Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தேனி - திண்டுக்கல் - புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ஆண்டிப்பட்டி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் போட்டியிட்ட இத்தொகுதியில், 2019 இடைத்தேர்தல்போலவே அண்ணன், தம்பிகளான தி.மு.க-வின் மகாராஜனும் அ.தி.மு.க-வின் லோகிராஜனும் போட்டியிடுகிறார்கள். பணத்தைக் கூடுதலாகச் செலவு செய்தாவது தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகிராஜன். எளிமையாகப் பழகும் குணம்கொண்ட மகாராஜனுக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. அ.ம.மு.க-வின் ஜெயக்குமார், அ.தி.மு.க வாக்குகளைக் கணிசமாகப் பிரிப்பதை சாதகமாக்கிக்கொண்டு, தி.மு.க முந்துகிறது.

பெரியகுளம் (தனி)

கடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க-வின் சரவணக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டுள்ள முருகன், தொகுதி மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அறிமுகமில்லாத நபராக இருக்கிறார். சரவணக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது கட்சி நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்தாலும், பிரசார வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கின்றன. அ.ம.மு.க-வின் கதிர்காமு, அ.தி.மு.க-வின் வாக்குவங்கியைப் பிரிக்கிறார். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூக மக்கள், தேனி நகரப்பகுதி மக்கள் வாக்குகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், சரவணக்குமார் முந்துகிறார்.

போடிநாயக்கனூர்

அ.தி.மு.க-வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வனும் மோதுகிறார்கள். அ.ம.மு.க வேட்பாளர் முத்துச்சாமி, அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிக்கிறார். பிள்ளைமார், பிரமலைக்கள்ளர் சமூக வாக்குகளும் பன்னீருக்கு எதிராக இருக்கின்றன. இவையெல்லாம் தங்க தமிழ்ச்செல்வனுக்குச் சாதகமாக இருந்தாலும், பன்னீர் தரப்பிலிருந்து கடைசிநேரத்தில் களமிறக்கப்படும் வைட்டமின் ‘ப’, தொகுதியை அவருக்குச் சாதகமாக்கிவிடும் என்கிறது கள நிலவரம். அதனால், போடியில் மீண்டும் இரட்டை இலையே துளிர்க்கிறது.

கம்பம்

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகானும், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணனும் மோதுகிறார்கள். இஸ்லாமியர்கள், பிரமலைக்கள்ளர், பிள்ளைமார் சமூக வாக்குகள் தி.மு.க-வுக்கு சாதகமாக உள்ளன. ஒக்கலிக்க கவுடர் சமுதாய வாக்குகளை அ.தி.மு.க குறிவைத்தாலும், அவையும் ராமகிருஷ்ணனுக்கே சாதகமாக உள்ளன. இஸ்லாமிய வாக்குகளைக் கவர சையதுகான் நிறுத்தப்பட்டாலும், பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், சையதுகானின் பிரசாரம் எடுபடவில்லை. தி.மு.க-வுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது.

பழநி

அ.தி.மு.க-வில் ரவி மனோகரனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமாரும் மோதுகிறார்கள். செந்தில்குமார், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் என்பதால், தொகுதியிலுள்ள ஒட்டுமொத்த தி.மு.க-வினரும் அவருக்காக இறங்கி வேலை செய்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.எல்.ஏ-வாக இருந்த குப்புசாமியின் மகன்தான் ரவி மனோகரன் என்றாலும், தொகுதியில் அவருக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. தொகுதியில் பெரிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பது மைனஸாக இருந்தாலும், தொகுதியில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் கைகொடுப்பதால், ரேஸில் முந்துகிறார் செந்தில்குமார்.

ஒட்டன்சத்திரம்

அ.தி.மு.க-வில் நடராஜும், தி.மு.க-வில் 1996-லிருந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுவரும் சக்கரபாணியும் மோதுகிறார்கள். கொங்கு வேளாளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி இது. வேட்பாளர்கள் இருவருமே அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சமபலத்துடன் மோதுகிறார்கள். தொகுதிக்குள் பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுவது சக்கரபாணிக்கு மைனஸ். ஆனால், இந்த ஒரு விஷயம் மட்டுமே நடராஜுக்கு ப்ளஸ். பூத்வாரியாக அனைத்துத் தேர்தல் பணிகளையும் சரியாகச் செய்துவைத்திருப்பதால், ஒட்டன்சத்திரத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறார் சக்கரபாணி.

ஆத்தூர்

பா.ம.க-வின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவும், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும் மோதுகிறார்கள். ‘ஐ.பெரியசாமியின் கோட்டை’ என்றழைக்கப்படும் இங்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்று, தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் பெரியசாமி. குடகனாறு பிரச்னை சில பகுதிகளில் இவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக தொகுதியில் செல்வாக்குடன் வலம்வருகிறார் பெரியசாமி. கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க இங்கு களப்பணிகளை மேற்கொள்ளாதது, திலகபாமாவுக்கு மைனஸ். அதனால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆத்தூரைத் தக்கவைக்கிறார் ஐ.பெரியசாமி.

நிலக்கோட்டை (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தேன்மொழியும், தி.மு.க கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜனும் போட்டியிடுகிறார்கள். தேன்மொழி தொகுதியில் அதிக செல்வாக்குடன் வலம்வருகிறார். வேலை செய்யக்கூட ஆட்கள் இல்லாமல் திணறுவதும், தி.மு.க-வினர் ஒதுங்கியிருப்பதும் முருகவேல்ராஜனுக்கு மைனஸ். நிலக்கோட்டையைத் தக்கவைக்கிறார் தேன்மொழி.

நத்தம்

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலமும் போட்டியிடுகின்றனர். தொகுதிக்குள் இருக்கும் செல்வாக்கு, பணபலம், சொந்தக் கட்சியினரின் ஆதரவு ஆகியவை விஸ்வநாதனுக்கு ப்ளஸ். எளிமையான வேட்பாளர் என்ற பெயர் இருந்தாலும், தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் ஆண்டி அம்பலத்துக்கு மைனஸ். நத்தம் விஸ்வநாதனே முந்துகிறார்.

திண்டுக்கல்

அ.தி.மு.க-வில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், சி.பி.எம் கட்சியில் பாண்டியும் மோதுகிறார்கள். அரசியலில் சீனியர் என்ற செல்வாக்கு சீனிவாசனுக்கு ப்ளஸ். எளிமையான தோற்றம் மற்றும் அணுகுமுறை பாண்டிக்கு ப்ளஸ். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருந்த தி.மு.க-வினர் சிலர் தேர்தல் பணிகளில் ஒதுங்கியிருப்பது பாண்டிக்கு மைனஸ். திண்டுக்கல் ஒன்றியத்தில் அ.தி.மு.க-வினர் செய்திருக்கும் களப்பணிகள் சீனிவாசனுக்கு ஓரளவு கைகொடுக்கின்றன. ஆனாலும், நிலைமை இழுபறியே!

வேடச்சந்தூர்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பரமசிவமும், தி.மு.க-வில் காந்திராஜனும் களத்தில் உள்ளனர். தொகுதிக்குச் செய்துள்ள பணிகளால் கிடைத்திருக்கும் நற்பெயர், பரமசிவத்துக்கு ப்ளஸ். தொகுதியிலுள்ள நல்ல செல்வாக்கும், தி.மு.க-வினரின் ஒத்துழைப்பும் காந்திராஜனுக்கு ப்ளஸ். இருவருமே இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ள ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இம்முறை தனக்கு வாய்ப்பளிக்குமாறு ஒக்கலிகர் சமூகப் பிரதிநிதிகளிடம் உருக்கமாகப் பேசிவருகிறார் காந்திராஜன். இந்த வேண்டுகோள் எடுபட்டிருப்பதாலும், அ.ம.மு.க பிரிக்கும் அ.தி.மு.க ஓட்டுகளாலும் களத்தில் முந்துகிறார் காந்திராஜன்.

கந்தர்வகோட்டை (தனி)

அ.தி.மு.க-வில் ஜெயபாரதி, சி.பி.எம் கட்சியில் எம்.சின்னதுரை, அ.ம.மு.க-வில் பி.லெனின் போட்டியிடுகிறார்கள். தீத்தானிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ஜெயபாரதிக்குத் தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லை. அவருக்காக, சொந்தக் கட்சி நிர்வாகிகளும் சரியாகப் பிரசாரம் செய்யவில்லை. லெனினும் கணிசமான அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிக்கிறார். இவையெல்லாம் அ.தி.மு.க-வுக்கு மைனஸ். எளிமையான வேட்பாளராக வலம்வரும் சின்னதுரைக்கு நல்ல பெயருடன், கூட்டணிக் கட்சியின் பலமும் இருப்பதால் ரேஸில் முந்துகிறது சி.பி.எம்.

விராலிமலை

அ.தி.மு.க-வில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தி.மு.க-வில் எம்.பழனியப்பன் மோதுகிறார்கள். விஜயபாஸ்கருக்கு கடந்த தேர்தலில் பழனியப்பன் கடும் நெருக்கடியைக் கொடுத்தார். அதே நம்பிக்கை அவருக்கு இப்போதும் இருக்கிறது. கடந்த இருமுறையும் பழனியப்பன் தோற்றதால், அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும். ஆனாலும், கடந்த சில மாதங்களாகவே தொகுதிக்குள் ஏராளமான இலவசங்களை வழங்கியிருப்பது, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திருப்பது விஜயபாஸ்கருக்கு ப்ளஸ். அ.ம.மு.க வேட்பாளர் கார்த்திக் பிரபாகரன் ஓரளவுக்கு அ.தி.மு.க வாக்குகளைப் பிரிக்கிறார். முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமியும் சுயேச்சையாக மோதுகிறார். கடுமையான போட்டி நிலவினாலும் விஜயபாஸ்கரே முந்துகிறார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க-வில் மன்னர் குடும்பத்து வாரிசு கார்த்திக் தொண்டைமான், தி.மு.க-வில் டாக்டர் முத்துராஜா, தே.மு.தி.க-வில் சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்கள். முத்துராஜாவுக்கு தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லை என்பது மைனஸ். நகர்ப் பகுதியிலிருக்கும் கணிசமான இஸ்லாமியர்கள் வாக்குகள் அவருக்குக் கிடைப்பது ப்ளஸ். கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்திக் தொண்டைமான் தோல்வியடைந்ததால், அவருக்கான அனுதாபமும் அதிகரித்திருக்கிறது. தே.மு.தி.க ஓரளவுக்கு வாக்குகளைப் பிரித்தாலும்கூட கார்த்திக் தொண்டைமானே முந்துகிறார்.

திருமயம்

அ.தி.மு.க-வில் பி.கே.வைரமுத்து, தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி மோதுகிறார்கள். தற்போது வீட்டு வசதி வாரியத் தலைவராக இருக்கும் வைரமுத்து, ஏற்கெனவே எம்.எம்.ஏ-வாக இருந்தபோதும் தொகுதிக்குப் பெரிதாக வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை என்கிற அதிருப்தி இருக்கிறது. சுயேச்சையாகப் போட்டியிடும் பொன்னமராவதி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அழகு சுப்பையா, வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வக்குமார் இருவரும் தாங்கள் சார்ந்த முத்தரையர் ஓட்டுகளை கணிசமாகப் பிரிக்கிறார்கள். இத்துடன் அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகளும் வைரமுத்துவுக்குச் சேதாரத்தை ஏற்படுத்துவதால், ரகுபதியே முந்துகிறார்.

ஆலங்குடி

அ.தி.மு.க-வில் தர்ம.தங்கவேல், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மெய்யநாதன் மோதுகின்றனர். தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை என்றாலும், மக்களின் நல்லது கெட்டதுகளில் தலைகாட்டிவிடுவதால் மெய்யநாதன் மீது பெரிதாக அதிருப்தி இல்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத தர்ம.தங்கவேலுக்கு சீட் கொடுத்திருப்பதால் சொந்தக் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். கட்சி சீனியர்களும் அவருக்காகப் பிரசாரம் செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியும், அ.ம.மு.க-வும் கணிசமான அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பதால், மெய்யநாதனே முந்துகிறார்.

அறந்தாங்கி

அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகம், காங்கிரஸில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், அ.ம.மு.க-வில் சிவசண்முகம் ஆகியோர் மோதுகின்றனர். ராஜநாயகம் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி இருக்கிறது. உட்கட்சிப் பூசல்களும் அவருக்குக் குடைச்சலைக் கொடுக்கின்றன. அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவருக்காக வேலை செய்யவில்லை. அ.ம.மு.க பெறும் வாக்குகளும் அ.தி.மு.க-வுக்குச் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. எதிராளியின் இத்தனை பலவீனங்களுடன், தி.மு.க கூட்டணியின் பலமும் ‘கை’ கொடுப்பதால், ராமச்சந்திரனே முந்துகிறார்.



source https://www.vikatan.com/news/election/theni-dindigul-pudukottai-district-assembly-election-survey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக