சிலரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நாங்கள் அப்துல் கலாம் கோயம்பேடு வணிக வளாக காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று பேசத் தொடங்கினார்கள்...

“ஊருக்குள் கொரோனா பரவல் என்றதுமே முதலில் அரசுக்கு கோயம்பேடு சில்லறை வியாபாரக் கடைகள் தான் நினைவுக்கு வருகிறது. எங்களிடம் எப்போதும் கூட்டம் சேருவதே கிடையாது. ஏதோ இதை நாங்கள் பிழைப்பிற்காக சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். சிஎம்டிஏ-வில் இருக்கும் சிசிடிவி-யை செக் பண்ணிப் பாருங்கள். அந்த உண்மை உங்களுக்கே புரியும். சரி இருக்கும் கடைகளில் பாதியை அடைத்துவிட்டு மீதி இருக்கும் கடைகளில் வியாபாரம் செய்யச்சொன்னால் அப்போது தானே கூட்ட நெருக்கடி ஏற்பட்டு கொரோனா பரவ அதிக வாய்ப்பு உருவாகும். 100 கடைகளில் நடந்த வியாபாரத்தை 50 கடைகளில் செய்யச் சொன்னால் கூட்டம் கூடுமா கூடாதா? என்று கேள்வி எழுப்பியவர்களிடம், பிறகு ஏன் சுழற்சி முறை விற்பனைக்கு அரசு உத்தரவிடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்,

“இது அரசு உத்தரவுதான் என்றாலும் இந்த உத்தரவுக்குப் பின்னால் இருப்பவர்கள், அதைச் செயல்படுத்துபவர்கள் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர்தான். கடந்த கொரோனா காலத்தில் சில்லறை வியாபாரிகள் இன்றி கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேல் வியாபாரம் செய்து காசு பார்த்து பழகிவிட்டனர். அதே அளவு மீண்டும் லாபம் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு சில்லறை வியாபாரிகள் இருக்க கூடாது. இதனால் அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கச் செய்கிறார்கள்.

சில்லறை விற்பனை பிரதிநிதிகள்

உண்மையில் மொத்த வியாபாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் சில்லறை வியாபாரிகள்... நாங்கள் சிறு மொத்த வியாபாரிகள். கொரோனாவை காரணமாக வைத்து ஒட்டுமொத்தமாக சில்லறை வியாபாரிகளையும் அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்கு தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர்” என பல்வேறு ஆதங்கங்களை முன்வைத்தனர்.

மேலும், “பாதிக்கடைகளுக்குதான் செயல்பட அனுமதி என்ற அரசு உத்தரவின் மூலம் கிட்டத்தட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அரசு கேள்விக்குறி ஆக்கியுள்ளது. எங்கே தவறு நடக்கிறது என்பதை வருவாய், சுகாதாரம் என அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து முடிவு எடுக்கட்டும். எங்கே தவறு நடக்கிறதோ அங்கே நடவடிக்கை எடுக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்படி எதுவும் செய்யாமல் தனிப்பட்ட சிலரின் லாபத்திற்காக ஒட்டுமொத்த கடைகளையும் அடைக்க வேண்டும் என்று உத்தரவிடுவது எந்த வகையில் நியாயம்? இப்படி பாதிக்கடைகள் செயல்பட அனுமதி அளிப்பதன் மூலம் காய்கறி விலை ஏற்றத்திற்கும் வழி வகுக்கிறது அரசு. இந்த விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுவது மக்கள் என்றால் பலனடைபவர்கள் மொத்த வியாபாரக் கடைகளை நடத்தும் முதலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.

கோயம்பேடு சந்தை

சில்லறை வியாபாரிகளை அழிக்க கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் வர வேண்டாம். இவர்களே போதும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி எங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கோரிக்கையும் வைத்தனர்.

சில்லறை விற்பனை பிரதிநிதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம், “இந்த அத்தனை குழப்பத்திற்கும் காரணம் அரசு அதிகாரிகளும், திட்டமிடுதல் இல்லாத அவர்களின் நிர்வாக முறையும் தான். கடந்த முறை இதேபோலத்தான் லாக் டெளன் நேரத்தில் திருமழிசையில் காய்கறி சந்தையை ஏற்படுத்தி அனைவருக்கும் உரிய வகையில் கடைகளை அமைத்துக் கொடுப்போம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தற்போது வியாபாரிகள் அரசு எடுக்கும் எந்த முடிவையும் நம்ப மறுக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சிலரே மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் இடையே இடைவெளியை ஏற்படுத்தி காசு பார்க்கப் பார்க்கிறார்கள்.

கார்த்திகேயன்

வெளியில் சொல்வது போல மொத்த வியாபாரிகள் சிறு வியாபாரிகளை அழிக்கப்பார்க்கிறார்கள் என்பதெல்லாம் உண்மையில்லை. வாழ்வாதாரத்திற்காக இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறார்கள் என்பது அனைவரும் நன்றாக உணர்ந்துதான் இருக்கிறார்கள். அதிகாரிகளை நம்பாமல் அரசே நேரடியாகத் தலையிட்டு இதற்கு சரியான தீர்வு காண வேண்டும்” என்றார்.

அடைக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் - கோயம்பேடு

இரண்டு தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்தும் சிஎம்டிஏ டிஆர்ஓ கோவிந்தராஜனிடம் பேசினோம் “இது ஒரு தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அரசின் ஆணைகளை அதிகாரிகள் செயல்படுத்துகிறோம். என் மீது குறிப்பிட்ட ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இப்படியான பொய்க்குற்றாச்சட்டை சுமத்துகிறார்கள். என் மீதான வியாபாரிகளின் குற்றச்சாட்டு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/koyembedu-small-scale-business-people-upset-over-the-government-decision

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக