Ad

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

ஈரோடு: ரூ.3 கோடி இன்ஷுரன்ஸ் பணம்; காரோடு எரிக்கப்பட்ட கணவர்! - மனைவி சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், துடுப்பதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (62). விசைத்தறி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ரங்கராஜன் சுமார் ஒரு கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே, ரியல் எஸ்டேட் பிசினஸ் சம்பந்தமாக கடந்த மாதம் 15-ம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைக்கு பைக்கில் சென்றவர், சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் கால் எழும்பு முறிந்து படுகாயமடைந்தவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

உயிரிழந்த ரங்கராஜன்

ரங்கராஜனுக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து ஏப்ரல் 8-ம் தேதி இரவு, கோவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஆம்னி காரில் ஈரோடு திரும்பியுள்ளனர். ரங்கராஜனுடன் அவரின் மனைவி ஜோதிமணியும், ரங்கராஜனின் தங்கை மகன் ராஜாவும் உடன் வந்திருக்கின்றனர். கார் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வந்தபோது தீப்பிடித்து பற்றியெறிந்திருக்கிறது. சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். இச்சம்பவத்தில் காரிலிருந்த ரங்கராஜன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

‘ஓடும் காரில் இருந்து புகை வந்தது. இறங்கி என்னுடைய கணவரை மீட்பதற்குள் கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்ததில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்’ என மனைவி ஜோதிமணி கண்ணீருடன் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கின்றனர்.

காரில் கருகிய நிலையில் ரங்கராஜன்

இதில் சந்தேகமடைந்த போலீஸார் மேலும் துருவியெடுக்க, ‘என் கணவர் ரங்கராஜனுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து வந்தனர். இதில் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையே அவர் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்து படுகாயமடைய, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை கொடுத்தோம்.

இனி என்னால் நடக்க முடியாது. நான் இறந்துவிட்டால் கடன்காரர்கள் பிரச்னையும் இருக்காது. நான் போட்டிருக்கும் 3 கோடி இன்ஷூரன்ஸ் தொகையை வைத்து நீங்களாவது நிம்மதியாக இருங்கள் என என் கணவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அவருடைய விருப்பத்தின் பேரிலேயே அவரைக் கொல்ல முடிவு செய்தேன்.

கைதாகியுள்ள ஜோதிமணி - ராஜா

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி காரில் கிளம்பினோம். கார் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதைப் போன்று கீழே இறங்கி நோட்டமிட்டோம். சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து, தயாராக பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை காரில் ஊற்றி பற்ற வைத்தோம். கார் பற்றியெறியந்ததும் அழுது கூச்சல் போட்டு கண்ணீர் விட்டோம். சாலையில் வந்தவர்கள் தகவல் கொடுக்க, தீயணைப்புத்துறையினர் வந்து காரை அணைத்தனர். எதிர்பாராதவிதமாக இச்சம்பவம் நடந்ததைப்போல நாடகமாட நினைத்தோம். கடைசியில் சிக்கிக் கொண்டோம்’ என ஜோதிமணி போலீஸாரிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

அதனையடுத்து ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/wife-kills-husband-for-insurance-amount

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக