Ad

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... டாஸ்மாக் தப்பியது எப்படி?

தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் கடந்த 10.04.2021 முதல் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த முறை போடப்பட்ட ஊரடங்கின் ரிவர்ஸ் வெர்சனாக இருக்கிறது இந்த ஊரடங்கு. அதாவது லாக்டெளன் - 6.0, 5.0 எனத் தொடங்கி கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் லாக் டவுன் 1 என்ற நிலை வரை செல்ல வாய்ப்பு உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், “தற்போது அரசு பின்பற்றி வரும் நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றினாலே கொரோனா தொற்று பரவலை ஒரு மாத காலத்திற்குள் பிப்ரவரி மாதத்தில் இருந்தது போல குறைத்துவிடலாம். கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தலையோ இன்ன பிற விஷயங்களை நான் காரணமாக கூற விரும்பவில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் 7 கோடி காரணங்கள் சொல்லலாம். அதனால் மக்கள்தான் கவனமாக இருப்பதுடன் கொரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கோயில் வழிபாடுகள், திரையரங்குகள், சிறு குறு வியாபரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசு டாஸ்மாக்கை மட்டும் எப்போதும் கண்டு கொள்வதில்லை. மதுக்கடையிலோ, மது அருந்துபவர்களுக்கோ கொரோனா வராதா? என்ற கேள்விகளும், டாஸ்மாக்குக்கு கட்டுப்பாடுகள் விதிக்காதது குறித்தும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.

Also Read: இரவு நேர ஊரடங்கு பயனளிக்குமா? - மோடி வலியுறுத்தும் `கொரோனா லாக்டெளனின்' அவசியம் என்ன?

பொது மக்கள், சமூக ஆர்வலர்களின் விமர்சனங்கள் குறித்து அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம். “டாஸ்மாக்கை திறக்க வேண்டுமா, வேண்டாமா என பல விவாதங்கள் செய்துவிட்டோம். முதன்முதலில் முழு ஊரடங்கு அமல்படுத்தும்போது அருகில் இருக்கும் மாநிலங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி மது வாங்கச் சென்றவர்கள் அங்கிருந்து கூடுதலாக கொரோனா தொற்றையும் அவர்களுடன் வாங்கி வந்தனர். இதனால்தான் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இப்படி மாநிலம் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மதுக்கு ஆசைப்பட்டு கொரோனாவை விலை கொடுத்து வாங்கி வரும் பொறுப்பற்றவர்களைக் கண்காணிக்க அதிகளவு காவல்துறையினரையும், மருத்துவ ஊழியர்களையும் களத்தில் இறக்கிவிட வேண்டிய சூழல் உருவானது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் எளிய மக்களை கவனிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்துதான் டோக்கன் கொடுப்பது, ஆதார் கார்டு எண்ணை வாங்கிக்கொண்டு கொடுப்பது என்று சில கட்டுப்பாடுகள் விதித்து டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி

முழுவதும் அடைத்துவிடலாம் என்றால் அப்படி அடைப்பதால் உருவாகும் சிக்கல் திறந்து வைப்பதை விட குறைவாக இருக்கிறது. இதையும் கவனத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இந்த ஓராண்டுக்குள் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது, எப்படித் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை கற்றுக்கொண்டுவிட்டனர். அதில் தெளிவாகவும் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போடுவதே தனிமனித சுதந்திரத்தில் அடங்கும் எனும் போது மது அருந்துவதில் எப்படி தமிழக அரசு தலையிட முடியும்? அரசு ஒரு கொள்கையை, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் அது முழு வெற்றி அடையும். அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தாலும் நான் போக மாட்டேன் என்று ஒருவன் முடிவு செய்துவிட்டால் அவரை யாரால் தடுக்க முடியும். அரசு திறந்து வைத்தாலும் என்ன பயன்? எல்லாத்துக்கும் அரசை கை காட்ட முடியாது. சட்டங்களும், திட்டங்களும், விதிகளும் இருக்கிறது. குடிக்க கூடாது என்று அரசு கூறுகிறது. ஆனால், நான் குடிப்பேன் என்னை யாரும் கேட்க முடியாது என்று சொல்பவர்களை நம்மால் என்ன செய்ய முடியும்? தேர்தல் முடிந்து தற்போதுதான் எல்லோரும் அடுத்தடுத்த நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கொரோனா தடுக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். எண்ணிக்கை அதிகரிக்கும் போது டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் அரசு கட்டுப்பாடு விதிக்கும். இது உறுதி” என்றார்.

Also Read: டாஸ்மாக்: `மதுபானம் ஆறாக ஓடுகிறது; அரசு கவலைகொள்ளவில்லை!' - உயர் நீதிமன்றம் அதிருப்தி

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காத தமிழக அரசின் முடிவு குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பால் பர்னபாஸிடம் பேசினோம். “பல லட்சம் கோடி கடனில் இருக்கும் அரசுக்கு பில் இன்றி, ஜிஎஸ்டி இன்றி மொத்தமாக வருவாய் தரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக் மட்டும்தான். டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் குடிப்பதற்காகவே வாழும் சிலர் அதையெல்லாம் மதிப்பதில்லை. இவர்களால் தான் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகளே விதிக்காமல் விட்டது அரசு. பக்கத்து மாநிலத்திற்கு செல்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்டவர்கள் தான். குடிக்காமல் இருப்பதால் உண்டாகும் ஏற்படும் கை நடுக்கம், கால் நடுக்கம் போன்ற நோய்களுக்கு இது ஒரு மருந்துக்கடை என்றாகிவிட்டது. அதனால் தான் லாக் டெளன் போட்டாலும் அரசு இதை இயக்குகிறது.

பால் பர்னபாஸ்

தனிமனித ஒழுக்கமே சீர்குலைந்து கிடக்கும்போது அதை எப்படி குற்றம் சொல்ல வேண்டும். சாராயத் தொழிற்சாலைக்கு காப்பகமாக தமிழக அரசு இருக்கிறது. வருமானம் வரும் தொழிலை யார் நிறுத்த விரும்புவார்கள். இதை நம்பித்தான் பல வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் கொடுத்திருக்கிறார். அப்புறம் எப்படி இதை அடைப்பார்கள். எளிய குடும்பத்தினருக்கு டாஸ்மாக்... கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு எலைட் டாஸ்மாக்... என்று வைத்திருக்கும் போது அரசு எப்படி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் நினைக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-government-announced-lock-down-with-conditions-why-no-restrictions-for-tasmac

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக