Ad

சனி, 10 ஏப்ரல், 2021

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (Prince Philip) உயிரிழந்தார். இந்த அதிகாரபூர்வமான தகவலை இங்கிலாந்தின் `பக்கிங்காம் அரண்மனை’ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

``தி டியூக் ஆஃப் எடின்பர்க்" (Duke of Edinburgh) என்றழைக்கப்படும் பிலிப்புக்கு வயது 99. தனது உடல்நலன் கருதி, கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக, லண்டனிலுள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பினார்.

பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

இந்தநிலையில், வின்ட்சர் கேசில் (Windsor Castle) அரச மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருந்த பிலிப் உயிரிழந்ததாக அவரது ராயல் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பக்கிங்காம் வெளியிட்ட அறிக்கையில், ``மாட்சிமை பொருந்திய ராணி தனது அன்புக்குரிய கணவர், எடின்பர்க்கின் சீமான் இளவரசர் பிலிப் இறந்துவிட்டார் என்ற தகவலை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறார்” என்று செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிரேக்கத் தீவான கோர்ஃபுவில் 1921-ம் ஆண்டு பிறந்த இளவரசர் பிலிப், 1947-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டார். நான்கு குழந்தைகளைப் பெற்ற இவர்களுக்கு எட்டுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூலம் 10 கொள்ளுப் பேரக் குழந்தைகளையும் பார்த்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி - இளவரசர்

இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்த அரச தம்பதிகள் என்ற பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளவரசரின் மறைவுக்குப் பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/world/prince-philip-the-husband-of-britain-queen-elizabeth-ii-died-at-99

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக