இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை 9.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மகாராஷ்டிரா, ஆந்திரா, சட்டிஸ்கர், பஞ்சாப், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள், அதிகமான தடுப்பூசிகளை விநியோகம் செய்யுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
இந்நிலையில் மும்பை நகரில் 100 தனியார் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக தடுப்பூசித் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தங்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக, இதற்கு மகாராஷ்டிரா அரசு காரணம் கூறியுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்திற்கு 48 லட்சம், மத்தியப் பிரதேசத்திற்கு 40 லட்சம், குஜராத்திற்கு 30 லட்சம், ஹரியானாவிற்கு 24 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே அதிக கொரோனா தொற்று நோயாளிகளைக் கண்டறிந்து வரும் மகாராஷ்டிராவிற்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டுமே வழங்கியிருப்பது பாரபட்சமானது என்று அம்மாநில அரசு கூறுகின்றது.
இதற்கு பதிலளித்த இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ``மகாராஷ்டிர அரசு, தன்னால் சரியாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாத ஆற்றாமையை, மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பிக்கலாம் என்று நினைக்கிறது" என்றார்.
மேலும், ``மகாராஷ்டிராவிற்கு இதுவரை 1.6 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் சராசரி தடுப்பூசி விநியோகத்தைவிட அதிகம். நிச்சயம் மத்திய அரசு பாரபட்சமின்றி நடந்துகொள்கிறது" என்கிறார் ஹர்ஷ்வர்தன்.
இதற்கிடையில், ``மகாராஷ்டிரா அதற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் ஐந்து லட்சத்தை வீணாக்கிவிட்டது. அதுவும் இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்" என்று மத்திய அரசு தெரிவித்தது. தாங்கள் வீணாக்கியதைவிட, தெலங்கானா போன்ற மாநிலங்கள் அதிகமாக வீணாக்கியிருக்கின்றன என்று பதில் கூறியிருக்கின்றது மகாராஷ்டிரா அரசு.
இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதிந்த ட்வீட்டில்...
``இதுவரை 9.1 கோடி தடுப்பூசி டோஸ்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
2.4 கோடி டோஸ்கள் கைவசம் ஸ்டாக் உள்ளது.
1.9 கோடி உற்பத்தியில் உள்ளது.
எனவே தட்டுப்பாடு குறித்த கவலை தேவையற்றது. பதற்றமும் தேவையற்றது" என்று பகிர்ந்துள்ளார்.
ஆனால், இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 34 - 35 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. உற்பத்தியை பொறுத்தவரை `கோவாக்ஸின்' தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4.5 லட்சம் டோஸ்கள் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். தற்போது அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 1.6 லட்சம் டோஸ்கள் மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றது. `கோவிஷீல்டு' தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால், ஒரு நாளைக்கு 21 லட்சம் டோஸ்கள் மட்டுமே அதிகபட்சம் தயாரிக்க முடியும்.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா, ``எங்கள் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்திட மத்திய அரசு ரூபாய் 3,000 கோடி ஊக்க நிதியாக அளிக்க வேண்டும். அளித்தால் மட்டுமே ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை பெருக்கவல்ல கட்டுமானத்தை உருவாக்க முடியும்" என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தடுப்பூசிகள் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் உலக கொரோனா தடுப்பூசி புரிந்துணர்வு இயக்கமான `கோவாக்ஸ் (COVAX)'க்காக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால், சீரம் இன்ஸ்டிட்யூட் கடும் நெருக்கடி நிலையில் இருப்பதை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார் அடார் பூனாவாலா.
இதற்கிடையில், தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க, ரஷ்ய அரசு தயாரித்து ரெட்டி நிறுவனம் விநியோகிக்கவிருக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும், நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று அதன் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையான இடைவெளியை 8 வாரத்தில் இருந்து 12 வாரமாக மாற்றக்கூடும். மேலும், இந்தத் தடுப்பூசிகளை வேறு பல தடுப்பூசி தயாரிக்கும் திறனுள்ள கம்பெனிகளுக்கும் இடைக்கால உரிமை அளித்து உற்பத்தியை பெருக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது.
Also Read: கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மகாராஷ்டிரா அரசு குற்றச்சாட்டு
மத்திய அரசு, தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களின் கட்டுமானத்தை அதிகரித்து இன்னும் அதிகம் உற்பத்தி செய்ய வைக்கலாம். அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை மீண்டும் உருவாக்கி தடுப்பூசிகளை குறைந்த செலவில் உருவாக்கிட வேண்டும். இது எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் பெருத்தொற்றுகளுக்கு எதிராக எடுக்கும் நல்ல முடிவாகவும் இருக்கும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயவுசெய்து விரைவில் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என்பது, இந்நேரத்தின் முக்கிய அறிவுரை.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/will-india-successfully-tackle-the-vaccine-shortage-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக