Ad

சனி, 10 ஏப்ரல், 2021

பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ் - என்ன காரணம்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் சூழலில், ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்றிவருகின்றன. அந்த வகையில், நார்வே நாடும் தன் பங்குக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, `எந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக் கூடாது’ என்பது.

கொரோனா வைரஸ்

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, அந்த நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) தனது 60-வது பிறந்தநாளைத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் 13 பேர் கலந்துகொண்டனர். இதனால், அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்புக் கேட்டார்.

இருந்தபோதிலும், பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, இன்று ரூ.1,75,000 (20,000 Norwegian crowns) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, நார்வேயின் தலைமை காவல் அதிகாரி ஓலே சாவெருட் (Ole saeverud),``சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை!(Though the law is the same for all, all are not equal in front of the law)" என்றார். மேலும், ``சமூகக் கட்டுப்பாடுகள் குறித்த அரசின் விதிகளில், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரியே” என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: இரவு நேர ஊரடங்கு பயனளிக்குமா? - மோடி வலியுறுத்தும் `கொரோனா லாக்டெளனின்' அவசியம் என்ன?

அரசின் விதிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை மட்டுமல்ல, ஆட்சியாளர்களின் கடமை என்றும் உணர்த்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.



source https://www.vikatan.com/news/world/norway-prime-minister-erna-soldberg-fined-for-violating-corona-rules

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக