ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் வரதன் (வயது 75). இவரது மனைவி சரஸ்வதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வாரிசு இல்லை என்பதால், முதியவர் வரதன் இளைஞர் ஒருவரை வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞரும் விட்டுச்சென்றதால் வரதன் ஆதரவின்றி தவித்துவந்தார். இந்த நிலையில், நேற்று பொழுதுவிடிந்து நீண்ட நேரமாகியும் வரதன் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. வரதனுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண் ஒருவர்தான் அவரை கவனித்துக் கொள்கிறார்.
முன்பக்க கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த பெண் கதவைத் தட்டியும் வரதன் திறக்கவில்லை. சந்தேகமடைந்து பின்பக்கம் சென்று பார்த்த அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார் அந்தப் பெண். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து தக்கோலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, கழுத்து அறுபட்ட நிலையில் முதியவர் வரதன் கொலைச் செய்யப்பட்டு கிடந்தார். சடலத்துக்கு அருகில் கிடந்த கருப்புப் பை ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பையில் கத்தி, கயிறு, மயக்க மருந்துகள் போன்றவை இருந்தன. இதையடுத்து, முதியவரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், வரதனுக்குச் சொந்தமாக வீடுகளும், நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நிலத் தரகராகவும் அவர் செயல்பட்டுவந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அனந்தபுரம் செல்லும் சாலையிலுள்ள நான்கு மனைகளை வரதன் விற்றதாகவும் சொல்கிறார்கள். எனவே, சொத்துகளை அபகரிக்க உறவினர்களால் கொலை நடந்திருக்கலாம் அல்லது மனை விற்பனையில் ஏதாவது தகராறு ஏற்பட்டு அந்த முன்பகையிலும் எதிரிகள் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதே நேரம், வளர்ப்பு மகனும் தலைமறைவாக இருப்பதால் போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/old-man-killed-in-arakkonam-police-searching-for-adopted-son
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக