Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

சீர்காழி: `முதலைகள் உள்ள கால்வாயை கடப்பது எப்படி?!’ - இறந்தவர் உடலுடன் போராட்டம்

சீர்காழி அருகே இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிக்கு எடுத்து செல்ல பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டி தரக் கோரி,  இறந்தவர் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவக்  கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான மூதாட்டி விசாலாட்சி.  உடல்நிலை சரியில்லாமல்  நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்ல வேண்டும். மேலும் 'கால்வாயில் முதலை உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கக்கூடாது’ என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கிராமத்தினரிடம் பேசினோம். ``பக்கிங்காம் கால்வாயை  கடக்க பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை தண்ணீரில்  இறங்கி முதலை அச்சத்துடன்  கடந்த பல ஆண்டுகளாக எடுத்துச் செல்கிறோம். இது குறித்து  அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் முறையிட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இறந்தவர் உடலை திருமுல்லைவாசல் - கூழையார் செல்லும் சாலையில் போட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இறந்தவர் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம்

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினோம். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட எங்களிடம் அரசு  அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு இறந்தவர் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/people-protest-with-dead-body-to-build-bridge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக