கொரோனா விடுமுறையால் வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் நீச்சல் பழக கேட்டதால், அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த பெண்ணும், அந்த சிறுமியும் கிணற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம், உறவினர்களை சோகமடைய வைத்திருக்கிறது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே முத்துசோளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. கொரோனா பரவல் காரணத்தால், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மல்லிகா வீட்டுக்கு வந்த அவரது அக்காள் பேத்தியான வர்ஷினி (வயது 11), தனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும்படி மல்லிகாவிடம் கேட்டுள்ளார். இதனால், பேத்தியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மல்லிகா, அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதற்காக கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கிணற்றில் இறங்கி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, வர்ஷினி திடீரென பயந்திருக்கிறார். இதனால், தனது பாட்டி மல்லிகாவை வர்ஷினி கட்டிப்பிடித்துக்கொண்டதால், தடுமாறிய மல்லிகாவும், வர்ஷினியும் சேர்ந்து நீரில் மூழ்கினர். இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து மீட்பதற்கு, அங்கு குவிந்தனர். கிணற்று நீரில் குதித்து, நீரில் மூழ்கிய அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.
Also Read: நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது
ஆனால், இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, க.பரமத்தி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு, தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்படி, தகவலறிந்த கரூர் தீயணைப்பு துறையினர், ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பிய பேத்திக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்ற பாட்டியும், பேத்தியும் கிணற்று நீரில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/karur-younger-girl-and-her-grand-mother-died-in-well-while-swimming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக